மொத்தப் பக்கக்காட்சிகள்

9/28/2024

ஒரு பெண்ணின் திருமணம் !

 ஒரு பெண்ணின் திருமணம்!

 

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!

தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே..தங்கை..புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?" என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!

நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள்_பெண்களை.

#சுட்ட நாக்கு..

 #சுட்ட நாக்கு..

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.

மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர். குரு அவர்களைப் பார்த்து "உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார். மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.

ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.

வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.

குரு அவனைப் பார்த்து "நீயுமா?" என்று ஆச்சரியமாக கேட்டார்.

சீடன் "நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன்" என்று சொன்னான்.

குரு "நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்" என்று கேட்டார்.

சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குரு "என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்..

சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது? மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறியீடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.

குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய்.. வாழ்த்துக்கள்" என்று சொன்னார்.

சீடன் "அடுத்த கேள்வி என்ன?" என்று கேட்டான்.

குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.

குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கோபமாக கேட்டார்.

சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.

சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார். நாக்கு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்.

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் !

 

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்து க்கொண்டு, தனது 87வயதான கணவரிடம் கூறினார்:

"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேரேஜ் லைட் அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் கேரேஜ் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".

முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கேரேஜ் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.

பெரியவர் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்தை ஃபோனில் அழைத்தார்: "ஹலோ......எனது முகவரியை எழுதிக் கொள்ளுங்கள். வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கிறோம். இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் எங்கள் கேரேஜ் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீஸ் குழுவை சீக்கிரம் அனுப்புங்கள்."

மறுபக்கத்திலிருந்து காவல் அதிகாரியின் குரல் வந்தது: "உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது காவலர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமுடன் தொடர்பு கொண்டவுடன், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்."

இதைக் கேட்டு, பெரியவர் ஏமாற்றம் அடைந்தார், ஆனால் மறுபுறம், கேரேஜின் பூட்டை உடைக்கும் பணியில் திருடர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பெரியவர் மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தார்: "அய்யா.....இப்போது யாரையும் அனுப்ப வேண்டியதில்லை. ஐந்து திருடர்களையும் சுட்டு விட்டேன்" என்று நிதானமாகக் கூறினார்.

போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்து நிமிடங்களில், ஒரு போலீஸ் குழு, ஒரு ஹெலிகாப்டர், ஒரு துணை மருத்துவர், மூன்று டாக்டர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன், முதியவரின் வீட்டை அடைந்தது.

ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் பெரியவரை அணுகி கேட்டார், "நீங்கள் அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொன்னீர்கள், ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்துள்ளோமே?"

முதியவர் பதிலளித்தார்: "நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் போலீஸ் டீம் எதுவும் இல்லை என்று".

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் !

வாழ்க்கை நெறி, முறைகள்!

 

திருமணம் என்பது வெறும் உறவு என்னும் ஒன்றிற்காக செய்யும் ஒரு சம்பிரதாயம் இல்லை.

அடுத்த தலைமுறையை உலகிற்குப் பரிசளித்து வாழ்க்கை நெறிகளையும், முறைகளையும், அறத்தையும் கற்றுக் கொடுத்து அதை இனி வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் அற்புதமான செயல்.

அது ஒரு பந்தம். பூமிக்கு மனித இனத்தைக் கொடையாக அளிக்கும் ஓர் புனித உடன்படிக்கைக்கு கீழான உறவு.

சும்மா ஒன்னும் முன்னோர்கள் சொல்லவில்லை

திருமணம் என்பது ஒரு ஆயிரங்காலத்துப் பயிர் என்று.

அந்தக் காதலை வெளிப்படுத்தும்

ஒரு உறவிற்கு பெயர் தான் திருமணம்.

இதற்கு அழகு தேவையா இல்லை.

தேவையே இல்லை.

உங்களுக்கு 80 வயதாகும் போது

உங்கள் துணைக்கு 75 வயதாவது ஆகும்.

கண்ணம் சுருங்கிவிடும்.

பல்லு னு ஒன்னு இருக்கவே இருக்காது.

