மொத்தப் பக்கக்காட்சிகள்

11/29/2024

எம்ஜிஆர் & நாகேஷ்…

 

 

எம்ஜிஆர் & நாகேஷ்….

தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர் களை கண்டிருந்தாலும் என்றும் உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.

நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலைமைதாங்க நம்ம வாத்தியார் வந்திருந்தார். நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில காட்சி களில் தோன்றியிருப்பார் அந்த குண்டுராவ் @ நாகேஷ். அதில் தனது கதாபாத்திரமான வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்துவிட்டார்.

நம்ம வாத்தியாரு நாகேஷ் தோன்றும் காட்சி களிலெல்லாம் சிரிச்சு சிரிச்சு ஓய்ந்தே போயிட்டாருன்னா பாருங்களேன்.

அப்புறம் நாகேஷை மேடைக்கு அழைத்து

ஒரு கோப்பை வழங்கினார் வாத்தியார்.

அப்ப நாகேஷ் நம்ம வாத்தியரப் பாத்து கேட்டாரே ஒரு கேள்வி...

“அண்ணே எல்லார் முன்னாடியும் கோப்பை குடுக்குறீங்க, அப்புறமா புடுங்கிற மாட்டீங்களே, ஏன்னா நான் அவ்வளவா ஒண்ணும் நடிக்கல!” ன்னாரு.

அதைக் கேட்ட வாத்தியாருக்கு சிரிப்பு தாங்கல... "நீ தாம்பா உண்மையான காமெடியன்" னு மனசார வாழ்த்தினாரு.

தமிழகத்திற்கு நாகேஷ் எனும் சிறந்த கலைஞனை அடையாளம் காட்டினார் நம்ம வாத்தியாரு......

'ஆண் பாவம்' படத்தின் வெற்றி விழாவில் அந்த வழக்கத்தை மாற்றினார் பாண்டியராஜன்!

 

சந்தோஷமாக இருந்தது பாண்டியராஜனுக்கு !

அவர் டைரக்ட் செய்த முதல் படம் 'கன்னி ராசி' சக்ஸஸ் ஆக ஓடிக் கொண்டிருந்தது.

(1985)

அவரை இயக்குனராக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். பல வருட கனவு பலித்து விட்டது.

அடுத்த சில மாதங்களில்...

மீண்டும் சந்தோஷமாக இருந்தது பாண்டியராஜனுக்கு !

அவர் கதாநாயகனாக நடித்த 'ஆண்பாவம்' சூப்பர் ஹிட்.

"நீ ஏன்யா ஹீரோவா நடிக்கிறே?" என்று வெறுப்பேற்றிய விநியோகஸ்தர்கள் முன்னால் வெற்றி பெற்றுக் காட்டி விட்டார். வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் அது.

ஆனால் இதை விடப் பெரிய சந்தோஷத்தை அடைய ஆசைப்பட்டார் பாண்டியராஜன்.

பொதுவாக திரைப் படங்களின் வெற்றி விழாக்களில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர் , நடிக நடிகைகள்... இப்படி முக்கியமான கலைஞர்களுக்கு மட்டுமே ஷீல்ட் கொடுப்பது வழக்கம்.

ஆனால் 'ஆண் பாவம்' படத்தின் வெற்றி விழாவில் அந்த வழக்கத்தை மாற்றினார் பாண்டியராஜன்.

அந்தப் படத்தின் "காதல் கசக்குதய்யா" பாடல் காட்சியில் பாண்டியராஜன் நடனம் ஆடியிருப்பார். அவர் கூடவே சேர்ந்து பெயர் தெரியாத சில குரூப் டான்ஸர்களும் ஆடியிருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் ஞாபகத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன்.

அத்தனை குரூப் டான்ஸர்களையும் 'ஆண் பாவம்' வெற்றி விழா மேடைக்கு வரவழைத்து, தனித் தனியாக ஷீல்ட் கொடுத்துக் கௌரவித்தார் பாண்டியராஜன்.

அசந்து போனார்கள் அந்த குரூப் டான்ஸர்கள்.

அவர்கள் வாழ்வில் இதுவரை பார்க்காத பாக்கியம்,

கிடைக்காத கௌரவம் இது.

அந்த நெகிழ்வான நிகழ்ச்சியை பாண்டியராஜனே நேரிலே சொல்லக் கேட்டேன் : "எனக்கு தெரியல ஜான் பிரதர், எனக்கு முன்னாலே யாராவது இப்படி குரூப் டான்ஸர்களுக்கு ஷீல்ட் கொடுத்தாங்களான்னு தெரியல. அதுக்குப் பிறகு செய்றாங்களா, அதுவும் தெரியல. ஆனா அன்னைக்கு என் மனசுக்கு கொடுக்கணும்னு தோணுச்சு. கொடுத்தேன். அவ்வளவுதான்."

தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஷீல்டுகளை பார்த்துப் பார்த்து பரவசம் அடைந்தார்களாம் குரூப் டான்ஸர்கள்.

"விழா முடிஞ்சது ஜான் சார் , ஃபங்ஷனுக்கு குடும்பத்தோடு வந்த குரூப் டான்ஸர்கள் கொண்டாட்டத்தோடு ஷீல்டை வீட்டுக்கு கொண்டு போனாங்க. அவங்க குடும்பத்து குழந்தைங்க ஏதோ பிள்ளையார் சிலையை தூக்கிட்டு போற மாதிரி, தலையில வச்சு அந்த ஷீல்டை வீட்டுக்கு தூக்கிட்டு போறாங்க. அந்த ஃபேமிலில உள்ளவங்க எல்லோர் முகத்திலும் ஏகப்பட்ட சந்தோஷம். ஏன்னா அவங்க வாழ்க்கையில முதல் முதலா வாங்கற ஷீல்ட் அது."

நான் பாண்டியராஜன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களில் ஈரம் மின்ன பாண்டியராஜன் சொன்னார் : "சினிமாவில ஜெயிச்சு நான் முதல் முதல்ல ஷீல்ட் வாங்கறப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா ஜான் சார் ? அதே சந்தோஷத்தை அன்னைக்கு ஷீல்ட் வாங்கின அந்த குரூப் டான்ஸர்ங்க எல்லோருடைய முகத்திலயும் பார்த்தேன். என் வாழ்க்கையின் சந்தோஷங்களிலேயே மிகப் பெரிய சந்தோஷம் அன்னைக்குத்தான் எனக்கு கிடைச்சது."

கண்களை துடைத்துக் கொண்டார் பாண்டியராஜன்.

இப்படிப்பட்ட ஈர இதயம் உள்ள பாண்டியராஜன் அவர்களின் நட்பு வட்டத்தில் நான் இருப்பது, உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறது எனக்கு !

பாண்டியராஜன் குருவான கே.பாக்கியராஜ் அடிக்கடி சொல்வது என் நினைவுக்கு வந்தது :

"சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம், அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான்."

நல்லது.

(அக்டோபர் 2) பாண்டியராஜன் அவர்களின் பிறந்த தினம்.

வழக்கம்போல வாட்சாப்பில் வாழ்த்து சொல்லி விட்டேன்.

ஃபேஸ்புக் நண்பர்கள் சார்பாக இப்பொழுது வாழ்த்து சொல்கிறேன்.

வாழ்க வாழ்க..!

John Durai Asir Chelliah

மூர்த்தி சிறிது! கீர்த்தி பெரிது என்பது இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது. நல்ல மனம் வாழ்க!

நாகேஷ் !

 

🌹இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டவர் ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்! நாகேஷ்!

🌹முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

🌹ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்

தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

🌹 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர்.

🌹'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர்.

🌹கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

🌹எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

🌹திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்

🌹நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' என்று வெளுத்துக்கட்டியவர்!

🌹பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார்,

கோழி இன்னும் சாகலையாப்பா?

'தமாஷாக கேட்டார்

🌹இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

🌹30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

ஸ்ரீநிவாஸ்..

பிரஷாந்த்...

மணிவண்ணன் - அகத்தியன் !

 

பல ஆண்டுகளுக்கு முன்,

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி சம்பந்தமாக, மணிவண்ணன் அவர்களை ஓரிருமுறை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கிறேன்.

அது அவர் நடிகராக உச்சத்தில் இருந்த நேரம். ஆனாலும் எந்தவிதமான பந்தாவும் இன்றி பண்போடும் பக்குவத்தோடும் பரிவோடும் வரவேற்று உபசரித்தார்.

அப்போதே மணிவண்ணன் மீது எனக்கு பிரமிப்பு கலந்த ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. அந்த மரியாதை இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது.

அதற்கு காரணம், சமீபத்தில்

நான் பார்த்த ஒரு வீடியோ.

மணிவண்ணன் சம்பந்தமான ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் அகத்தியன் பேசியது.

அதன் சாராம்சம், இதோ:

அகத்தியன் சினிமாவில் புகழ் பெறுவதற்கு முன், அவர் எழுதிய ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை இயக்குவது சம்பந்தமாக மணிவண்ணனை நேரில் போய் சந்தித்திருக்கிறார்.

