மொத்தப் பக்கக்காட்சிகள்

2/19/2016

மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் ......

மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் ......


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.

நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.

பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.

ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.

என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.

கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.

இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.

சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.

இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.

பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன. அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாக இருக்கும்


Thanks to Donlee

நம்பியவர்க்கே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""


ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் 

“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களா? 

ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் " என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
 
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.
 
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
 
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
 
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “ என வினவினார்.
 
அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் ..நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவராகிய எம்பெருமான் சொன்னார் 

" குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை “ என சொல்லி அழைத்து சென்றார்

 
"" நம்பியவர்க்கே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""....

Thanks to C Malathi

2/18/2016

அண்ணாவின் தம்பிகள் - கலைஞர் - எம்.ஜி.ஆர்.

M.G.R. முதல் முறையாக 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி. 
 


சட்டப் பேரவையில் சூடும் சுவையுமான ஒரு விவாதம். ஒரு கட்டத்தில் கருணாநிதி பேசும்போது, ‘‘ஆட்சி அதிகாரம் எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது’’ என்றார். எம்.ஜி.ஆர். எழுந்தார். தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.’’

இப்படி, அரசியல் களத்திலே எதிரெதிரே நின்று விவாதங்களில் ஈடுபட்டாலும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளான இரண்டு பேருக்கும் இடையே அரசியலைத் தாண்டிய ஆழமான நட்பு நிலவி வந்தது. தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார். எம்.ஜி.ஆரும் மேடைகளில் ‘நண்பர் கலைஞர் கருணாநிதி’ என்றே விளித்து பேசுவார். 

அரசியல் உக்கிரம் தகித்த போதும் அதையும் தாண்டிய நட்பு குளிர்ச்சி இருவருக்கும் இடையே நிலவியதற்கு சான்றுகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம். 

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்து 1982-ம் ஆண்டு ‘நீதிகேட்டு நெடும் பயணம்’ என்ற பெயரில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுடன் பாத யாத்திரையாக சென்றார். தொடர்ந்து நடந்ததில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. அப்படியும் பயணத்தை தொடர்ந்தார். 

விஷயம் முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தொலைபேசி மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்டார். உடல் நலன் குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதோடு, கருணாநிதியின் உடல் நிலையை கவனிக்க ஒரு மருத்துவர் குழுவையும் அனுப்பி வைத்தார். இது இருவருக்குமான நட்பின் அடையாளம் மட்டுமல்ல, தனது அரசை எதிர்த்து பாத யாத்திரை போகிறாரே? தனது அரசியல் எதிரியாயிற்றே? என்றெல்லாம் கருதாமல் கருணாநிதியின் உடல் நலனில் எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையையும் அவரின் அன்பு உள்ளத்தையும் காட்டும் நிகழ்ச்சி இது.

இருவருக்கும் இடையிலான நட்பின் ஆழத்துக்கு இன்னொரு சம்பவம். 

‘எங்கள் தங்கம்’... எம்.ஜி.ஆரை ரசிகர்கள் இப்படி அழைப்பதற்கு காரணமான அவர் நடித்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம். மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கடனை ‘எங்கள் தங்கம்’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தால் அடைத்ததாக அதன் வெற்றி விழாவில் முரசொலி மாறன் குறிப்பிட்டார். 

படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். என்றாலும் இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒன்று.. எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலான ‘நான் செத்துப் பிழைச்சவன்டா.... ’ 

மற்றொன்று ஜெயலலிதாவுடன் எம்.ஜி.ஆர். பாடும் டூயட் ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ இந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அதில் உள்ள சிறப்பான வரிகள். இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. 
 
‘நான் அளவோடு ரசிப்பவன்...’ பாடலுக்கான முதல் வரியை எழுதி விட்டார் வாலி. என்ன காரணமோ தெரியவில்லை, அன்று அவருக்கு அடுத்த வரி உடனடியாக வரவில்லை. அப்போது மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கருணாநிதி வந்தார். வாலியைப் பார்த்து ‘பல்லவி எழுதி விட்டீர்களா?’ என்று கேட்டார். 

‘நான் அளவோடு ரசிப்பவன்....’ முதல் வரியை சொன்னார் வாலி. 

‘எதையும் அளவின்றி கொடுப்பவன்....’ இரண்டாவது வரி வந்தது கருணாநிதியிடம் இருந்து. 

