மொத்தப் பக்கக்காட்சிகள்

7/13/2023

ரஜினி ஸ்டைல்!

 

தமிழகத்தில் கூலிங்கிளாஸ், ருத்ராட்சை விபூதி இவற்றின் விற்பனை அதிகமானதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று சில பேர் வேடிக்கையாக சொல்வார்கள்.
 
அது ஒருவகையில் மிகப் பெரிய உண்மையும் கூட...
 
அதுவரை பக்திப்படங்களில் மட்டும் தான் நடிகர்கள் விபூதிப்பட்டையுடன் தோன்றுவார்கள். 
 
அவற்றை எல்லாம் மாற்றி கமர்ஷியல் படங்களில் ஒரு கதாநாயகன்
ஒரு மாஸ் ஹீரோ விபூதிப்பட்டை, ருத்ராட்சையுடன் தோன்றியது இந்தியாவிலே ரஜினிகாந்த் ஒருவராகத் தான் இருக்க முடியும். 
 
அதுவும் திராவிடம் திராவிடம் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில்...
தன்னுடைய படத்தில் தான் தோன்றும் முதல் காட்சி ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்;உற்சாகப்படுத்த வேண்டும் என்பதில் ரஜினி எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். 
 
அண்ணாமலை தொடங்கி தர்பார் வரை அது நிகழும் அதிசயத்தைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். 
 
அண்ணாமலை பாடல்பதிவின் போது 
 
"எந்த ஊர்ல சார் சைக்கிள்ல வர்ற பால்காரன் கேன்வாஸ் ஷூ போட்டுட்டு இருப்பான்?" என்று ரஜினியைக் கேட்டாராம் இசையமைப்பாளர் தேவா. அதற்கு அருகில் இருந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சிரித்துக் கொண்டே" பால்காரனா நடிப்பது சூப்பர் ஸ்டார் னா தாராளமா போடலாம் சார் "என்று ரஜினியை கை காட்டி சொன்னாராம்.
 
பால்காரன் (அண்ணாமலை) மட்டுமல்ல
 
கூலித் தொழிலாளி(மன்னன், உழைப்பாளி, பணக்காரன்) 
 
பட்டறையில் வேலை செய்பவர் (ஊர்க்காவலன்) 
 
குதிரை வண்டி ஓட்டுபவர் (முத்து) 
 
இவர்களெல்லாம் ஷூ போட ஆரம்பித்தது ரஜினிகாந்த் புண்ணியத்தில் தான்.
பனியன் போட்டு கொஞ்சம் சட்டையைத் திறந்து விட்டாற் போல் வருவது தான் ரஜினி ஸ்டைல். 
 
பெரும்பாலான கதைகள் உழைத்து முன்னேறும் பாத்திரங்கள் தான். அதற்கேற்றாற் போலவே கெட்டப்களில் நுணுக்கமாக சில விஷயங்களைச் செய்திருப்பார் ரஜினி. 
 
அந்த காலத்தில் எம்ஜிஆர் அவர்கள் ரிக்ஷாக்காரன், படகோட்டி படங்களில் போட்டு வந்த தனித்தன்மையான கெட்டப், உடைகள்  நிறைய ரிக்ஷா தொழிலாளிகளையும் படகோட்டிகளையும் மாற்றியது. 
 
விவசாயம் என்றாலே வேட்டி என்று இருந்த காலத்தில் தான் 'விவசாயி' என்று பேண்ட் சட்டை அணிந்து வந்து பாடினார் எம். ஜி.ஆர். டி ஷர்ட்கள் எம்ஜிஆர் காலத்தில் தான் பிரபலமானது. 
 
சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் ஒரே பாடலில் 12 உடைகள் அணிந்து வருவார். 
 
கூலிங்கிளாஸ் அதற்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி சில படங்களில் மட்டுமே அணிந்து நடித்திருப்பார்கள். கதாநாயகன் கண் தெரியாதவனாகவோ, மாறுவேடத்தில் வருபவனாகவோ இருந்தால் கூலிங்கிளாஸ் அல்லது ரீடிங் கிளாஸ் அணிந்து வருவார்கள்.
 
ஆனால் கூலிங்கிளாஸ் அணிவதை ஒரு ஸ்டைலாக ஒரு அழகாக மாற்றியவர் ரஜினிகாந்த். கூர்ந்து கவனித்தால் பல பாடல்களில் கூலிங்கிளாஸும்
காற்றில் பறக்கும் அவரது தலைமுடியுமே பாடலை வேறு ஒரு உயரத்துக்கு எடுத்து சென்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
 
"சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா" தொடங்கி "நான் தாண்டா இனிமேலு" வரை.
அவரைப் பார்த்து தான் எல்லா நாயகர்களும் இளைஞர்களும் பின்பற்றினார்கள். ஆனால் அவருக்கு இயற்கையாக கனகச்சிதமாகப் பொருந்தியது போல் மற்றவர்களுக்கு பொருந்தியதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கலைச்சேவை செய்யறேன், கஷ்டப்பட்டு நடிக்குறேன், கலையை உயர்த்த போறேன்னு லாம் சும்மா சொல்லிட்டு இருக்காம தன் ரசிகனுக்கு என்ன தேவை?
எதை மக்கள் ரசிப்பார்கள்? 
 
அவர்களை எப்படி சநதோஷப்படுத்துவது? 
 
என்று பார்த்து பார்த்து நடித்ததால் தான் அவர் சூப்பர் ஸ்டார். சும்மா வந்தது அல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்.

*எவர்க்ரீன் ஹீரோ MGR *...

மாட்டுக்கார வேலன் திரைப் படம் .
அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் .
சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி ,
ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....
" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ...
மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....
வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் ,
அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,
" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வயத்தை கழுவுரேன் .
அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்
எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...
" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க ,
எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .
" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்
" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே ,
தாய் ,
தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...
சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....
அவர் தானைய்யா..
எங்களின்
*எவர்க்ரீன் ஹீரோ*...
படித்தேன்
பிடித்தது

 

3/15/2023

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.
Kanchana (actress) - JungleKey.in Image #50
சென்னையில் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில், வரும் 17.03.2023ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயம். இக்கோயிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

அதே போல் தமிழகத்தின் தலைநகர் சென்னையின், வர்த்தகப் பகுதியான தி நகர், வெங்கட்நாராயணா சாலையிலும் ஒரு வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் கூட தி நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிப்பதுண்டு. திருப்பதியைப் போல் இங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும். விசேஷ நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு. இவரை நினைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. 1960 - 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருபவர். தற்போது இவருக்கு 84 வயதாகிறது.

இவர் திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் இவருடைய உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.

உறவினர்கள் ஏமாற்றி அபரித்துக்கொண்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றப் படியேறினார். அப்போது, தான் வழக்கில் ஜெயித்தால் அனைத்து சொத்துக்களையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக் கொண்டது போலவே, வழக்கில் வெற்றி பெற்று இழந்த சொத்துக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். அவர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டது போலவே சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததால், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதித் தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நடைகொடை பெறப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 22.02.2021அன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும்  17.03.2023 ஆம் தேதி பத்மாவதி தாயார் கோவிலுக்கு கும்பாபிஷேகம்.

கோயிலுக்கு சொந்தமாக புஷ்கரணி, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

9/18/2020

ஓட்டுநரின் சாமர்த்தியம்!

 ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்.. இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன் கேட்டார்..


" அய்யா.. இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே..?"

" அது இயலாது டாம்.. ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள்.. அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை..!"

இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை.. ஒரு யோசனை சொன்னார்..

" அய்யா.. ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே..? உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன்.. இன்று உங்களுக்கு பதிலாக, உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே..?'

ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு ஐன்ஸ்டீன் கடைசி இருக்கையில் அமர்ந்துகொள்ள, ஒட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்.. கூட்டத்துக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்று நம்பிற்று. இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் கிளம்பியது. அவர் ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்..திக்கு முக்காடிய ஓட்டுநர் சட்டென சுதாரித்து சொன்னார்..

" இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே.. இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்..!"

மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்துகொண்டே ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார் விளக்கமளிக்க...!

5/18/2020

எம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!

M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படமான ‘நாடோடி மன்னன்’. 


