மொத்தப் பக்கக்காட்சிகள்

4/21/2016

நடிகை அஞ்சலி தேவி வாழ்க்கை வரலாறு

அஞ்சலி தேவி: 1.
images for anjali devi க்கான பட முடிவு
‘ஆந்திர வட்டாரத்தில் ஓர் அழகுப் பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசினார்கள். நன்றாக நடனமாடுகிறாள். அவள் நாட்டியத்தைப் பார்க்காத கண்கள் இருந்து என்ன பயன்...?’

காக்கிநாடாவில் யுத்த நிதிக்காக அந்த ஆரணங்கு ஆடினாள். அந்த ஆட்டமும் அவள் அழகும் என்னை ஆகா...! என்று பாராட்ட வைத்தன.

அந்தப் பெண்ணைப் பற்றிய பூர்வீகத்தை அறிந்து அவளின் தந்தையிடம் போய்ப் பேசினேன்.

‘உங்களுடைய மகளை என்னுடன் நம்பி அனுப்புங்கள். அவளுடைய அழகும் ஆட்டமும் இந்தச் சிறு இடத்துக்குள் அடங்கிவிடக்கூடாது. என்னிடம் ஒரு நாடகக் குழு இருக்கிறது. அதில் தங்களுடைய குமாரி நடித்தால், அவள் விரைவில் பிரபலமாவாள். அந்தப் பொறுப்பும் உத்தரவாதமும் என்னுடையது’

‘அழைத்துச் செல்லுங்கள்’ என்று மறுபேச்சு பேசாமல், நம்பிக்கையின் இமயமாக முன் பின் அறியாத வாலிபருடன் தன் சீமந்தபுத்திரியை அனுப்பினார் நூக்கையா.
images for anjali devi க்கான பட முடிவு
அஞ்சனி குமாரிக்கும் மழலை முதலே நாடக வசனம் மனப்பாடம். ஏழு வயதுக்குள்ளாக லோகிதாசன், பாலகோபாலன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்பாவே முதல் ஆசான்!

பெத்தாபுரத்திலிருந்து 12 மைல் தூரத்தில் காக்கிநாடா. அங்குள்ள ‘பர்மாஷெல் நாடக சபா’வில் அஞ்சனி சேர்ந்தாள். நடிப்புடன் நாட்டியமும் மிக இயல்பாகப் பாதங்களில் பணிந்தது.

அப்பா நூக்கையாவுக்கும் அம்மா சத்யவதிக்கும் அஞ்சனியால் அன்றாடம் ஆனந்தம்!

குடும்பத்தில் மூத்த பெண் அஞ்சனி குமாரி. அவளுக்கு அடுத்து சுப்புலட்சுமி, கிருஷ்ணகுமாரி, மகன் பக்கீர்.

 சீக்கிரத்திலே நடனத்தில் அஞ்சனி குமாரி சிறகடித்துப் பறந்தாள். பத்து வயதுக்குள்ளாக தெருப்பாடகி, பிரேம விஜயம் நாடகங்கள் மூலமாகவும் அஞ்சனியின் புகழ் பரவியது.

அஞ்சனி குமாரி பிறந்தது, 1927 மே 14-ல்.

காக்கிநாடாவின் ‘யங்மென்ஸ் ஹேப்பி கிளப்’ மிகப் புகழ்பெற்ற கலாசாலை. அதில் நடிப்பு, படிப்பு, சங்கீதம் எல்லாமும் கற்றாள். வசனம் பேசும் திறமை, நாடகங்களால் அஞ்சனிக்கு வந்துவிட்டது.

அங்கு இசைப் பிரிவில் பணியாற்றியவர் ஆதி நாராயணராவ். ஆதி, அஞ்சனியின் அப்பாவுக்கு வழங்கிய உறுதிமொழி உயிர்பெற்றது. ஈடு இணையற்ற கலையரசியாக அங்கத்தினர்களை அதிசயிக்கச் செய்தாள் அஞ்சனி.

திருமணம்

அஞ்சனி பூப்பெய்தியதும், நாடகங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டாள். அறியாப் பருவத்திலேயே ஆதியுடன் அரும்பிய காதல் உணர்வு, ஆத்மாவின் ஆணிவேர் வரை ஊடுருவியது. நாள்களைக் கடத்தாமல் அஞ்சனியும் ஆதியும் கல்யாணத்தில் கை கோத்தனர்.

