மொத்தப் பக்கக்காட்சிகள்

2/28/2012

நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய 9 வழிகள் உள்ளன,





1.    அதிகாலையில் எழுந்து நீராடி 5 நிமிடம் கண்கணை மூடி இஷ்ட தெய்வத்தை புருவமத்தியில் நினைத்து தியானம் செய்யவúண்டும், அவ்வாறு இயலாவிடில் 108 முறையாவது இறைவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், நாளடைவில் ஈடுபாடு நிச்சயம் வந்துவிடும்.

2.    தினமும் சிறிது நேரமேனும் நல்ல ஆன்மீக புத்தகங்களைப் படிக்க வேண்டும் () மனதிற்கு இதமளிக்கக் கூடிய பக்திப் பாடல்களை கேட்கவேண்டும்.

3,    நேரம் கிடைக்கும்போது எல்லா ஆலயத்திற்கும் சென்று மனமுருக இறைவனை ஒரு கண நேரமேனும் வழிபடுங்கள், பின்பு கோயில் பரகாரத்தில் அமைதியாக சிறிது நேரம் இருங்கள்
.
4,    ஒரு நாளைக்கு ஒருவருக்காவது சிறு உதவி ஏதேனும் செய்யுங்கள், அன்றாட பணிகளை “இறைபணியாக” நினைத்து கடமையாற்றுங்கள்.

5,    வாரம் ஒரு வேளையாவது உப்பும். சர்க்கரையும் இன்றி சாப்பிடுங்கள், கூடுமான வரை காரம். எண்ணைகளைத் தவிருங்கள், கீரை. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6,  மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவியை மறந்துவிடுங்கள், மற்றவர்கள் உங்களுக்குச் செய்த உதவியை மறக்காதீர்கள், மற்றவர்கள் செய்த தீமையை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்டகள். மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள், இதனால் கோபம் என்பதே வாழ்வில் வராது.

7.  முடிந்தவரை உண்மையை பேசுங்கள், எதிராளிகளிடம் பேசும்போது சப்தமின்றி மென்மையாக பேசக்கற்றுகொள்ளுங்கள், “வாரத்தில் 2 மணி ” நேரமாவது மௌன விரதம் இருக்க பழகுங்கள்,

8. சத்துள்ள உணவை உண்ணுங்கள், அதை குறைவாக உண்ணுங்கள், எந்த உணவையும் இறைவன் பிரசாதமாக நினைத்து சந்தோஷமாக சாப்பிடவும்.

9.   கூடுமானவரை திரைப்படம். டி,வியை தவிருங்கள், “மாதத்தில் 2 நாள் தவிர மற்ற நாட்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்” திருமணமான ஆணும். பெண்ணும் பாலியல் சிந்தனையில் இருந்து விடுபட குழந்தைகளோடு பழகுங்கள், அவர்கள் செயல்களை ரசியுங்கள், இந்த 9 கருத்துக்களில் சிலவற்றையேனும் நாம் கடைபிடித்தால் ஆன்மீகத்திலும். வாழ்விலும் நாம் முன்னேற முடியும்.

2/18/2012

அரசியல் ஆத்திச்சூடி



அரசியலில் குதி

ஆட்டையைப் போடு

இல்லாள் இரண்டு வை

ஈ என்று இளி

உடன்பிறப்பை தள்ளு

ஊழலை தெரிந்துகொள்

எடுத்திடு ஆயுதம்

ஏமாற்ற கற்றிடு

ஐம்புலன் அவிழ்

ஒழுக்கம் ஒழி

ஒட்டு வேட்டை ஆடு

ஔ என்று முழி

களப்பணி ஆற்று

காக்கா பிடி

கிழவியை அணை

கீழே விழு

குனிந்து கும்பிடு

கூட்டம் சேர்

கெடுதல் தெரிந்து செய்

கேடு விளைத்திடு

கை நீட்டி கேள்

கொலைகள் பல செய்

கோட்டையைப் பிடி

கௌன்சிலர் ஆகு
Thanks to Thanagopal,pondicherry

2/17/2012

பேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க!!


அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள். 

சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை. 
சந்தை வாய்ப்பு! 

டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம். 

தயாரிப்பு முறை! 

மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி! 

முதலீடு! 

இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம். 

மூலப்பொருள்! 

இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும். 

கட்டடம்! 

இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம். 

இயந்திரம்! 

பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. 