‘மலைக்கள்ளன்', ‘அலிபாபாவும் 40 திருடர்களும்', ‘மதுரை வீரன்', ‘தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’ படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார். 

‘‘நான் சொந்தத்தில் ‘நாடோடி மன்னன்’ படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், ‘நாடோடி மன்னன்’ ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர். 

‘நாடோடி மன்னன்’ படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் ‘நாடோடி மன்னன்.’ 

படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரம் மாண்டத்துக்கு மட்டுமல்ல; படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது. 

படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் ‘ஓவல்டின்’ என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் ‘ஓவல்டின்’ குடித்ததே அப்போதுதான். 

படம் முடிந்த பிறகு ‘‘வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர். 

மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’. 

மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார். 

இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார். 

‘நாடோடி மன்னன்’ பற்றி குறிப்பிடும் போது நடிகை பானுமதி பற்றி சொல்லி யாக வேண்டும். நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம் என்ற பன்முகத்திறமை கொண்டவர் பானுமதி. ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ என்று ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு பானுமதியே ஜோடி. ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார். 

பானுமதி அந்தக் காலத்திலேயே சுதந்திரமாக செயல்படும் நடிகை. எம்.ஜி.ஆரும் அப்படியே. தான் விரும்பு கிறபடி காட்சிகள் வரும்வரை எம்.ஜி.ஆர். விடமாட்டார். அதனால்தான் இன்றும் அவர் படங்களை ரசிக்க முடிகிறது. எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் காட்சி களை எடுப்பது பானுமதிக்கு பிடிக்கவில்லை. ‘‘எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?’’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார். 

சக நடிகையின் ஒத்துழைப்பு இப்படி இருக்கும்போது கோபம் வந்தாலும், எம்.ஜி.ஆர். அமைதியாகவே பதில் சொன்னார், ‘‘படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க.’’ இதைத் தொடர்ந்து, படத்தில் இருந்து விலகிக் கொண்டார் பானுமதி. பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரின் திறமையை எம்.ஜி.ஆர். மதிப்பார். படத்தில் இருந்து பாதியில் விலகினாலும் சென்னையில் நடந்த வெற்றி விழாவுக்கு பானுமதியையும் பெருந்தன்மையுடன் அழைத்து, அவருக் கும் விருது வழங்கினார் எம்.ஜி.ஆர். 

அதன் பின்னரும், எம்.ஜி.ஆர். - பானுமதி நடிப்பில் ‘ராஜா தேசிங்கு’, ‘கலை அரசி’, ‘காஞ்சித் தலைவன்’ ஆகிய படங்கள் வெளியாயின. 

பன்முகத் திறமை மிக்க பானுமதிக்கு தமிழக அரசின் சார்பில் அதுவரை ‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்படாததை அறிந்த எம்.ஜி.ஆர், தான் முதல்வராக இருந்தபோது ‘கலைமாமணி’ விருதை பானுமதிக்கு வழங்கி கவுரவித்தார். 

எம்.ஜி.ஆர். நல்ல இசை ஞானம் உடை யவர். ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பின் போது ஒருநாள், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் பாடல் களுக்கான இசையமைப்பு பற்றி எம்.ஜி.ஆர். ஆலோசித்துக் கொண்டிருந் தார். அப்போது, ‘‘நீங்கள் இசையமைப் பில் எல்லாம் தலையிட வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார் பானுமதி. இசை பற்றி எம்.ஜி.ஆருக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது என்ற எண்ணம் பானுமதிக்கு. 

எம்.ஜி.ஆருக்கு நினைவாற்றல் அபா ரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதை யும் மறக்க மாட்டார். பானுமதி கேட்ட கேள்விக்கு, 27 ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக இருந்தபோது செயல்வடி வில் அவருக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர். 

தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை எம்.ஜி.ஆர். நியமித்தார். பின்னர், அந்த பதவியின் அந்தஸ்து மேம்படுத்தப்பட்டு இயக்குநர் மற்றும் முதல்வராக பானுமதி பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு பானுமதி மறைந்த தினம், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி. 

 
எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’
-
http://tamil.thehindu.com