அவர்களது திருமண நாள், பாரதம் மறக்க முடியாத புரட்சி தினம். 1942 ஆகஸ்ட் 11. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ காந்தியால் அறிவிக்கப்பட்ட சரித்திர நாள்!

காக்கிநாடாவைக் கடந்தும் அஞ்சனியின் நாட்டிய நிகழ்ச்சிகள் பிரபலமாயின. 1943-ல் மீண்டும் யுத்த நிதிக்காக மதராஸ் கவர்னர் சர். ஆர்தர் ஹோப் தம்பதியர் முன்பாக ஆடினார் அஞ்சனி குமாரி. அரசியின் அன்புப் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்தது.

‘அஞ்சனி, உன் மனைவி ஆகட்டும் என்றுதான் காத்திருந்தேன். இனி உன்னை உரிமையோடு கேட்கிறேன் ஆதி. அஞ்சனி சினிமாவில் நடிக்க அனுமதி கொடு. என்னுடைய ‘கொல்ல பாமா’ படத்தில் மோகினியாக நடிக்கட்டும்’ என்றார் ஆதியின் குடும்ப நண்பரும் பிரபல சினிமா இயக்குநருமான சி. புல்லையா.
images for anjali devi க்கான பட முடிவு
‘உண்மை உழைப்பு வீணாகாது’ என்பதில் ஆதிக்கு அசாத்திய திடம்.

திரைப் பிரவேசம்

சி. புல்லையாவின் விருப்பப்படி, ஆதியின் ஆசை மனைவி அஞ்சனி குமாரி, ‘அஞ்சலிதேவி’யாகப் பெயர் மாற்றம் பெற்றார்.

கொல்ல பாமாவில் அஞ்சலி தேவி நடித்தார் என்று சொல்வதைவிட, அற்புதமாக ஆடினார் என்பதே மிகப் பொருந்தும்.

‘1946-ல் தயாரிப்பாளர் டி.வி. சுந்தரம், ‘மகாத்மா உதங்கர்’ என்ற பெயரில் தமிழ்ப்படம் எடுத்தார். அதில் வருகிற ரம்பா கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, நான் மோகினியாக நடித்த கொல்ல பாமாவை பார்த்திருக்கிறார். உடனே பிடித்துப்போய் என்னை அவரது சினிமாவில் ‘ரம்பா’வாக்கிவிட்டார்.

‘மோகினி, ரம்பா என்று தேவலோக சுந்தரிகளின் வேடங்களில் நடித்தாலும் நடித்தேன். அதுமாதிரி ரோல்களே துரத்திக்கொண்டு வந்தன.

‘அவை ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தின. அதிலும் அத்தகைய அழகிகள் வில்லிகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். எப்ப ஹீரோயின் ஆவோம்னு ஏங்க ஆரம்பிச்சிட்டேன்’ - அஞ்சலிதேவி.

மாடர்ன் தியேட்டர்ஸ், அஞ்சலியின் அவஸ்தைகளுக்குக்கு ஆறுதல் அளித்தது. 1948-ல், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளியான ‘ஆதித்தன் கனவு’ அஞ்சலியை நாயகியாக்கிய முதல் தமிழ்ப்படம். டி.ஆர். மகாலிங்கம் ஹீரோ.

1949 ஆகஸ்டு 6-ல் ரிலிசானது, ஜூபிடரின் ‘கன்னியின் காதலி’ கலையுலக மேதை என்று அழைக்கப்பட்ட கே. ராம்நாத் இயக்கியது.

‘விநோதமான கதை. விசித்திரமான சம்பவங்கள். ராம்நாத்-சேகர் இருவரின் அலங்காரமானத் தயாரிப்பு. இவையெல்லாம் சேர்ந்த உல்லாசமான சித்திரம்!’

‘அபூர்வமான கலாசிருஷ்டிக்கு அமோகமான ஆதரவு’

‘கன்னியின் காதலி’ விளம்பரங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.

ஆண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இளம் பெண்ணை வாலிபன் என்றெண்ணி, யுவதி ஒருத்தி நேசம் கொள்வதே கன்னியின் காதலி. இளைஞனாக மாதுரிதேவியும், அவரைக் காதலிக்கும் இளவரசியாக அஞ்சலியும் நடித்தார்கள்.