பேரப் பிள்ளைகள் ஆளுக்கொரு

மூலையில் மொபைல் போனில்

உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

அருகில் இருக்கும் நீங்கள் உயிரற்றப்

பொருளாக கூட கணக்கிடப்படமாட்டீர்கள்.

ரேசன் கார்ட் மகன் பெயரில் இருக்கும்.

அதில் உங்கள் பெயர் இருப்பதற்கு

வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இன்னைக்கு வாய் நிறைய அரசியல்

பேசும் உங்களை, அகவை 80 இல்

ஓட்டு போட அழைத்துச்செல்லுதல்

ஒரு சுமை அதுக்கு ஆட்டோ பிடித்து

பூத்துக்கு தூக்கிட்டுப் போய்ட்டு

அய்யயய்யோ...

தொல்லைப் பிடித்த வேலை என்றெண்ணி

ஒருவரும் அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

குடும்பம் மொத்தம் ஓட்டு போட சென்றிருந்த வேலையில் ஒருத்தி நரைத்த முடியுடன்

கண்ணங்கள் சுருங்க,

என்னங்க, விடுங்க நம்ம புள்ளைங்க தான? நல்லா இருந்துட்டுப் போகட்டும். மனசுல எதையும் வச்சுக்காதீங்க.

இந்தாங்க இந்த வாழப்பழத்தை சாப்பிடுங்க.

என்று சொம்பில் தண்ணீருடன் நீட்டுவாள் பாருங்க...

அவளுக்கு பெயர் தான் மனைவி.

படுக்கையில் இருந்தாலும், ராசாத்தி ராசாத்தி என்றுக் கடைசி மூச்சிலும் அவளை மட்டுமே தேடுவானே அந்த உறவிற்கு பெயர் தான் கணவன்.

அம்மா இறந்தப் பிறகு ஜிமிக்கி எனக்கு, தாலி செயின் உனக்கு. அண்டா எனக்கு குண்டா உனக்கு என்றுப் பங்கு வைத்துக் கொள்ளும் சம்பிரதாயங்கள் நடக்கையில்,

ஒரு காய்ச்சல் தலை வலிக்கும் உட்காராத மனுஷன் ஒரு மூலையில் உட்கார்ந்து என்னை விட்டுட்டு போயிட்டியேம்மா இனி யாரும்மா இருக்கா எனக்கு என்று தலை மீது கை வைத்து....

உலகத்தையே மறந்து, என்னையும் உன் கூடயே கூட்டிட்டுப் போயிருக்க கூடாதா தாயி, இனி இந்த உசுரு இருந்தால் என்ன செத்தால் என்ன? என்றுத் தன்னையும் அறியாமல் வாழ்க்கையில் முதல் முதல் கண்ணீர் வடிப்பானே அது தான் காதல்.

வீட்டுக்கு வந்ததும் அவளைத் தான் தேடும்

அவன் கண்கள்.

பிறந்த வீட்டிற்கு அவள் பெற்றோரைப்

பார்த்து விட்டு வர அவளை அனுப்பி விட்டு

பத்து முறையேனும் பஸ் ஸ்டாண்டிற்கு

சென்று மாமனார் ஊரிலிருந்து வரும்

பேருந்து எப்பொழுது வரும் என்று

விடியலுக்காக காத்திருப்பானே அது காதல்.

வீட்டில் அம்மா இல்லை என்று

குழந்தைகள் தேடவில்லை என்றாலும்,

அம்மாவுக்கு ஒரு போனைப் போடு,

எங்க வந்துட்டு இருக்கா னு கேட்போம்

என்று இருபது முறையேனும் போன்

செய்து பேசி விட்டு,

இரண்டு நிமிடம் கழித்து

இருபத்தி ஓராவது முறை போன்

செய்ய சொல்லுகையில்,

ப்பா அம்மா வருவாப்பா,

ஏன்ப்பா காலில் சுடு தண்ணி ஊத்திகிட்டு

நிக்கிற என்று குழந்தைகளே திட்டும்

அளவிற்கு ஒருவன்

குழந்தைத்தனமாக நடந்துக் கொள்வானே

அகவை 50 இல் அதற்கு பெயர் காதல்.