ஒரு சில தொடர் சந்திப்புகளுக்கு பின்

ஒரு சிறிய இடைவெளி.

அந்த நேரத்தில் ஊரிலிருந்த அகத்தியனின் தந்தை காலமாகி விட்டார். ஊருக்கு போக அகத்தியன் கையில் காசு இல்லை. தெரிந்த நண்பர்களிடம் 100, 200 என கடன் வாங்கி, இறுதிச் சடங்குக்கு போய்விட்டு, மீண்டும் சென்னைக்கு வந்த அகத்தியனுக்கு அடுத்து ஒரு சிக்கல்.

மறுபடி ஊருக்குப் போய்

அப்பாவுக்கு 16வது நாள் காரியம் செய்ய வேண்டும். அதற்கு 1500 ரூபாய் பணம் வேண்டும். ஆனால் அகத்தியன் கையில் அப்போது பத்து ரூபாய் கூட இல்லை.

என்ன செய்வது என்று தவித்துப் போனார் அகத்தியன்.

யார் யாரையோ போய்ப்பார்த்தார் எங்கெங்கேயோ முயற்சி செய்தார்.

நீண்ட நேர சிந்தனைக்கு பின்

மணிவண்ணனை தேடிப் போனார் அகத்தியன்.

விஷயத்தைச் சொன்னார்.

மணிவண்ணன் அமைதியாக அமர்ந்து அகத்தியன் சொல்வதைக் கேட்டு கொண்டிருந்தார்.

"இப்போ நான் என்ன செய்யணும் அகத்தியன் ?"

அகத்தியன் தயங்கியபடியே, "வேற ஒண்ணும் இல்ல சார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் உங்களிடம் ஒரு கதை சொன்னேன் அல்லவா ?"

"ஆமாம்."

"அந்தக் கதையின் முழு உரிமையையும் நான் உங்களுக்கு எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதிலாக எனக்கு 1500 ரூபாய் கொடுத்து உதவுங்கள், ப்ளீஸ்..."

ஒரு சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்தார் மணிவண்ணன்.

அகத்தியன் கைகளை பிசைந்தபடியே கலக்கத்தோடு காத்திருந்தார்.

"இங்கே பாருங்க அகத்தியன்..."

நிமிர்ந்து பார்த்தார்.

"எந்த காரணம் கொண்டும் உங்கள் கதையை, என்னிடமோ வேறு எவரிடமோ கொடுத்து விடாதீர்கள். சினிமா உலகில் எப்போது என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் ? ஒருவேளை அந்தக் கதையின் மூலம் நாளையே உங்கள் வாழ்க்கை அடியோடு மாறலாம். அதனால்...

ஒரு நிமிஷம் இருங்க அகத்தியன், வந்து விடுகிறேன்."

மணிவண்ணன் தன்னுடைய அறைக்குள் போய்விட்டு திரும்பி வந்தார். "இந்தாங்க அகத்தியன். இதில் நீங்கள் கேட்ட 1500 ரூபாய் இருக்கிறது.

ஊருக்கு போய் அப்பாவின் காரியங்களை முடித்துவிட்டு வாருங்கள்."

அகத்தியன் தயக்கத்துடன், "சார் இந்த பணத்தை, நான் உங்களுக்கு..."

"போய் நடக்க வேண்டிய விஷயங்களை பாருங்கள் அகத்தியன்."

நன்றிப் பெருக்குடன் மணிவண்ணன் வீட்டை விட்டு வெளியே வந்தார் அகத்தியன். ஊருக்கு போய் காரியங்களை நல்லபடியாக முடித்துவிட்டு வந்தார்.

சில வருடங்கள் கழித்து... மணிவண்ணன் சொன்னது போலவே காலம் மாறியது. அகத்தியனைத் தேடி அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

அகத்தியன் இயக்கிய ஆறு படங்களில் தொடர்ந்து நடித்தார் மணிவண்ணன்.

ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் அகத்தியனை அருகில் அழைத்தார் மணிவண்ணன்.

"ஒரு வேடிக்கையை பார்த்தீர்களா அகத்தியன்..?"

"என்ன சார் ?"

"உங்களுடைய ஆறு படங்களில் தொடர்ந்து வாய்ப்பு

கொடுத்திருக்கிறீர்களே, இதன் மூலம் இதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா ?"

அமைதியாக மணிவண்ணன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அகத்தியன்.

"75 லட்சம் ரூபாய்.

அன்றைக்கு அவசரத்துக்கு உங்களுக்கு நான் கொடுத்தது வெறும் 1500 ரூபாய்.