கண்ணதாசன் அறிமுகம்

மாதுரிதேவி, அஞ்சலிக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்த -

‘கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே!’

என்ற பாடலின் மூலம், திரையுலகில் கவிஞராக கண்ணதாசன் அறிமுகமானார்.

அடுத்து, ஆகஸ்டு 27-ல் வந்த ‘மாயாவதி’யில் அஞ்சலிதேவியும் டி.ஆர். மகாலிங்கமும் முத்தமிட்டுக்கொண்டார்கள். இளைஞர் சமுதாயம் கிறுகிறுத்துப்போனது.

 தேவலோக அழகியாக அஞ்சலிதேவி நடித்த மற்றொரு மகத்தான வெற்றிச் சித்திரம் ‘மங்கையர்க்கரசி’. செப்டம்பர் 3ல் வெளியானது.

எழிலார்ந்த பி.யூ. சின்னப்பாவின் வசீகரத்திலும் கம்பீரத்திலும் மனத்தைப் பறிகொடுத்து, அஞ்சலி அவரைத் தன்னோடு தூக்கிச் செல்வதே திரைக்கதை. கணவனைக் காணாது கண்ணீர் விட்டுக் கடைசியில் ஒன்று சேரும் கற்புக்கரசியாக கண்ணாம்பா.

பி.யூ.சின்னப்பாவின் சூப்பர் ஹிட் கந்தர்வ கானங்களான ‘காதல் கனிரசமே’, ‘பார்த்தால் பசி தீரும் பங்கஜ வதனச் செங்கனிவாய்ச் சிரிப்பை’ இரண்டும் மங்கையர்க்கரசியின் மகத்தான ஓட்டத்துக்கு மகிமை சேர்த்தன.

ஒரு மாதத்துக்குள் அஞ்சலி நடித்த மூன்று டாக்கிகள் வெளிவந்தது பரபரப்பை ஏற்படுத்தின. அவை மூன்றுமே வெற்றிகரமாக ஓடின. வெவ்வேறு காரணங்களுக்காகத் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடமும் பிடித்தன.

தென்னகத்தில் அஞ்சலியின் மார்க்கெட் சூடு பிடித்த சமயம். அவரது அரிதார வாழ்க்கையையே எரித்துச் சாம்பலாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் மங்கையர்க்கரசி ஷூட்டிங்கில் நடந்தது.
images for anjali devi க்கான பட முடிவு
தீ விபத்து

‘தேவலோகம் பற்றி எரியும் காட்சி. நாற்புறமும் பயங்கரமாக வெப்பம் பரவியது. நான் அப்படியும் இப்படியும் அலறியவாறு ஓட, என் புடைவையிலும் நெருப்புப் பிடித்துக்கொண்டது.

சுற்றிலும் செந்தழல்களுக்கு மத்தியில் நான் சிக்கிக்கொண்டேன். என் முகமெல்லாம் அக்னியின் அதிரடித் தாக்குதல். சில விநாடிகளில் கோரமாகிப்போனது என் முகம். தீப்பட்டுப் புண்ணான முகத்தைக் குணப்படுத்த மாதக்கணக்கானது.

கண்ணாடியைக் கண்களில் படாமல் மறைத்து வைத்தார் கணவர். வசீகரமான என் முகம் காண்போருக்குக் குரூரமாகத் தெரியப்போகிறது. இனி என் ‘நாயகி வாழ்வு கோவிந்தா’ என்று நினைத்து மனமொடிந்து போனேன்.

வெங்கடாசலபதி எங்கள் குல தெய்வம். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது!’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவள் நான்.

திருப்பதி பெருமாள்... அந்த ஏழுமலையான் என்னைக் கைவிடவில்லை.

காயமெல்லாம் ஆறிய பின் என் முகம் அழகாக இருப்பதுபோல் தோன்றியது. எல்லா இடங்களிலும் தீப்புண் ஆறிவிட்டாலும், கரு விழிகளின் கீழ், இமையின் இரு புறமும் கந்திய கருமை இருந்தது.

அழகுச் சாதனங்களால் ஏற்படக்கூடிய செயற்கையான முக அழகை அக்னி தேவன் எனக்கு அளித்துவிட்டான்’ - அஞ்சலிதேவி.