எம்.ஜி.ஆரின் வள்ளல்தன்மையை மனதில் கொண்டு கருணாநிதி கூறிய இந்த வரிக்குப் பிறகு பாடல் கிடுகிடுவென எழுதி முடிக்கப்பட்டு அன்று மாலையே ஒலிப்பதிவும் ஆகிவிட்டது. 

பாடல் எம்.ஜி.ஆருக்குப் போனது. ஆனால், இரண்டாவது வரியை வாலிக்கு கருணாநிதி எடுத்துக் கொடுத்த விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. சில நாட்கள் கழித்து வாஹினி ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்தார் வாலி. 

அவரை வரவேற்று ‘‘வாங்க ஆண்டவனே. (தனக்கு நெருக்கமான வர்களை எம்.ஜி.ஆர் இப்படி அழைப்பது வழக்கம்) ‘அளவோடு ரசிப்பவன்’ பாட்டு பிரமாதம். அதிலும் அந்த இரண்டாவது வரி அருமை’’ என்று கூறிய எம்.ஜி.ஆர். அன்பின் மிகுதியால் வாலியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். 

‘‘அண்ணே, நீங்க இந்த முத்தத்தை கருணாநிதிக்குத்தான் கொடுக்கணும்’’ - வாலியின் ரியாக் ஷன். 

‘‘ஏன்?’’ எம்.ஜி.ஆர். புரியாமல் கேட்டார். 

விஷயத்தை வாலி சொன்னதும் சிந்தனையில் ஆழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் எதிரொலி சில நாட்களுக்குப் பின் அவரிடம் இருந்து வெளிப்பட்டது. 

‘நான் செத்துப் பிழைச்சவன்டா.. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா...’ பாடலின் பல்லவியை எழுதி எம்.ஜி.ஆரி டம் காட்டினார் வாலி. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம்.ஜி.ஆர். உயிர்பிழைத்த பிறகு வெளியான இந்தப் பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது. 

திருப்தியடைந்த எம்.ஜி.ஆர். வாலியிடம் சொன்னார்: ‘‘ஆண்டவனே, இரண்டாவது சரணத்திலே இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது பற்றி நாலு வரியிலே நறுக்குன்னு எழுதிடுங்க.’’ 

இதையடுத்துப் பிறந்த வரிகள்தான்...
‘ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய்தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது’ 

தனது கொடை உள்ளத்தை ‘அளவின்றி கொடுப்பவன்...’ என்று புகழ்ந்து அடியெடுத்துக் கொடுத்த கருணாநிதியின் போர்க் குணத்துக்கு எம்.ஜி.ஆரின் பதில் மரியாதை. 

‘எங்கள் தங்கம்' படத்தின் ஆரம்பத்தில் அப்போது சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தொப்பி, கண்ணாடியுடன் சிறுசேமிப்புத் துறை தலைவராகவே வருவார். அவரிடம் தங்கம் பாத்திரத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர். நிதி கொடுப்பார். 

எம்.ஜி.ஆருக்கு தமிழக அரசின் லாட்டரி சீட்டில் பரிசு விழும் (அப்போது லாட்டரி சீட்டு இருந்தது). அந்தப் பரிசை எம்.ஜி.ஆருக்கு அண்ணா வழங்குவது போல ஒரு காட்சி. மொட்டை அடித்துக் கொண்டு பாகவதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்.கதாகாலட்சேபம் செய்யும் காட்சி என்று படத்தில் ‘ஹைலைட்’கள் ஏராளம். 

Thanks to Tamil Hindu.com

2/16/2016

வெற்றி-வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

 ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி ‘பத்தடி ஆழம்.. பத்தடி அகலம் கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?’ என்பது தான்

“கத்திக் கூப்படு போடுவேன்” என்றான் ஒருவன்..

“தத்தி தத்தி ஏறிடுவேன்” என்றான் ஒருவன்.

 இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை!!

கடைசியில் ஒருவன் கேட்டான்.

‘தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?’.

‘இல்லை’ என்றனர் தேர்வுக் குழுவினர்.

‘நான் விழுந்தது.. பகலிலா.. அல்லது இரவிலா’

‘ஏதற்குக் கேட்கிறாய்?’ -தேர்வுக்குழுவினர்.

இவன் சொன்னான் ‘பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை.. அஜாக்கிரதையானவனும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை. அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.’

அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினருக்கு.அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

ஒரு மனிதனின் வெற்றி அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.

படித்தது.

2/15/2016

குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை ! இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

பதில் சொல்லுங்கள் அம்மா ....

பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

# தமிழில் பூங்கொடி