எதையும் எதிர்பார்த்து நான் உங்களுக்கு அதை கொடுக்கவில்லை.

ஆனால் காலம் எப்படியெல்லாம் அதை கவனித்துக் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா ?"

அகத்தியன் எதுவும் பேசத் தோன்றாமல் கண்களில் நீர் வழிய மணிவண்ணனின் கைகளை இறுகப் பற்றி கொண்டார்.

இந்த சம்பவத்தை சமீபத்தில் ஒரு மேடையில் அகத்தியன் சொல்லும்போது, ஏற்கனவே மணிவண்ணன் மீது எனக்கு இருந்த மரியாதை இன்னமும் பலப்பல மடங்கு உயர்ந்தது.

மாபெரும் மனித நேயம் கொண்ட மகத்தான மனம் படைத்தவர் மணிவண்ணன்.

அதே வேளையில்

பிரபஞ்ச சக்தியின் மீது கூட பிரமிப்பு அதிகமானது.

பலன் எதுவும் எதிர்பார்க்காமல் மணிவண்ணன் கொடுத்த பணம் 1500 ரூபாய், பல்லாயிரம் மடங்குகள் அதிகமாகி அவருக்கே திரும்ப வந்து சேர்ந்திருக்கிறது.

எதை இங்கு நாம் விதைக்கிறோமோ

அதை பல மடங்கு திரும்ப நமக்கு கொடுத்தே தீரும் இந்தப் பிரபஞ்சம்.

இது சத்தியமான உண்மை.!

ரஜினி - விஜயகாந்த் !

 

ரஜினி நடிச்சிருந்தா சரி வராது! விஜயகாந்துதுதான் கரெக்ட் மேச்.. என்ன படம் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மக்களை வென்ற கதாநாயகர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். ரஜினி, கமல், சிவாஜி போன்றோர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் மக்கள் மானசீகமாக நேசித்த கலைஞர்கள் ஒரு சிலர் பேர் மட்டுமே. அந்த வகையில் எம்ஜிஆர் மற்றும் அவருக்கு அடுத்த படியாக கேப்டன் விஜயகாந்த்.

இருவரின் இறப்பிற்கும் ஒட்டுமொத்த தமிழ் நாடே சோகத்தில் ஆழ்ந்தது. அதுவும் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு அவரை பற்றி தெரியாதவர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். பல ஊடகங்கள், பத்திரிக்கைகள் என விஜயகாந்தை பற்றி செய்திகளை புரட்ட ஆரம்பித்தனர்.

இப்படி ஒரு மனுஷனை விட்டு விட்டோமே என்றெல்லாம் கதறி அழுதனர். அந்தளவுக்கு மாபெரும் ஒரு மனிதனாக கலைஞனாக வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் விஜயகாந்த். ஒரு காலத்தில் ரஜினிக்கு செக்யூரிட்டியாக இருந்தவர் விஜயகாந்த். அதன் பின் படிப்படியாக வளர்ந்து கடைசியில் அந்த ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகராக உச்சம் பெற்றார்.

இந்த நிலையில் ரஜினி நடிக்க வேண்டிய பல படங்கள் விஜயகாந்தை தேடி சென்றிருக்கிறது. அதே போல் விஜயகாந்த் நடிக்க வேண்டிய படங்கள் ரஜினியை தேடி சென்றிருக்கிறது. அப்படித்தான் ரமணா திரைப்படமும்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம்தான் ரமணா. லஞ்சம் , ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். ஒரு சாதாரண கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் விஜயகாந்த் இந்தப் படத்தில் எப்போதும் உள்ள மானரிசத்தில் இருந்து சற்று வித்தியாசமாக நடித்திருப்பார்.

இதை பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு கூறுகையில் ‘முதலில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க வேண்டியதாம். ஆனால் ரஜினி நடித்திருந்தால் கண்டிப்பாக அவரின் ஹீரோயிசம்தான் வெளிப்படும். 

எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்டு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அதற்கு விஜயகாந்த் தான் பொறுத்தமாக இருப்பார்’ என எம்.எஸ்.பிரபு சொல்லி விஜயகாந்த் இந்த கதைக்குள் வந்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கல்லூரி மாணவர்களையும் கூட்டுவது என்பது எளிதல்ல. ஆனால் அப்படியும் காட்ட வேண்டும். அதை எப்படி காட்டினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? என்பதை அறிந்து அதற்கு விஜயகாந்த் மாதிரியான ஒரு ஆள் சொன்னால்தான் கேட்பார்கள் என்று நினைத்து இந்தப் படத்தை எடுத்தார்களாம்.