மர்மயோகி

நாயகனாக எம்.ஜி.ஆரும் வில்லியாக அஞ்சலியும் தோன்றிய படம் ‘மர்மயோகி’. ஜூபிடர் தயாரிப்பு. ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் டாக்கி. 1951 பிப்ரவரி 2-ல் மக்களைச் சந்தித்தது.

கறுப்புச் சட்டை அணிந்து மக்கள் தலைவன் கரிகாலனாக,

’நான் குறி வைத்தால் தவறாது. தவறுமானால் குறி வைக்கமாட்டேன்’ என்று வீர வசனம் பேசி, அக்கிரம ஆட்சி நடத்தும் அஞ்சலிதேவி மீது எம்.ஜி.ஆர். கத்தி வீசுவார்.

எம்.ஜி.ஆர். எறிந்த கட்டாரி, இலக்கு தவறாமல் அஞ்சலியின் கழுத்துக்கு ஓர் அங்குலம் அருகே, அரசியின் அரியணையில் பதிந்து நிற்கும்! அக் காட்சி காண்போரை இன்றைக்கும் வியக்க வைக்கும்.

கே.ராம்நாத் இயக்கிய மர்மயோகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திப் பிரமாதமாக ஓடியது.

‘மறக்க முடியாத மர்மயோகி!’

‘அப்ப எனக்கு 21 வயசு. அந்த வயதில் வேர்விடும் கடைவாய்ப் பல் ஒன்று எனக்கும் முளைத்தது. ஒரு பக்கக் கன்னம் அப்படியே வீங்கிவிட்டது.

கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் மிகப்பெரிய அளவில் செட் போட்டு மர்மயோகி க்ளைமாக்ஸ் எடுத்தார்கள். முக வீக்கம் குறையட்டும் என்று எம்.ஜி.ஆர். இரண்டொரு நாள்கள் எனக்காகக் காத்திருந்தார்.

என்ன சிகிச்சை மேற்கொண்டும் வலி குறையவில்லை. மர்மயோகிக்காக எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த தேதிகள் தீர்ந்தன.
images for anjali devi க்கான பட முடிவு
எனக்கும் சென்னை வாஹினி ஸ்டுடியோவில் ஷூட்டிங் இருந்தது.

அதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், மர்மயோகி முடிந்த பிறகே ஜூபிடர் நிறுவனம் மதராஸுக்கு இடம் பெயர்ந்தது.

ஜூபிடர் எனது தாய் வீடு. எனக்கொரு நிழல் தந்து என்னை வளர்த்துவிட்டது. அன்னைக்கு துரோகம் செய்வதா...!

பாழாய்ப்போன பல்வலியால் மர்மயோகியின் இறுதிக்கட்ட வேலைகள் மாதக்கணக்கில் தடைப்பட்டன.

எனக்காகச் சென்னையில் செட் போட்டுக் காத்திருந்தனர். அந்த சினிமாவே என் கையை விட்டுப் போனாலும் போகட்டும். என்ன ஆனாலும் சரி, மர்மயோகி படத்தை முடித்துத் தராமல் புது ஒப்பந்தங்களில் நடிக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன்.

வீக்கம் அடியோடு மறைந்து என் முகம் பழைய நிலைக்கு வந்ததும், மர்மயோகியில் நடிக்கத் தயாரானேன். எம்.ஜி.ஆர். மிக்கப் பெருந்தன்மையுடன் எனக்காகத் தன் கால்ஷீட்டை மாற்றிக் கொடுத்து மர்மயோகி முடிவடைய பரிபூரண ஒத்துழைப்பு வழங்கினார்.

எல்லாம் சுபமாக முடிந்தது. ஜூபிடர் முதலாளி சோமு என்னிடம்,

‘அம்மா என் கஷ்டம் உணர்ந்தவள் நீ. பொறுமையாகக் காத்திருந்து நடிச்சுக் கொடுத்து என்னைக் காப்பாத்திட்டே’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

மர்மயோகியால் கிடைத்த லாபம், சென்னையில் ஜூபிடர் பிக்சர்ஸ் நிலைகொள்ளும் அளவுக்கு நிலைமையை மாற்றியது.

மர்மயோகி மட்டும் ஓடியிருக்காவிட்டால், ஜூபிடர் சென்னைக்கு வந்திருக்காது. மிகப்பெரிய அளவில் சாதனைச் சித்திரங்களைத் தயாரித்துப் புகழ் பெற்றிருக்காது.

