மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

11/08/2011

உபதேசம் (சிறுகதை)


மனைவியிடம் கோபமாய் மறுத்தார் வாத்தியார் வேதாசலம்.

வாஷிங்மெஷினா? திடீர்னு பத்தாயிரத்துக்கு எங்கே போறது? உன் புருஷன் ஒண்ணும் கை நிறைய சம்பளம் வாங்கற கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் இல்லை. அதெல்லாம் இப்ப வாங்க முடியாது."


"வர வர என்னால துணியே தோய்க்க முடியலைங்க...கையெல்லாம் வலிக்குது. வாசுகி வீட்ல கூட தவணை முறையில் வாங்கிட்டாங்க. அதுக்குக்கூடவா உங்களால முடியாது? எப்பப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டு பாடறீங்களே"...கோபமாய் பொரிந்தாள் மனைவி அகிலா.


"இதோ பார்... எப்பவும் மேலே இருக்கிறவங்களைப் பார்த்து பொருமிக்கிட்டிருக்காதே! நம்மளை விட கீழே இருக்கிறவங்களை கொஞ்சம் நினைச்சுப் பாரு! குடிசையிலும் பிளாட்பாரத்திலும் ஒரு வேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாம எத்தனை பேர் வாழறாங்க. நமக்காவது சொந்தத்தில் ஒட்டு வீடு இருக்கு. அதை நினைச்சு ஆறுதல் பட்டுக்கோ. வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ்ன்னு வீணா ஆசையை வளர்த்துக்காதே!" என்று மனைவியின் வாயை அடைக்கவும் வாசலில் "சார்" என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.


டியூசனுக்கு வந்த இரண்டு பையன்களையும் முன் அறையில் உட்கார வைத்தார் வேதாசலம்.


"என்னடா பாலு ...டெஸ்ட் பேப்பர் தந்துட்டாங்களா? கணக்கில் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கே?"


தயக்கத்துடன் பேப்பரை நீட்டினான் பாபு. " அறுபத்தோரு மார்க் சார்."


"என்னடா இவ்வளவு குறைச்சலா வாங்கியிருக்கே! தொண்டைத் தண்ணீர் வறண்டு போற அளவுக்கு தினமும் உங்களுக்கெல்லாம் சொல்லித் தர்றேன். அட்லீஸ்ட் தொண்ணூறு மார்க்காவது வாங்க வேண்டாமா?"


"கிளாஸ்ல நிறையைப் பேர் நாற்பதை தாண்டலை சார்."


"எப்பவும் கீழே பார்க்காதேடா, மேலேதான் பார்க்கணும். உனக்கு மேலே எத்தனை பேர் அதிகமா மார்க் வாங்கியிருக்காங்க. அவர்களை விட அதிகமா மார்க் வாங்கிக்காட்டணும்னு மனசுல ஒரு வெறி இருக்கணும். அப்போதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். புரிஞ்சுதா?"


நிமிர்ந்த வேதாசலத்தின் பார்வை கதவுக்கருகில் சென்றது . அங்கே உஷ்ணப் பார்வையை வீசியபடி நின்றிருந்த அகிலாவைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் கத்தி இறங்கியது மாதிரி சட்டென்று ஒரு குற்ற உணர்ச்சி.


"எப்பாடு பட்டாவது அடுத்த மாதத்திற்குள் அகிலாவுக்கு வாஷிங் மெஷின் வாங்கித் தந்துடணும்" ... தீர்மானித்தார் வேதாசலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக