மொத்தப் பக்கக்காட்சிகள்

1/16/2017

ஞானத்தை யாரிடம் கற்பது ?

ஞானத்தை யாரிடம் கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும்,

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

1/02/2017

படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு ?




விருந்தாளி :- என்ன பண்ற ?

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :- என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் !

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி !

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம் !

விருந்தாளி :- அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி !

பையன் :- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம் !

விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி !

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம் !

விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு !

பையன் :- எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1000  கோடியிலேர்ந்து 40000 கோடி வரை

விருந்தாளி :-.....!!! மயங்கி விழுகிறார் !

பையன் :- -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு.. ?

இதான் இந்த உலகம்.. 

இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல.. 

சிந்திக்க வேண்டிய விஷயம்....

Thanks to Karunakaran karuna

12/23/2016

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..


இழந்தது எவை என இறைவன் கேட்டான்..


பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..


பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?


கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..


கோலம் மாறி அழகையும் இழந்தேன்..


வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..


எதை என்று சொல்வேன் நான்..


இறைவன் கேட்கையில்?


எதையெல்லாம் இழந்தேனோ


அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.


அழகாகச் சிரித்தான் இறைவன்.


”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"..


"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"..


"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"..


"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"..


சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..


தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..


திகைத்தேன்!


இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..


வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..


இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..


இறைவன் மறைந்தான்..

விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

 
 
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்

Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

11/25/2016

காத்திருக்கப் பழகு !

காத்திருக்கப் பழகு
 
 சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்:
 
 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு' 

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.

பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு

நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு

பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை
ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா....???

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால்
வாழப் பழகுவாய்.

இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.

எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்