மர்மயோகி முடிந்த பிறகு, முதலாளி எங்களைப் பழநிக்கு அழைத்துச் சென்றார். தண்டாயுதபாணி ஸ்வாமியைத் தரிசிக்கக் கீழேயிருந்து மலைக்கு நடந்தே சென்றோம்.

அப்ப போன பழநிதான். அப்புறமா பழநிக்கு இன்று வரை போக முடியவில்லை. ஆனா அன்று மூலவருக்கு நடந்த அபிஷேகம் இப்பவும் நினைவில் நிக்குது’ - அஞ்சலிதேவி.

அஞ்சலி தேவி: 2. எங்கெங்கு காணினும்...!

எம்.ஜி.ஆர்.- அஞ்சலிதேவி இணைந்து நடித்த முதல் படம் சர்வாதிகாரி. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் முரசு கொட்டியது. மாடர்ன் தியேட்டர்ஸில் அஞ்சலியின் ஹாட்ரிக் வெற்றி! அதற்குக் காரணம் அஞ்சலியின் அபார நடிப்பு!

சர்வாதிகாரியாகத் துடிக்கும் எம்.என். நம்பியாரின் ‘கைப்பாவை மீனாவாக’ வருவார் அஞ்சலி. தளபதி சித்தூர் வி. நாகையா. அவரது மெய்க்காப்பாளன் எம்.ஜி.ஆரை மயக்குவது போல் நடிக்க வேண்டிய கட்டத்தில் நிஜமாகவே அவரைக் காதலிக்கத் தொடங்குவார்.

‘கண்ணாளன் வருவாரே... என் ராஜன் வருவாரே... பேசி மகிழ்வேனே... ’

சினிமாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி இருந்த நிலையில் அஞ்சலியின் நடிப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது சர்வாதிகாரி.

காதலுக்கும் கடமைக்கும் நடுவில் அவர் தவிக்கும் தவிப்பு, நடுவில் நிஜம் அறிந்த நாயகனின் புறக்கணிப்பு அத்தனையையும் தன் முகத்தில் காட்டி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார் அஞ்சலி.

ஆடலரசி மட்டும் அல்ல. நடிப்பாற்றல் நிரம்பியவர் என்று ருசுப்படுத்தியது. தமிழகத்தில் அஞ்சலியை ஸ்திரப்படுத்தியது.

தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கி, எம்.ஜி.ஆருக்குப் ‘புரட்சி நடிகர்’ பட்டம் நிலைக்கக் காரணமாக இருந்த மகத்தான வெற்றிச் சித்திரங்கள் மர்மயோகியும் - சர்வாதிகாரியும்.

சின்னத்திரைகளில் முழு நேர சினிமா ஒளிபரப்பு வரும் வரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டே இருந்தன.
images for anjali devi க்கான பட முடிவு
எம்.ஜி.ஆர் - அஞ்சலி இணை பட முதலாளிகளின் ராசியான ஜோடி ஆயிற்று.

மக்கள் திலகம் பற்றி அஞ்சலி-

‘பெண்களை தெய்வமாக மதிப்பவர் எம்.ஜி.ஆர். சில நேரம் ஓடிக் கொண்டிருக்கும் காமிரா நின்றதும், அவர் பார்வை என் மீது படும். உடனே டைரக்டரிடம் போய், கரண்டைக் காலுக்கு மேலே புடைவை தூக்கிக்கொண்டு இருக்கிறது. சரி செய்த பிறகு திரும்பவும் அக்காட்சியை எடுங்கள் என்பார்.

அப்போது தான் எனக்கே விவரம் புரிந்தது. காட்சியின் போதான எம்.ஜி.ஆரின் கவனம் தெரிந்தது. பெண்மையை அவர் மதிக்கும் பண்பு புரிந்தது. எந்த விஷயத்திலும் உன்னிப்பான கவனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். ’

அடுத்தடுத்தத் தொடர் வெற்றிகளால் 1951 அஞ்சலியின் ஆண்டாகிப் போனது. ‘எங்கெங்கு காணினும் அஞ்சலியடா! ’ என்கிற நிலை.

தென்னகமெங்கும் எல்லா டாக்கீஸ்களிலும் வருடம் முழுவதும் அஞ்சலியின் படங்களே ஓடின. ஒரு சுவர் பாக்கி இல்லாமல் அஞ்சலி நடித்த சினிமா விளம்பரங்கள் நீக்கமற நிறைந்திருந்தன.