மானியம்! 

பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. . 

உற்பத்தித் திறன்! 

ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும். 

வேலையாட்கள்! 

திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும். 

மின்சாரம்! 

ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும். 
பிளஸ்! 

* ஆண்டு முழுவதும் தேவை இருக்கும். 

* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. . 
ரிஸ்க்! 

* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம். 
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும். 

* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும். 

அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம். 

''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!'' பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி  ''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.  சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.  உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''

2/06/2012

"காலார நடப்பது" நன்மைக்கே



அண்மைக்காலமாக நகர்ப்புற மக்களிடம் மட்டுமன்றி கிராமப்புற மக்களிடம்கூட ஒரு பழக்கம் பரவத் தொடங்கியிருக்கிறது. அது, "வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சிப் பழக்கம் பழக்கம்.

நம் முன்னோர்கள் நாள் முழுதும் பல்வேறு வேலைகளையும் அவர்கள் கையாலேயே நடத்தினர்.இதில்,ஆண்கள், பெண்கள் என்ற விதி விலக்கி ருந்ததில்லை. பெண்கள் கோலம் போடுதல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், துணிதுவைத்தல், கால் நடைகளைப் பராமரித்தல், சமைத்தல் என இயந்திரங்களின் உதவியின்றியே அனைத்துப் பணிகளையும் செய்தனர்.

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட ஆண்களும் முடிந்தவரை பணிகளுக்காக இயந்திரங்களைச் சார்ந்திருக்கவில்லை
.
ஆனால்,நடப்புலகிலோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.பெரும் பான்மையான மக்களிடம் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோரில் நூறு சதவிகிதம் பேருக்கும் உடல் உழைப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அவர்கள் அலுவலக நேரம்போக மீதிப் பொழுதுகளையும் அமர்ந்த படியேதான் கழிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். சும்மாயிருக்கும் பொழுதுகளே அதிகமாகிவிட்டதால் உடலில் பல்வேறு நோய்களின் ஆட்சிதான் நடக்கிறது.அவற்றைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளுடன் இப்படி காலார நடப்பதும் அவசியமாகிறது. ஆனால், அதையும்கூடப் பொருள்படுத்தாமல் சிலர், "நடப்பது நடக்கட்டும். நடப்பது நம்ம கையிலா இருக்கு?' எனக் கூறுவதைக் கேட்கலாம்.

வாய்வுப் பிடியில் சிக்கியவர்களுக்கு குனிதலோ,நிமிர்தலோ இயலாது. அதேபோலத்தான் வ(அ)சதியின் பிடியில் சிக்கியோரும்.அவர்களால் குனிந்து,நிமிர்ந்து வேலை பார்க்க இயலாமல் போகிறது. எதற்கெடுத்தாலும் பிறரைச் சார்ந்தே அவர்களின் பணி நடக்கிறது.இயற்கையான விஷயங்களைக் கைவிட்டு செயற்கைக்கு மாறுவதால்தான் நிலைமை "அன்ன நடை கற்கப்போய் தன் நடையும் இழந்தாற்போல்' ஆகிவிடுகிறது.
நடப்பது மிகவும் நல்ல பயிற்சிதான்.

 அதிகாலை மற்றும் அந்திப் பொழுதுகளில் நடப்பதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பல நன்மைகள் நடக்கின்றன.ஆயினும் அந்தியைவிட அதிகாலைப் பொழுதே சிறந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பல்வேறு தொலைக்காட்சிகளின் நேரலைகளிலும் வரும் மருத்துவர்கள் முதல் நூற்றுக்கணக்கில் பீஸ் கொடுப்பதற்காக மணிக்கணக்கில் நாம் காத்துக் கிடந்து பார்க்கும் உள்ளூர் மருத்துவர்கள்வரை, நீரிழிவு உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கும் முதல்அறிவுரை காலார நடக்க வேண்டும் என்பதுதான்.

குறைந்த உழைப்பு, பெருங்குடலும் சிறுகுடலும் திணறத்திணற மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பாடு, இடையிடையே காபி, டீ, இத்யாதி பானங்கள், நொறுக்குத்தீனிகள் என சில காலம்வரை பொழுதுகள் சுகமாய் நடக்கின்றன. பின்னர், கொழுப்பு, சர்க்கரை, அழுத்தம் உள்ளிட்டவை கூடியும், குறைந்தும் போவதால் பல்வேறு சிறப்பு மருத்துவர்களைத் தேடி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

பத்து மாதம் ஆன பின்னும் நடக்காத தங்கள் குழந்தையை நடநட என பெற்றோர் உற்சாகப்படுத்துவர். ஆனால் அதே பெற்றோர், அக் குழந்தை மூன்று, நான்கு வயதை நெருங்கும்போதோ, "அங்க இங்க நடக்காம ஒரு இடத்தில உட்கார்' எனக் கண்டிப்பதையும் காணலாம்.

