ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த
கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக்
கூறும்படிக் கேட்டார்.
முதல் கைதி அரசே! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என்னைத் தவறுதலாகச்
சிறையில் அடைத்து விட்டனர். தாங்கள்தான் அருள் கூர்ந்து என்னை விடுவிக்க
வேண்டும் என்று வேண்டினான்.
இரண்டாவது கைதி, அரசே! எனக்கும், நீதிபதிக்கும் சிறு தகராறு. அதனால் அவர்
எனக்கு வேண்டுமென்றே சிறைத்தண்டனை கொடுத்து விட்டார். நான் எந்தப் பாவமும்
செய்யாதவன். என்னை அருள் கூர்ந்து விடுவிக்கும்படி வேண்டினான்.
இப்படியே எல்லாக் கைதிகளும் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யாத நல்லவர்கள்
என்றும், சிறையில் இருந்து கொண்டு துன்புறுவதாகவும் கூறினார்கள்.
அரசர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியாக வந்த
கைதி மட்டும் அரசே! இந்த கைகளினால் நான் திருடினேன். அதற்காகச்
சிறைத்தண்டனை அனுபவிக்கிறேன் என்றான்.
அவன் கூறியதைக் கேட்டதும் அரசன் கடுங்கோபம் கொண்டார். சிறைக் காவலர்களைப்
பார்த்து, நல்லவர்கள் மட்டும் இருக்கக்கூடிய இந்தச் சிறைச்சாலையில்
இத்திருடனை யார் கொண்டு வந்து அடைத்தது?
இவன் இங்கிருக்கும் எல்லோரையும்
திருடர்களாக்கி விடுவான். இவனை உடனே வெளியே விரட்டி விடுங்கள் என்று
கூறினார்.
அரசனின் குறிப்பை உணர்ந்து கொண்ட அரண்மனைக் காவலர்கள் அவனை விடுதலை செய்தனர்.
தத்துவம் :
உண்மை விலைமதிப்பற்றது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நேர்மையாக உண்மையை
சொல்ல வேண்டும். அப்பொழுது தான் உங்கள் நேர்மைக்கான பிரதிபலனை
எதிர்ப்பார்க்க முடியும்.