மொத்தப் பக்கக்காட்சிகள்

11/29/2024

சாண்டோ சின்னப்பா தேவர் - எம்.ஜி.ஆர்.

 

நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரை குறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர்.

மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு.

யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர். விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்து, இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தயாரிப்பாளரின் கதை இது.

முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுப்படத்தையும் முடித்து விடும் தேவரின் வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது.

எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல, யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.

சாண்டோ சின்னப்பா தேவர் - யார்?

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பா தேவர்' என்ற பெயர் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.

'தேவர் ஃபிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர் என்று சொன்னால் அனைவரும் அறிவர்.

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்தார் ’மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்’. சுருக்கமாக, `எம். எம். ஏ. சின்னப்பா தேவர்` என்றழைக்கப்பட்ட சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுநர்.

நல்ல உடற்கட்டு உள்ளவர்.

நவீன உடலழகுக் கலையின் தந்தை என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய பாடிபில்டர் ’யூஜின் சாண்டோ’ மீது கொண்ட ஈர்ப்பால், அக்கால பயில்வான்கள் பலரையும் போல தனது பெயரோடு சாண்டோ எனும் அடைமொழியைச் சேர்த்து அழைக்கப்பட்டார்.

அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும், அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார்.

மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார்.

ஆனால் அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கும்.

சினிமாவில் நுழையும் முயற்சியும்

டூரிங்க் டாக்கிசில் சினிமா பார்ப்பது சின்னப்பாவுக்கு ருசிகரமான அனுபவம். கூலி வாங்கியதும் ஓடுகிற ஒரே இடம் அதுதான்.

மௌனப்படங்கள் மட்டுமே வெளியான காலகட்டம் அது.

வெளிநாட்டு சண்டைப்படங்கள் என்றால் தேவருக்கு அத்தனை இஷ்டம்.

மறுநாள் நண்பர்களுடன் சேர்ந்து அட்டைக்கத்தி வீசுவார், ஆக்ரோஷமாகப் பாய்ந்து குத்துவார், குதிரை ஏறிப் பறக்கும் சின்னப்பாவின் ஆசையில் ஆற்றங்கரைக் கழுதைகள் அல்லல்படும், கிணற்றில் நீர் இறைக்கும் தாம்புக் கயிறு சின்னப்பாவை மரத்துக்கு மரம் தாவும் டார்ஜனாக மாற்றுமாம்.

1931-ஆம் ஆண்டு சினிமா பேசத் தொடங்கியது.

ஒலியோடு கூடிய ஒளிச்சித்திரங்களில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை எனும் விளம்பரங்களோடு, பிரபல சினிமா நிறுவனங்களின் முகவரிகள், அக்கால பத்திரிகைகளில் வரத்தொடங்கின. உற்சாகமான சின்னப்பத்தேவர் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாரானார்.

பல சினிமா நிறுவனங்களுக்கு தனது புகைப்படத்துடன் வாய்ப்புக் கேட்டு கடிதம் எழுதினார்.

எதற்கும் பதில் வரவில்லை.

இரவு தெருக்கூத்துகளில் ஆடிப்பாடி ஆத்ம திருப்தியடைந்தார்.

அடிப்படை சங்கீதம், ராக பாவம் குறித்தெல்லாம் தெரியாவிட்டாலும், கேள்வி ஞானத்தில் சொற்களைச் சேர்த்து இஷ்டத்துக்குப் பாடுவார். அதற்கே கைத்தட்டல்கள் தொடர்ந்தன.

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன.

அதற்கு திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டனர்.

பிரபல ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பத்தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடிட்டராகப் பணியாற்றிய தன் உடன்பிறந்த தம்பி, எம்.ஏ.திருமுகத்தை அழைத்து தனது முதல் படத்தை இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் சின்னப்பா தேவர். மனோகரா திரைப்படத்தின் எடிட்டர் அவர்தான்.