விளைவு, மாலை முழுதும் விளையாட்டு என்பதைக் கடைப்பிடித்து நடக்க வேண்டிய குழந்தை, அதைக் கைவிட்டு தொலைக்காட்சி முன்போ, கணினி முன்போ அமர்ந்து,அசையும் காட்சிகளை அசையாமல் பார்க்கத் தொடங்குகிறது.

இதனால், அவர்கள் வளர்ந்த பின்னர், "தெருமுனையிலிருக்கும் கடைக்கு ஒரு நடை சென்று வா'என்றால்கூட பெரும்பாலானோரின் கண்கள் முதலில் தேடுவது இரு சக்கர வாகன சாவியாகத்தானிருக்கும்.

தாத்தா,பாட்டிகள் சொன்னபடி நடப்பதைக் கைவிட்டு,அவர்களின் கைகளைப் பிடித்தபடி நடப்பதையும்கூட பழம் பேஷன் என இன்றைய தலைமுறை கேலி செய்யும் காலமாகிவிட்டது.

சாய்வு நாற்காலி,நொறுக்குத்தீனி சகிதமாய் குடும்பத் தலைவிகள் சீரியல்களில் நடப்பதையும், குடும்பத் தலைவர்கள் ஒருநாள் போட்டி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் கிரிக்கெட்டையும் மணிக்கணக்கிலோ,நாள்கணக்கிலோ பார்க்கப் பழகி விடுகின்றனர்.அவர்களைப் பார்த்துப் பழகும் குழந்தைகள் பிற்காலத்தில் அவர்களைப் போலத்தானே நடக்கும்?

கிராமப்புறங்களில் பல மைல் தொலைவு நடந்து தண்ணீர் பிடித்த காலங்கள் மலையேறிவிட்டன. நகர்ப்புறங்களிலும் அப்படித்தான். ஆனால் சில பகுதிகளில் குழாய்களில் வாரக்கணக்கில் தண்ணீர் வராதபோது, திடீரென லாரித் தண்ணீர் விநியோகிக்கப்படும்.

தண்ணீர் லாரி சப்தம் கேட்டதுமே, எல்லோருக்கும் முன்னதாகப் பிடிக்க வேண்டும் என்ற பரபரப்பில் ஆறேழு குடங்களை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு ஓட்ட நடையா,நடையோட்டமா என திகைக்க வைக்கும் விதத்தில் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெண்களுக்கும் (சில இடங்களில் ஆண்களுக்கும்) சிறிது நேரம் பரபரப்பாய் வேலை நடந்த திருப்தி.இப்படி வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பிடிப்பதால் உடற்பயிற்சிக் கூடத்துக்கென தனியாய் நடக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தான் பைக்கோ,காரோ வைத்திருப்பதற்காக,"ஒரு சைக்கிள்கூட இல்லையா,எங்க போனாலும் நடந்தா போறீங்க?'என பக்கத்து வீட்டுக்காரரை வேற்றுலக ஜந்துவைப் பார்ப்பதைப்போல ஏளனமாய் கேட்பதும்,பார்ப்பதும் சிலரது குணம்.ஆனால் அந்த நபர் பெருத்த தொந்தியைத் தூக்கிக்கொண்டு காலை,மாலை வேளைகளில் மூசுமூசென இறைத்தபடி நடக்க முடியாமல் நடந்துபோவதையும், நடக்கப்போவதையும் பார்க்க,எப்போதுமே நடந்துபோகும் பக்கத்து வீட்டுக்காரருக்கு பாவமாகத்தானிருக்கும்.

எது எப்படியோ, என்றும், எங்கும், எப்போதும் "நடப்பது' நன்மைக்கே என நினைத்தால் எல்லாம் நன்மையாகத்தான் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-மா. ஆறுமுக கண்ணன்
Source: Dinamani

நீங்கள் சாம்பியனாக..: வழிகாட்டும் விளையாட்டு பள்ளிகள்



வல்லரசாக வளர்ந்து வரும் பெரிய நாடு. 110 கோடி பேரைக் கொண்ட மனித வளம். அதிலும் பெரும்பான்மையோர் இளைஞர்கள். ஆனாலும் தகுதியில்லை ஏன்?