அந்த தேடல் இருக்குப் பாருங்க அது மற்ற எந்த உறவிலும் இவ்வளவு இருக்காது.

எப்படா மனைவி அவங்க அம்மா

வீட்டுக்குப் போவா நண்பர்களுடன்

சுற்றுலா செல்லலாம் என்று

சுயநலமாக யோசிக்காது அந்தக் காதல்.

பக்கத்து தெரு ராமசாமி அண்ணன்

ஹாஸ்பிடலில் இருந்து டிஜ்சார் ஆகி

இன்னைக்கு தான் வீட்டுக்கு

வந்துருக்காங்களாம்,

வா ஒரு எட்டு

போய் பார்த்துட்டு வருவோம் என்று

எங்கே சென்றாலும் அவளை

இழுத்துச் செல்லும் பாருங்க

அது தான் அந்தப் பந்தத்தின் மகிமையே.

அழகும் வீண். சௌந்தரியமும்

வீண். எல்லாம் முப்பது முப்பத்தைந்து

வருசம் தான். அப்புறம் அவளுக்கு

நரைத்த முடி எட்டிப் பார்க்கும்,

உங்களுக்கு முடியே இருக்குமா

இருக்காதா என்பது சந்தேகம் தான்.

மனைவி என்பவள் வாழ்க்கை

துணைவியானவள் தவிர,

கண்ணுக்கு காட்சிப் பொருள் இல்லை.

இதை உணர்ந்துக் கொண்டால் போதும்.

யாரைத் திருமணம் செய்தாலும்

நிச்சயமாக அவர்களை அழகாகப்

பார்க்க முடியும்.

புற அழகு தான் அழகு என்று

நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியைக்

கழற்றி வைத்து விட்டுப் பாருங்கள்.

உலகம் மொத்தமும் அழகாகத் தெரியும்..

திருச்சிற்றம்பலம்

என்றென்றும் அன்புடன்

காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

 

காமராஜர் ஆட்சி காலத்து கிசுகிசு..

அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத் தான் இருக்கும். அதற்கு காரணம், ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்த திடீர் அனுமதி..

திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள்.

அதை பரிசீலனையில்

வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார்.

'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் போய் விட்டார். அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?'

அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.

"என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்" அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

காமராஜரே பேசினார்.

"அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே... அது ஏன் ?

இதுதானே உங்கள் சந்தேகம் ?" தொடர்ந்து காமராஜர் "திண்டுக்கல் நகரத்துக்கும், அந்த தொழிற்சாலை அமையப் போகும் இடத்துக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா ?"

அதிகாரிகள் பதில் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்க,

காமராஜர் "அறுபது கிராமங்கள். அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. ஏனெனில் திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையே ஏராளமான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை. எனவே அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்து இருக்கிறேன்."

அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தான் போட்ட திட்டத்தை விரிவாக விளக்கினார் காமராஜர். புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை

அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைக்கு சம்மதித்தால்,

தொழிற்சாலை தொடங்க உடனடியாக அனுமதி கொடுக்கப்படும். சம்மதித்தார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.

உடனடியாக அத்தனை மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அமைத்துக் கொடுத்து விட்டார்கள். இப்போது அந்த அறுபது கிராமங்களை ஒட்டியும் மின்கம்பங்கள்.

இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இனி நமது வேலை சுலபம். மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அந்த தொழிற்சாலை நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக நாம் விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும்.

அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன்.

புரியுதா ?"

ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள். எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?

எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை.

அதற்கு முன்னும் சரி.

அதற்குப் பின்னும் சரி.

அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை. இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்..

அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

"ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். உங்கள் பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பாராட்டி எழுதி கொண்டிருக்கிறீர்கள்.

இனிமேல் என்னை பாராட்டி எழுதாதீர்கள்." இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, தொடர்ந்து காமராஜர் சொன்னார்.

"நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை. ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே.. அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."

காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.