ஆனால், கதை பிடிக்கவில்லை என்று சொல்லி தம்பி மறுத்துவிட, தயாரிப்பாளர் எஸ்.ஏ.நடராஜன் இயக்கத்தில் 1955ஆம் ஆண்டு தேவர் தயாரிப்பில் வெளியான `நல்ல தங்கை’ சுமாராகத்தான் ஓடியது.

ஆனாலும் அவர் துவண்டுவிடவில்லை.

அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கி, கதாநாயகனாக எம்.ஜி.ஆரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார்.

தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து படம் தயாரிக்க விருப்பமில்லாமல், புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க நினைத்தவருக்கு, தன் நிறுவனத்துக்கான பெயர் தேர்வில் சிக்கல் நீடித்தது.

தமிழ் சினிமா செழிப்பாக இருந்த அந்த காலகட்டத்தில் தினம் ஒரு சினிமா கம்பெனி உதயமாகின.

மருதமலை முருகன் ஃபில்ம்ஸ், ஸ்ரீ வள்ளி வேலன் கம்பைன்ஸ், சிவசுப்ரமணியன் மூவீஸ், செந்தில் ஆண்டவர் கிரியேஷன்ஸ், முத்துக்குமரன் பிக்சர்ஸ் என முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

செங்கோட்டை சிங்கம் படத்தில்தான் அறிமுகப்படுத்தினார்.

’’வெற்றி... வெற்றி... நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி...’’ என்று எஸ்.வி.சுப்பையா பேசுகிற முதல் காட்சியின் வசனத்தை வாய்விட்டுக் கூறினார்,

ஆரூர்தாஸ். ’’நிறுத்துப்பா... முதல் மூணு ஆட்டத்த நாம காட்டலியே’’ என்றார் தேவர்.’’அதனால எண்ணண்ணே... தயாரிப்பாளரா இது உங்களுக்கு நாலாவது படம், அதைத்தான் வெற்றி வெற்றி-ன்னு எழுதினேன்’’ என்று கூற தேவர் உருகிவிட்டார்.

ஆரூர்தாஸ் கூறியபடி, அந்தப்படமும் வெற்றிபெற, தனது ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன் வெற்றி... வெற்றி... என்று கத்தியபடியே ஓடி வருவதை ஓர் அம்சமாகவே நிலைநாட்டினார்.

ஒரு கட்டத்தில் மற்ற ஃபைனான்சியர்களை நாடிச் செல்ல மனமில்லாமல், குறைந்த செலவில் புதுமுகங்களை மட்டும் வைத்துப் படம் பண்ணலாமா, அல்லது மிருகங்களை அதிகளவில் பயன்படுத்திப் படம் பண்ணலாமா என்கிற யோசனையில் இருந்த தேவர், ’’எலிஃபேண்ட் பாய்’’ என்னும் ஆங்கிலப்படத்தை தமிழ்ப்படுத்த விரும்பினார்.

தனது லட்சியப் படமாகவும் அதனை அறிவித்தார்.

யானைகளை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பதை நிஜமாகவே படமாக்க எண்ணினார்.

முழுக்க முழுக்க காட்டு மிருகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

முதுமலை ஸ்ரீநிவாச எஸ்டேட்டில் யானைகளுக்காக பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி தவம் கிடந்தார். 1960ஆம் ஆண்டு தீபாவளிக்கு ’யானைப் பாகன்’ ரிலீசானது.

உண்மையில் தமிழ் சினிமாவில் புதுமையான முதல் முயற்சி அது என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் தீனதயாளன், அதே தினத்தில் வெளியான கைதி கண்ணாயிரம், கைராசி, மன்னாதி மன்னன் போன்ற படங்களின் முன் யாரும் யானைப்பாகனை கண்டுகொள்ளவில்லை என்றும், பத்திரிகைகள் கூட, தேவரின் டாக்குமெண்ட்ரி படம் என்று கிண்டல் செய்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்டு, திரையுலகை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது.

அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார்.

எம்.ஜி.ஆரை தேவர், முருகா அல்லது ஆண்டவரே என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, முதலாளி என்றும் அழைத்துக்கொள்வர் என, தீனதயாளன் எழுதியுள்ளார்.

எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். இதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.

முருகனின் தலங்களை அடிப்படையாகக்கொண்ட பாடல்களோடு ’தெய்வம்’ எனும் திரைப்பட்டத்தை தயாரித்து 1972ஆம் ஆண்டு வெளியிட்டார்.

கண்ணதாசன் வரிகளுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட். ’’மருதமலை மாமணியே’’ பாடல் இடம்பெற்றதும் இத்திரைப்பபடத்தில்தான். ரமணியம்மாள் குரலில் ’’குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’’, சீர்காழி கோவிந்தராஜனின் மற்றும் டி.எம்.எஸ் காந்தக் குரலில் ஒலித்த ‘’திருசெந்தூரின் கடலோரத்தில்’’ எனும் பாடல்களைக் கேட்போரெல்லாம், இன்னமும் சிலிர்த்துப் போவார்கள்.

நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வர வைத்ததும் தேவரின் சாதனைதான்.

ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போதே மறுநாள், அதாவது 1978 ஆம் செப்டம்பர் 8ஆம் நாள், மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார்.

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது.

தேவரின் மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள்.

தேவருக்குப்பின், மகன் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார்.

கமல், ரஜினி நடிப்பில் பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.

படையப்பா படத்திற்காக "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ. 1 ,00,00,001(ரூபாய் 1 கோடி மற்றும் ஒரு ரூபாய்) சம்பளமாக வழங்கப்பட்டது.

 

  • படையப்பா படத்திற்காக "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ. 1 ,00,00,001(ரூபாய் 1 கோடி மற்றும் ஒரு ரூபாய்) சம்பளமாக வழங்கப்பட்டது.article_image7
  • நடிப்பிற்காக அவர் வாங்கிய முதல் மற்றும் ஒரே ஒரு கோடி ரூபாய் சம்பளம் இந்த படத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1980 களுக்குப் பிறகு சிவாஜி கணேசன் அவர் நடித்த எந்த படத்திற்கும் தனக்கென சம்பளத்தை நிர்ணயிக்காமல் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் "உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எனக்கு கொடு" என்று கூறி விடுவாராம்.
  • உதாரணத்திற்கு அவர் விஜய்யுடன் நடித்த "ஒன்ஸ்மோர்" படத்திற்காக எஸ்.ஏ சந்திரசேகரிடம் ரூ.100 மட்டுமே முன்பணமாக பெற்றியிருக்கிறார்.
  • அதன் பின்னர் மொத்தமாக எஸ்.ஏ சந்திரசேகர் சிவாஜிக்கு 10 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
  • அதுமட்டுமின்றி 1992 ஆம் ஆண்டு "உலகநாயகன்" கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த "தேவர் மகன்" திரைப்படத்திற்காக 20 லட்சம் சம்பளமாக சிவாஜி பெற்றியிருக்கிறார்.
  • அந்த பணத்தை கூட படத்தின் வியாபாரம் முடித்த பிறகு வழங்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார்.
  • அதே போல் "படையப்பா" திரைப்படத்திலும் தயாரிப்பாளர் தேனப்பனிடம் மற்றவர்களிடம் சொன்னதை போலவே சம்பளத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.
  • இந்த படத்திற்காக 10 முதல் 20 லட்சம் சம்பளமாக தருவார்கள் என்றும் எதிர்பார்த்திருக்கிறார்.
  • இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை பார்த்ததும் அதனை 10 லட்சம் என்று முதலில் எண்ணி காசோலையை வாங்கி கொண்டு சென்று விட்டாராம்.
  • பிறகு தன் மகன் ராம்குமாரிடம் காசோலையை கொடுத்திருக்கிறார். அப்போது தான் அது ஒரு கோடிக்கான காசோலை என்ற விஷயம் தெரிய வந்திருக்கிறது.
  • சிவாஜியோ அதில் குறிப்பிடப்பட்ட தொகையான “1 கோடி” என்பதை பார்த்து தவறுதலாக ஒரு பூஜ்ஜியத்தை காசோலையில் சேர்த்து விட்டார்களோ என்று நினைத்து தயாரிப்பாளரிடம் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
  • அப்போது தான் சிவாஜியிடம் நடந்த விஷயத்தை கூறியிருக்கிறார் தயாரிப்பாளர்.
  • இந்த படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு 1 கோடி ரூபாய் தருமாறு தயாரிப்பாளரிடம் கூறியது "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் என்பது தெரிந்து ரஜினிகாந்துக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.

