வரலாறு:
மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம் என்று வரலாற்றுச் சான்றுகள்
கூறுகின்றன.
இக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி 1230ஆம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320 ஆம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர்.
இக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி 1230ஆம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320 ஆம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர்.
மேலும் இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக
இருந்துள்ளனர். சேர,
சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட
பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.
பின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல நகராத்தார்களினால்
இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு 1903, 1944, 1976, 2002 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
கட்டிடக்கலை:
பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய்
காட்சியளிக்கிறது இந்தக் கோவில். கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான்கு கோபுரங்களும், கோவிலின் உள்ளே ஐந்து கோபுரங்களும் உள்ளன. கோவிலின் பிரதான
கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.
கோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்களையும் காணலாம்.
கோவில் மிகப் பெரியது என்பதால் ஒவ்வொரு பிரகாரத்திலும் என்னென்ன இருக்கிறது
என்பதை இனி காண்போம்.
ஆறாம்
பிரகாரம்: கோவிலின் உள்ளெ நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.
ஐந்தாம்
பிரகாரம்: கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம்.
நான்காம்
பிரகாரம்:
கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.
மூன்றாம்
பிரகாரம்: கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்
சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம்.
இரண்டாம் பிரகாரம்: அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும்
இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது.
முதல்
பிரகாரம்: கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு
தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை
தரிசிக்கவும் வழி உள்ளது.
சிற்பக்கலை:
இங்கு உள்ள கிழக்கு கோபுரத்தில் நடன சிற்பங்களை காணலாம். மேலும் இந்தக் கோவிலில் இருந்து
ஏராளமான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதுவரை 119 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
தல வரலாறு:
படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக்
கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது
அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து
நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி
செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும்
அடியையும் முடியையும் காண இயலவில்லை.
பிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான்
முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச்
சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான்
பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது
என்றும் சபித்தார்.
சிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே
திருவண்ணாமலை ஆகும். இங்கு காணப்படும் மலையான அண்ணாமலை க்ருத்யுகத்தில் நெருப்பாகவும்.
த்ரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், த்வப்ரயுகத்தில் தங்கமாக இருந்ததாகவும்
சொல்லப்படுவதுண்டு. தற்போது கலியுகத்தில் கல்லாக உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக
காட்சியளித்த இடத்தில்தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.
அண்ணா என்றால் 'நெருங்கவே முடியாது' என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும்
அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர்
வந்தது.
ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில்
சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம்
இருளில் மூழ்கியது. இந்த தவற்றிற்காக காஞ்சிபுரத்தில் மண்ணால் லிங்கம்
செய்து வழிபட்டார் பார்வதி. அச்சமயத்தில் சிவபெருமான் தோன்றி அவரை
திருவண்ணாமலைக்குச் சென்று வழிபடும்படி பணித்தார். அங்கு பவளக் குன்றில் கெளதம முனிவரின்
உதவியோடு பார்வதி மேற்கொண்ட தவத்தை மஹிசாசுரன் என்னும் அரக்கன் தடுத்தான். இதனால்
கோபமுற்ற பார்வதி துர்கை வடிவம் கொண்டு அவனை அழித்தாள். பின்னர் சிவபெருமான ஜோதி
வடிவில் பார்வதிக்கு காட்சி தந்து பார்வதிக்கு தன் உடம்பின் இடப்பக்கத்தை தந்து
அர்த்தநாரியாக மாறினார் என்றும் கூறப்படுவதுண்டு.
கிரிவலம்:
இங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சிதருகிறது. மலையின் கீழ்த்திசையில் இருந்து
பார்த்தால் ஒன்றாகவும்,
சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது இந்த மலை. இப்படி
சிறப்பு வாய்ந்த மலையை சுற்றி வருவதால் நிறைய பயன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
பெளர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள்மீது பட்டு
பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் ஓளிக்கதிர்கள் நம் உடலுக்கும்
உள்ளத்திற்கும் நன்மை பயக்கும். எனவே பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு.
14 கி.மீ நீளமுடைய கிரிவலப் பாதையில்
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் எட்டுத் திசைகளிலும் உள்ளன. மாணிக்கவாசகரை சிறப்பிக்கும்
வகையில் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில் ஒரு கோவிலையும் காணலாம். இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.
சிறப்புகள்:
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால்
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது.
அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்த இடம் திருவண்ணாமலை. அவர் தற்கொலை செய்ய
முயன்றபோது முருகனே நேரில் வந்து காட்சியளித்து அவரை திருப்புகழ் பாடச்சொன்ன தலம் இந்த
திருவண்ணாமலை. மேலும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் போன்றோரும்
இடைக்காட்டு சித்தர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம்.
அப்பர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். மாணிக்கவாசகர் இங்கு இருந்து
திருவெம்பாவையையும்,
திருஅம்மானையையும்
இயற்றினார் என்று சொல்வர்.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்தல
விருட்சமான மகிழ மரத்தின் கீழ் இருந்து பார்த்தால்
கோவிலின் அனைத்து கோபுரங்களையும் காணலாம்.
விழாக்கள்:
அனைத்து கோவில்களைப் போல் தினமும் ஆறு
கால பூஜைகள் இங்கும் நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பிரமோத்சவம், ஆடி பூரம், நவராத்திரி, தை மாதம் உத்திராயன புன்னிய கால பிரமோத்சவம், திருவூடல் திருவிழா, மாசி மாதம் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
சிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் பார்வதிக்கும் ஜோதியாக
காட்சியளித்ததை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் பத்து நாட்கள் கார்த்திகை தீப
உற்சவமும் நடைபெறும். இந்த திருவிழாவின் போது போன வ்ருடம்(2009) முப்பது லட்சம் மக்கள் திரண்டு ஜோதி
வடிவான அண்ணாமலையாரை வழிபட்டனர்.
கோவில் திறந்திருக்கும்
நேரம்:
காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
தங்கும் இடங்கள்:
எங்கும் காணாத வகையில் இங்கு
கோவிலிலேயே தங்கும் வசதிகள் உள்ளன. இங்கு உள்ள
அப்பர் இல்லத்தில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாயும், உண்ணாமுலை அம்மன் இல்லத்தில்
தங்குவதற்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.
எப்படி செல்வது?
1) திருவண்ணாமலைக்கு சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம், சிதம்பரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் -
திண்டிவனம் 60 கி.மீ தொலைவில்.
3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 185 கி.மீ தொலைவில்