ஆம்! உலக கால்பந்து திருவிழாவில் பங்கேற்கக் கூட இந்தியா தகுதி பெற வில்லை என்பது வேதனைக்குரியது.

ஏன் இப்படி? ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிக்க முடியாத கேள்வி இது.
அரசியல்- எல்லாவற்றிலும் அரசியல், விளையாட்டிலும் அரசியல்- ஆதிக்க சக்திகளின் பிடியில் விளையாட்டுத் துறையும் சிக்கி,சீரழிந்து கொண்டிருக்கிறது
.
இந்த சக்திகளிடமிருந்து விளையாட்டை விடுவிக்க வேண்டுமானால் இளம் பருவத்திலேயே விளையாட்டில் ஆர்வம் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கிப் பெருக வேண்டும்.திறமையானவர்கள் ஏராளமாக வரும்போது தடைகள் தானாக விலகும்.

பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதற்கு மாறாக வாரிசுகளை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும், என்ஜினீயர் ஆக்கிவிட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். விளையாட்டு வீரராக்கிவிட வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்கள்?விளையாட்டுகளில் ஆர்வத்தைத் தூண்டிவிட பெற்றோர் மனது வைக்க வேண்டும்.பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

விளையாட்டில் ஆர்வமுள்ள சிறார்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய விளையாட்டு ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை,விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  (எஸ்.டி.ஏ.டி.) செயல்பட்டு வருகிறது.

வளரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு என, சென்னை மட்டு மல்லாமல் மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பள்ளிகள், விடுதிகளை நடத்தி வருகிறது இந்த ஆணையம் இந்த விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் 7, 8, 9, 11-ம் வகுப்புகளில் சேர மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

சேர்வதற்கான தகுதிகள்: 7-ம் வகுப்பில் சேர 6-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 13 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 8-ம் வகுப்பில் சேர 7-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 14 வயதுக்குள் இருத்தல்வேண்டும். 9-ம் வகுப்பில் சேர 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 15 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 11-ம் வகுப்பில் சேர 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 18 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வுப் போட்டி: ஊராட்சி ஒன்றிய அளவு, மாவட்ட அளவு, மாநில அளவு என 3 கட்டமாக தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும். உயரமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உணவு, தங்குமிடம், விளையாட்டு சீருடை, விளையாட்டுப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.கல்விக் கட்டணங்களை மாணாக்கரின் பெற்றோர் ஏற்கவேண்டும்.

மாணவர்களுக்கு விளையாட்டு விடுதி,பள்ளி அமைந்துள்ள இடங்கள்: திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சென்னை புதூர், கிருஷ்ணகிரி, சென்னை ரெட்ஹில்ஸ், நந்தன், நெய்வேலி.

மாணவிகளுக்கு...: ஈரோட்டில் விளையாட்டு விடுதி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு திண்டலில் பள்ளி.

அளிக்கப்படும் பயிற்சி: ஆண்களுக்கு தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, நீச்சல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு சர்வதேச தரத்துடன் பயிற்சி அளிக்க ப்படுகிறது.

மாணவிகளுக்கு தட களம், வாலிபால், கால்பந்து, ஹேண்ட்பால், நீச்சல், வாள் சண்டை,கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறப்பான பயிற்சியை எஸ்.டி.ஏ.டி. பயிற்சியாளர்கள் அளித்து வருகின்றனர்.


தற்போது எஸ்.டி.ஏ.டி.யின் உறுப்பினர் செயலராக சத்யவிரத சாஹு ஐ.ஏ.எஸ். உள்ளார். எஸ்.டி.ஏ.டி. மூலம் மேலும் பலப்பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் பல புதுப்புது திட்டங்களையும் அவர் அறிவித்து வருகிறார்.

ஏழ்மை நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்  சர்வதேச அளவில் சாதனை படைப்பதற்காக பல்வேறு வசதிகளை செய்து தருகிறது எஸ்.டி.ஏ.டி.இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களை பட்டை தீட்டிக் கொண்டால்நீங்கள் சாதிக்கலாம் என்கிறார் உறுப்பினர்-செயலர் சத்யவிரத சாஹு.