நான்கு
முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரை குறை
ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும்
கையாண்டவர்.
மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு.
யாரும்
எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர். விடாமல் இறுதிவரை பாராட்டிய
ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.
முகம்
காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக
உயர்ந்து, இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தயாரிப்பாளரின் கதை இது.
முதல்
அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுப்படத்தையும்
முடித்து விடும் தேவரின் வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது.
எம்.ஜி.ஆரை
வைத்து மட்டுமல்ல, யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க
முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.
சாண்டோ சின்னப்பா தேவர் - யார்?
இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பா தேவர்' என்ற பெயர் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.
'தேவர்
ஃபிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள். அந்தக்
காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர் என்று சொன்னால் அனைவரும்
அறிவர்.
கோவையை
அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்-
ராமாக்காள் தம்பதிக்கு பிறந்தார் ’மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு
சின்னப்பா தேவர்’. சுருக்கமாக, `எம். எம். ஏ. சின்னப்பா தேவர்`
என்றழைக்கப்பட்ட சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுநர்.
நல்ல உடற்கட்டு உள்ளவர்.
நவீன
உடலழகுக் கலையின் தந்தை என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய பாடிபில்டர் ’யூஜின்
சாண்டோ’ மீது கொண்ட ஈர்ப்பால், அக்கால பயில்வான்கள் பலரையும் போல தனது
பெயரோடு சாண்டோ எனும் அடைமொழியைச் சேர்த்து அழைக்கப்பட்டார்.
அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும், அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார்.
மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார்.
ஆனால் அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கும்.
சினிமாவில் நுழையும் முயற்சியும்
டூரிங்க் டாக்கிசில் சினிமா பார்ப்பது சின்னப்பாவுக்கு ருசிகரமான அனுபவம். கூலி வாங்கியதும் ஓடுகிற ஒரே இடம் அதுதான்.
மௌனப்படங்கள் மட்டுமே வெளியான காலகட்டம் அது.
வெளிநாட்டு சண்டைப்படங்கள் என்றால் தேவருக்கு அத்தனை இஷ்டம்.
மறுநாள்
நண்பர்களுடன் சேர்ந்து அட்டைக்கத்தி வீசுவார், ஆக்ரோஷமாகப் பாய்ந்து
குத்துவார், குதிரை ஏறிப் பறக்கும் சின்னப்பாவின் ஆசையில் ஆற்றங்கரைக்
கழுதைகள் அல்லல்படும், கிணற்றில் நீர் இறைக்கும் தாம்புக் கயிறு
சின்னப்பாவை மரத்துக்கு மரம் தாவும் டார்ஜனாக மாற்றுமாம்.
1931-ஆம் ஆண்டு சினிமா பேசத் தொடங்கியது.
ஒலியோடு
கூடிய ஒளிச்சித்திரங்களில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை எனும்
விளம்பரங்களோடு, பிரபல சினிமா நிறுவனங்களின் முகவரிகள், அக்கால
பத்திரிகைகளில் வரத்தொடங்கின. உற்சாகமான சின்னப்பத்தேவர் தன் வாழ்க்கையின்
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாரானார்.
பல சினிமா நிறுவனங்களுக்கு தனது புகைப்படத்துடன் வாய்ப்புக் கேட்டு கடிதம் எழுதினார்.
எதற்கும் பதில் வரவில்லை.
இரவு தெருக்கூத்துகளில் ஆடிப்பாடி ஆத்ம திருப்தியடைந்தார்.
அடிப்படை
சங்கீதம், ராக பாவம் குறித்தெல்லாம் தெரியாவிட்டாலும், கேள்வி ஞானத்தில்
சொற்களைச் சேர்த்து இஷ்டத்துக்குப் பாடுவார். அதற்கே கைத்தட்டல்கள்
தொடர்ந்தன.
நாடக
உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில்,
நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள்
வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன.
அதற்கு திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டனர்.
பிரபல
’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத்
தயாரித்து வந்தது. கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள
ஊழியர்கள். சின்னப்பத்தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு
வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
சென்ட்ரல்
ஸ்டுடியோவில் எடிட்டராகப் பணியாற்றிய தன் உடன்பிறந்த தம்பி,
எம்.ஏ.திருமுகத்தை அழைத்து தனது முதல் படத்தை இயக்கச் சொல்லிக்
கேட்டிருக்கிறார் சின்னப்பா தேவர். மனோகரா திரைப்படத்தின் எடிட்டர்
அவர்தான்.
ஆனால்,
கதை பிடிக்கவில்லை என்று சொல்லி தம்பி மறுத்துவிட, தயாரிப்பாளர்
எஸ்.ஏ.நடராஜன் இயக்கத்தில் 1955ஆம் ஆண்டு தேவர் தயாரிப்பில் வெளியான `நல்ல
தங்கை’ சுமாராகத்தான் ஓடியது.
ஆனாலும் அவர் துவண்டுவிடவில்லை.
அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கி, கதாநாயகனாக எம்.ஜி.ஆரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார்.
தொடர்ந்து
நண்பர்களுடன் சேர்ந்து படம் தயாரிக்க விருப்பமில்லாமல், புதிய தயாரிப்பு
நிறுவனத்தை உருவாக்க நினைத்தவருக்கு, தன் நிறுவனத்துக்கான பெயர் தேர்வில்
சிக்கல் நீடித்தது.