கூடுதல் தகவலாக இதேபோல் நடந்த இன்னொரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.

  • 2009 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த "ஆதவன்" படத்திற்காக சரோஜாதேவிக்கு 1 கோடி ரூபாய் வழக்குமாறு உதயநிதியிடம் நடிகர் சூர்யா சொல்லியிருக்கிறார்.
  • மேலும் அந்த பணத்தை தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.
  • ஆனால் உதயநிதியோ அதனை மறுத்து சூர்யாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் நடிகை சரோஜாதேவிக்கு 1 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்திருக்கிறார்.

நன்றி:கூகிள்(படங்கள்)

தனிமை மரணத்தை விட கொடுமையானது!

 

தனிமை மரணத்தை விட கொடுமையானது!

 

தினமும் ஒரு இளைஞன், அதிகாலை வேளையில் தினசரி பேப்பர் போடும் போது ஒரு வீட்டில் அதற்காக ஒரு போஸ்ட் பாக்ஸ் போல ஒரு பெட்டி காம்பவுண்ட் கேட்டில் இருக்கும். பேப்பர் போடும் பையனும் தினமும் அதிலேயே பேப்பர் போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

திடீரென ஒரு நாள் அந்த பெட்டியைக் காணவில்லை, காலிங் பெல்லை அழுத்தி பார்த்த போது ஒரு வயோதிகர். எண்பது வயதிருக்கும். மெதுவாக

பெரியவர் வந்து கதவை திறந்தார்

இளைஞனும் அவரிடம், "வாசலில் இருந்த பாக்ஸ் எங்கே ஐயா " என்று கேட்டான் .. பெரியவரோ, "தம்பி நான் தான் அந்த பெட்டியை நேற்று எடுத்து விட்டேன். நீ தினமும் என்னை அழைத்து பேப்பரை என் கையிலேயே கொடுத்து விடு" என்றார்.

இளைஞனோ ! "ஐயா அது உங்களுக்கும் நேரம் எடுத்து கொள்ளும், எனக்கும் நேரம் அதிகம் செலவாகும், காலையிலே பல இடங்களுக்கு சென்று பேப்பர் போடுவதால் அதில் எனக்கு நேரம் கூடுதலாக செலவாகும், ஆகவே நீங்கள் மறுபடியும் அந்த பெட்டியை இருந்த இடத்திலேயே வைத்தால்

நன்றாக இருக்கும்" என்றான்.

பெரியவரோ " தம்பி, பரவாயில்லை... நீ என்னை அழைத்து கையில் பேப்பர் கொடுத்து விட்டு போ வேண்டுமென்றால் நான் கூடுதலாக 500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் அதிகம் தருகின்றேன்" என்றார்.

இளைஞனுக்குஒன்றும் புரியவில்லை !

அவரிடமே காரணத்தைக் கேட்டான்.

அதற்கு பெரியவர், "தம்பி சமீபத்தில் என்னுடைய மனைவி காலமாகி விட்டாள்.

