புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலைஞரின் வசனத்திலும் படங்களில் நடித்துள்ளார். மருதநாட்டு இளவரசி, புதுமைப்பித்தன், காஞ்சித்தலைவன், மந்திரி குமாரி, மலைக்கள்ளன் ஆகிய படங்களைச் சொல்லலாம். இவற்றில் மலைக்கள்ளன் படம் ஜனாதிபதி விருது வாங்கியது.
இதற்கு நன்றிக்கடனாக எம்ஜிஆரும் உதவி செய்துள்ளார் என்றே சொல்லலாம். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கே கஷ்டகாலம் வந்தபோது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் செய்த உதவி பேசுபொருளானது. வாங்க என்னன்னு பார்ப்போம்.
வெற்றி விழா
16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதி குடும்பத்தின் தயாரிப்பில் வெளியாகி நூறு நாட்கள் ஓடிய எங்கள் தங்கம் திரைப் படத்தின் வெற்றி விழா நடந்தது. இந்தக் கூட்டத்தில், கருணாநிதியும், முரசொலி மாறனும் பேசியது என்ன என்று பார்க்கலாமா…
கடன்
முரசொலி பத்திரிக்கை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதாலும், எங்கள் குடும்பம் தயாரித்த திரைப் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததாலும், எங்கள் குடும்பமே கடனாளிக் குடும்பமானது. வாங்கியக் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் கூட ஏற்பட்டது.
எங்கள் தங்கம்
இந்த நிலைமையை புரட்சி நடிகர் எம்ஜிஆரிடம் சொன்னேன். புரட்சி நடிகரும் , கலைச்செல்வி ஜெயலலிதாவும் இந்த ‘எங்கள் தங்கம்’ படத்தை பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர். நடித்துக் கொடுத்தது மட்டுமின்றி, இந்தப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கித் தந்தனர். இந்தப் படத்தின் மூலம் வந்த லாபத்தால், அடமானத்தில் இருந்த எங்கள் சொத்துக்களை மட்டுமின்றி, எங்களது மானத்தையும் மீட்டுத் தந்தனர். அவர்களுக்கு எங்கள் குடும்பம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது என்றார் முரசொலி மாறன்.
கொடுத்து கொடுத்து சிவந்த கரம்
அடுத்து கருணாநிதி இப்படி பேசினார். மாறன் பேசும் பொழுது, புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை இங்கே குறிப்பிட்டார். கொடுத்து கொடுத்துச் சிவந்தக் கரம் கர்ணன் என்று சொல்வார்கள். ஆனால் எங்கள் திராவிடக் கர்ணன் புரட்சி நடிகருக்கோ, கொடுத்து கொடுத்து மேனியே சிவந்து விட்டது.
கொடுத்து கொடுத்து சிவந்த கரம் உள்ள புரட்சி நடிகர் வாழ்கின்ற காரணத்தினால் தான் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என்று என பெயர் வந்தது. நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றியுணர்ச்சியை நானும் வழிமொழிகிறேன் என்றார்.
Live Tamil news