தமிழ் சினிமா செழிப்பாக இருந்த அந்த காலகட்டத்தில் தினம் ஒரு சினிமா கம்பெனி உதயமாகின.
மருதமலை
முருகன் ஃபில்ம்ஸ், ஸ்ரீ வள்ளி வேலன் கம்பைன்ஸ், சிவசுப்ரமணியன் மூவீஸ்,
செந்தில் ஆண்டவர் கிரியேஷன்ஸ், முத்துக்குமரன் பிக்சர்ஸ் என முருகனுக்கு
எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களாகப் பதிவு
செய்யப்பட்டிருந்தன.
செங்கோட்டை சிங்கம் படத்தில்தான் அறிமுகப்படுத்தினார்.
’’வெற்றி...
வெற்றி... நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி...’’ என்று
எஸ்.வி.சுப்பையா பேசுகிற முதல் காட்சியின் வசனத்தை வாய்விட்டுக் கூறினார்,
ஆரூர்தாஸ்.
’’நிறுத்துப்பா... முதல் மூணு ஆட்டத்த நாம காட்டலியே’’ என்றார்
தேவர்.’’அதனால எண்ணண்ணே... தயாரிப்பாளரா இது உங்களுக்கு நாலாவது படம்,
அதைத்தான் வெற்றி வெற்றி-ன்னு எழுதினேன்’’ என்று கூற தேவர் உருகிவிட்டார்.
ஆரூர்தாஸ்
கூறியபடி, அந்தப்படமும் வெற்றிபெற, தனது ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன்
வெற்றி... வெற்றி... என்று கத்தியபடியே ஓடி வருவதை ஓர் அம்சமாகவே
நிலைநாட்டினார்.
ஒரு
கட்டத்தில் மற்ற ஃபைனான்சியர்களை நாடிச் செல்ல மனமில்லாமல், குறைந்த
செலவில் புதுமுகங்களை மட்டும் வைத்துப் படம் பண்ணலாமா, அல்லது மிருகங்களை
அதிகளவில் பயன்படுத்திப் படம் பண்ணலாமா என்கிற யோசனையில் இருந்த தேவர்,
’’எலிஃபேண்ட் பாய்’’ என்னும் ஆங்கிலப்படத்தை தமிழ்ப்படுத்த விரும்பினார்.
தனது லட்சியப் படமாகவும் அதனை அறிவித்தார்.
யானைகளை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பதை நிஜமாகவே படமாக்க எண்ணினார்.
முழுக்க முழுக்க காட்டு மிருகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.
முதுமலை
ஸ்ரீநிவாச எஸ்டேட்டில் யானைகளுக்காக பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி தவம்
கிடந்தார். 1960ஆம் ஆண்டு தீபாவளிக்கு ’யானைப் பாகன்’ ரிலீசானது.
உண்மையில்
தமிழ் சினிமாவில் புதுமையான முதல் முயற்சி அது என்று தனது புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் தீனதயாளன், அதே தினத்தில் வெளியான கைதி
கண்ணாயிரம், கைராசி, மன்னாதி மன்னன் போன்ற படங்களின் முன் யாரும்
யானைப்பாகனை கண்டுகொள்ளவில்லை என்றும், பத்திரிகைகள் கூட, தேவரின்
டாக்குமெண்ட்ரி படம் என்று கிண்டல் செய்ததாகவும் குறிப்பிடுகிறார்.
தேவர்
தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில்
எடுக்கப்பட்டு, திரையுலகை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது.
அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார்.
எம்.ஜி.ஆரை
தேவர், முருகா அல்லது ஆண்டவரே என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, முதலாளி
என்றும் அழைத்துக்கொள்வர் என, தீனதயாளன் எழுதியுள்ளார்.
எம்.ஜி.
ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ
சின்னப்பா தேவர். இதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
முருகனின் தலங்களை அடிப்படையாகக்கொண்ட பாடல்களோடு ’தெய்வம்’ எனும் திரைப்பட்டத்தை தயாரித்து 1972ஆம் ஆண்டு வெளியிட்டார்.
கண்ணதாசன்
வரிகளுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட்.
’’மருதமலை மாமணியே’’ பாடல் இடம்பெற்றதும் இத்திரைப்பபடத்தில்தான்.
ரமணியம்மாள் குரலில் ’’குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’’, சீர்காழி
கோவிந்தராஜனின் மற்றும் டி.எம்.எஸ் காந்தக் குரலில் ஒலித்த
‘’திருசெந்தூரின் கடலோரத்தில்’’ எனும் பாடல்களைக் கேட்போரெல்லாம், இன்னமும்
சிலிர்த்துப் போவார்கள்.
நாத்திக
கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த
எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வர வைத்ததும் தேவரின் சாதனைதான்.
ரஜினிகாந்த்
நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில்
வெளியான கடைசிப்படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது
மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள்
சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச்
செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த
போதே மறுநாள், அதாவது 1978 ஆம் செப்டம்பர் 8ஆம் நாள், மாரடைப்பு ஏற்பட்டு,
சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார்.
தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது.
தேவரின் மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள்.
தேவருக்குப்பின், மகன் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார்.
கமல், ரஜினி நடிப்பில் பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.