நான் தனியாவே இருக்கின்றேன். எனது பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். என் மனைவி நெடு நாட்களாக மரணபடுக்கையில் நோயாளியாகவே இருந்து இறந்து போனாள்.

நான் பெற்று வளர்த்த பிள்ளைகளெல்லாம் அவள் நோயாக இருந்தபோதே கொஞ்சம் கொஞ்சமாக போனில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். என் மனைவியின் மரணத்திற்கு கூட யாரும் வரவில்லை.

நான் கஷ்டப் பட்டு வளர்த்த பிள்ளைகளுக்கும் நான் பாரமாகி விட்டேன்.

நீயாவது தினமும் வந்து என்னை அழைத்து பேப்பர் தந்தால் நான் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றேன் என்று அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் புரியும் .

யாரெல்லாம் எனது நெருங்கிய சொந்த உறவுகள் என நினைத்தேனோ அவர்கள் எல்லாருமே துக்கம் விசாரித்ததோடு கடமைக்கு என வந்து போனார்கள்,

ஆனால் யாரெல்லாம் வரவேக்கூடாது என நினைத்தேனோ அந்த அக்கம் பக்கத்தினர் தான் என் மனைவியின் இறுதி சடங்கில் இறுதி அடக்கம் வரையில் எந்த பலனும் எதிர்பாராமல் இருந்து உதவினர், இப்போது நானும் வயோதிகன் என்பதால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட என்னோடு பாசத்தோடு ஸ்நேகம் வைத்து கொள்வதில்லை. காரணம், பணம் அந்தஸ்து உயர்ந்த நிலையில், நான் இருந்தபோது வலிய வந்து அன்பாக உறவு கொண்டாடிய அந்த நல்ல உள்ளங்களை மதிக்கத் தெரியாமல் தடுத்த என்னால் எந்த விதமான நன்மையும் வராது என்றும் தான் அவர்களும் என்னை தொடர்பு கொள்வதில்லை ...

ஒரு வேளை நீ பேப்பர் போட தினமும் என்னை அழைக்கும்போது, நான் வரவில்லை என்றால் நான் அன்று இறந்து விட்டேன் என தீர்மானித்து விடு...! உடனே அக்கம் பக்கம் , போலீஸை அழைத்து சொல்லி விடு...!

அப்புறம் தம்பி என்னுடைய பிள்ளைகளின் வாட்ஸ்அப் நம்பரும் தருகிறேன், ஒரு வேளை நான் இறக்கும் போது தயவு செய்து என் பிள்ளைகளுக்கு வாய்ஸ் ரெக்கார்ட் மூலம் என் மரண செய்தியை சொல்லி விடு" என்றார்.

இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞனுக்கு கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது, சொல்லிக் கொண்டிருந்த பெரியவருக்கும் குரல் தழுதழுத்தது.

இன்றைய நவீன உலகில் தனித்தீவாக உள்ள வீடுகளிலும் ஒவ்வொரு அப்பார்மெண்டிலும்

இந்த மாதிரி முதியோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்

சில முதியோர்கள் வாட்சப்பில்

தினமும் குட்மார்னிங் என்றும் வணக்கம் என்றும் அனுப்பும் போதெல்லாம், இந்த பெரிசுக்கு வேற வேலையில்லை, இது ஒரு தொல்லை தான் என்று நினைத்து பலரை நானே பிளாக் செய்துள்ளேன்.

பச்சை இலைகள் ஒன்றை மறந்து விட வேண்டாம் , நாமும் பழுத்த இலைகள் ஆகி மரத்திலிருந்து ஒரு நாள் உதிர்ந்து விடுவோம் என்று ...!!!

-படித்ததில் பிடித்தது.~மகிழாவின் பக்கம்.

திரு எம் கே ராதா - எம் ஜி ஆர் !

 

மூத்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, முதல்வர் எம் ஜி ஆர் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர் இப்போது பழம்பெறும் நடிகர் எம்.கே.ராதா அவர்கள் விருதுவாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி.

