டி.எஸ். பாலையா
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண்.
அங்கே பிரபலமாக இருந்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.
அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.
எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
. ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.
‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.
பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது.
‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.
தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’
- நன்றி : தி இந்து , டி.எஸ்.பாலையாவின்
நூற்றாண்டு நினைவுப் பதிவு