மரண படுக்கையில் கண்ணதாசன்... பார்க்க முடியாத எம்.எஸ்.வி : எம்.ஜி.ஆர் கொடுத்த யோசனை
தமிழ் சினிமாவில் எண்ணில் அடங்காத பல தத்துவ பாடல்களையும், கட்டுரைகளையும் கொடுத்துள்ள கண்ணதாசன், சினிமாவை தாண்டி இசையமைப்பாளர் எம.எஸ்.விஸ்வநாதனுடன் நெருக்கம் காட்டி வந்துள்ளார். ஒரு இசையமைப்பாளர் - கவிஞர் என்பதை தாண்டி எம்.எஸ்.வி இல்லை என்றால் கண்ணதாசன் இல்லை என்பது போல் இருந்தார். இதே நிலையில் தான் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியும் கண்ணதாசனோடு நெருக்கம் காட்டி வந்தார்.
அதேபோல் கண்ணதாசன் ஒவ்வொருமுறை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும்போது மற்றக்காமல் அவருடன் எம்.எஸ்.வி செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை கண்ணதாசன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட கண்ணதாசன் எம்.எஸ்.வியை அழைத்தார். அப்போது செந்த படம் எடுத்து தோல்வியை சந்தித்ததால் மன உளைச்சலில் இருந்த எம்.எஸ்.வி கண்ணதாசனின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
அதன்பிறகு கண்ணதாசன் முதல்முறையாக எம்.எஸ்.வி இல்லாமல் அமெரிக்கா சென்ற நிலையில், அங்கு சென்றவுடன் முதலில் எம்.எஸ்.விக்கு போன் செய்துள்ளார். டேய் விசு எப்போதும் நாம் இருவரும் ஒன்றாகத்தான் இங்கு வருவோம். ஆனால் இப்போது நீ இல்லை என்பதால் இங்கு எல்லோரும் உன்னை கேட்கிறார்கள். நீ இப்போ கூட சரி என்று சொல் விசா பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டி இருந்ததால் கண்ணதாசனிடம் சொல்லி புரிய வைத்தார்.
அதன் பிறகு கண்ணதாசன் சில நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையில், ஒருநாள் மாலையில், ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்ற இருந்தார். அந்த நாள் காலையில் அவருக்கு நுரையீரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு பாதிப்பு இருப்பதை மருத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த கண்ணதாசன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அதன்பிறகு தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையின் போது அவருக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கண்ணதாசன் செயல் இழந்துவிட்டார். இந்த செய்தி தமிழகத்தில் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த செய்தி கிடைத்தவுடன் கண்ணதாசன் மனைவி மற்றும் மகன் உடனடியாக அமெரிக்காவுக்கு விரைந்தனர். உடல்நிலை சீராகவும் மோசமாகவும் என மாறி மாறி இருந்தாலும், டேய் விசு இந்த டியூன் வேண்டாம் வேற டியூன் போடு, இந்த டியூனுக்கு நான் பாட்டு எழுதுறேன் என்று கண்ணதாசன் எம்.எஸ்.வி பற்றி உளறியபடியே இருந்துள்ளார்.
இதன் காரணமாக எம்.எஸ்.வி அமெரிக்கா சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தால் கண்ணதாசன் உடல்நிலை தேறிவிடும் என்று நினைத்து அவரை அமெரிக்காவுக்கு செல்லுமாறு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். ஆனால் இந்த நிலையில், தன்னால் அங்கு செல்ல முடியாது என்று எம்.எஸ்.வி சொல்லிவிட, அதற்கு ஒரு புது யோசனை கொடுத்த எம்.ஜி.ஆர் எம்.எஸ்.வி கண்ண தாசனுடன் பேசுவது போன்ற ஒரு கேசட் தயார் செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் இந்த பேச்சை கேட்பதற்குள் கண்ண தாசன் உயிர் பிரிந்துவிட்டது. அதன்பிறகு அவரை சென்னைக்கு கொண்டு வந்து முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கண்ணதாசனின் கடைசி ஊர்வலத்தில் அவரது முகத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாகனத்தின் மீது ஏறிய முதல்வர் எம்.ஜி.ஆர், அவரது முகம் அனைவருக்கும் தெரியும்படி செய்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் வாகனத்தின் முன்னே செல்ல, அவரை பின் தொடர்ந்து அமைச்சர்கள் செல்ல கண்ணதாசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.