ராதாவுக்கும் மிக ஆதங்கம், முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பிய போது ஓர் அதிர்ச்சி. மேடையில் முதல்வரைக் காணவில்லை. குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி.

ராதா ஏதோ சொல்லமுயலும் போது அவரை தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது, "நான் ஆரம்ப காலத்தில் கஷ்டப்படும் போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தங்களை அவமதிக்கும் செயலாகும். தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும்" என்று சொன்னது தான் தாமதம்.

ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின. ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது?"

#மக்கள் திலகம் எம்ஜிஆர் தன் வாழ்நாளில் பொஞ மேடையில் இருவர் காலில் மட்டுமே விழுந்து வணங்கி இருக்கிறார் ஒருவர் பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் சாந்தாராம் மற்றொருவர் எம் கே ராதா . எம் கே ராதா அவர்களின் தந்தையார் எம் கந்தசாமி முதலியார் அவர்களின் நாடக கம்பெனியில் சிறுவர்களாக இருந்த போது மக்கள் திலகமும் பெரியவர் சக்ரபாணியும் வயிற்றுப் பசியை போக்கிக் கொள்வதற்காக நாடக கம்பெனியில் இணைந்து பணியாற்றி படிப்படியாக வளர்ந்து தனது முதல் படமான சதிலீலாவதி படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பை வாங்கித் தந்தவர் திரு எம் கே ராதா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வில் எவ்வளவு பெரிய உச்சத்திற்கு போனாலும் தான் கடந்து வந்த பாதை திரும்பிப் பார்ப்பது மக்கள் திலகத்தின் வழக்கம். மக்கள் திலகத்தின் நெஞ்சில நிறைந்த அண்ணன் எம் கே ராதா அவர்களின் நினைவு நாள் இன்று.

பாலச்சந்தர் நினைவு தினம். (23 டிசம்பர் 2014)

 

கொஞ்சம் எச்சரிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் பாலச்சந்தர்.

அவருக்கு எதிரே ஒரு பத்திரிகை நிருபர்.

இதுவரை அந்த நிருபர் கேட்ட கேள்விகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் தர்மசங்கடமானது.

இதற்கு பதில் சொன்னால்,

தான் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பது பாலச்சந்தருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து போயிற்று. அதனால்தான் அவர் கொஞ்சம் உஷார் ஆனார்.

அந்த நிருபர் கேட்ட கேள்வி இதுதான்.

“ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும்.

ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ?”

எடக்கு மடக்கான இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் கூறப் போகிறார், அதைத் தனது பத்திரிகையில் எப்படி தலைப்பு வைத்து வெளியிடலாம், எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தலாம் என ஆவலோடும் பரபரப்போடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த பத்திரிகை நிருபர்.

ஆனால் இதற்கு பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

"நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார்.

ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.

அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.

அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

அதைத்தான் நான் பார்க்கிறேன்.”

இப்படி ஒரு பக்குவமான பதிலை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த பத்திரிகை நிருபர், பணிவோடு எழுந்து பாலச்சந்தரை வணங்கி விட்டு புறப்பட்டுப் போனார்.

பாலச்சந்தர் நினைத்திருந்தால்

அந்த நிருபரின் கேள்விக்கு என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். அதற்கான முழு உரிமையும், தகுதியும் அவருக்கு இருக்கிறது.

ஆனால் தனக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய இமேஜ் கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கிறது. அந்த இமேஜ் கெடுவதற்கு, தான் பேசும் வார்த்தைகள் காரணமாகி விடக்கூடாது.

தான் பேசும் எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு மனிதரையும் காயப்படுத்தி விடக்கூடாது, எவர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாலச்சந்தர்.

பாலச்சந்தர் தன் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு புரிய வைக்கிறது.

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.”

இன்று பாலச்சந்தர்

நினைவு தினம்.

(23 டிசம்பர் 2014)