‘மனமோகன லாவண்யத்துக்கு மற்றொரு பெயர் அஞ்சலி. அதி அற்புத சவுந்தர்யத்துக்கு இன்னொரு பெயர் அஞ்சலி. பட உலகில் இவர் ஒரு மாயக்காரி, மயக்குக்காரி, சிங்காரி, ஸ்வப்ன சுந்தரி. ’ என்றெல்லாம் மூத்த சினிமா நிருபர் நவீணன் அஞ்சலியைப் போற்றி 1951ல் எழுதினார்.

தமிழகத்தின் பெரும் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளில் அஞ்சலி பங்கேற்க நல்ல வாய்ப்பை 1954 முதன் முதலாக அளித்தது.

பொன்வயல் ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு. அவருடைய பங்குதாரர் குணச்சித்திரக் கலைஞர் கே. சாரங்கபாணி.

கல்கியின் ‘பொன்மான்கரடு’ என்கிற புதினமே பொன்வயலாக திரையில் அறுவடையானது. கே. சாரங்கபாணியும் கல்கியும் சிறந்த நண்பர்கள்.

‘பொன்மான்கரடு’ உரிமையைப் பெறுவதற்காக டி.ஆர்.ராமச்சந்திரனை, கல்கியிடம் அழைத்துச் சென்றார் கே. சாரங்கபாணி.

‘இந்தக் கதை சினிமாவுக்கு ஏற்றதுதானா...? என்று சிந்தித்து எடுங்கள். என் கதை என்பதற்காக பொன்மான்கரட்டைப் படமாக்கி நஷ்டப்படாதீர்கள்’ என்றார் கல்கி, கே. சாரங்கபாணியிடம்.

‘பட அதிபராக எனது முதல் அனுபவம் பொன்வயல். அதில் என்னுடன் நாயகியாக நடித்தவர் அஞ்சலிதேவி. மிக அருமையாக எங்களுடன் ஒத்துழைத்தார். அவரால் எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் ஏற்படவில்லை.

மிகப் பெரிய ஸ்டாராக இருப்பினும் ஒப்புக் கொண்ட தேதிகளில் சரியாக வந்து நடித்துக் கொடுத்தார். பொன்வயல் வெற்றிகரமாக ஓடி நிறைய லாபத்தைச் சம்பாதித்துத் தந்தது.’ - டி.ஆர். ராமச்சந்திரன்.

‘கதை வசனம் - அறிஞர் அண்ணா’ என்று முதல் முறையாக விளம்பரப்படுத்திய சினிமா சொர்க்கவாசல். அண்ணாவின் பரிமளம் பிக்சர்ஸ் தயாரிப்பு.
images for anjali devi க்கான பட முடிவு
‘புதுமுக நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் உச்ச நட்சத்திரம் அஞ்சலி ஜோடி சேருவாரா’ என்கிறத் தயக்கம் அண்ணா உள்பட அனைவருக்கும் இருந்தது.

அண்ணா ஓர் உபாயம் சொன்னார்.

‘தயாரிப்பு நிர்வாகிகளுடன் எஸ்.எஸ். ஆரே நேரில் சென்று, அஞ்சலியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு நடிக்க அனுமதி கேட்கட்டும். அஞ்சலி எடுக்கும் முடிவே இறுதியானது. ’ என்றார்.

சேடப்பட்டி இளம் காளை! சூரிய நிறத்தில் வனப்பும் வசீகரமும் வளம் சேர்க்கத் தன் முன் பணிவாக நின்று, உடன் இணை சேர கோரிக்கை விடுத்த அதிசயத்தை முதன் முதலாகக் கண்டார் அஞ்சலி.

அண்ணாவைத் தேடி வந்து, ‘இவர் தான் என்னுடன் நடிக்கப் பொருத்தமானவர். இவரையே நடிக்க வையுங்கள்... ’ என்றார். புதுமுகம் எஸ்.எஸ்.ஆரை, நொடி நேர யோசனையும் இன்றி ஆதரித்து நாயகனாக அங்கீகரித்தார் அஞ்சலி.

கே.ஆர். ராமசாமி - பத்மினி, எஸ்.எஸ். ஆர்.- அஞ்சலி என்கிற வித்தியாசமான காம்பினேஷனில் வெளியானது ‘சொர்க்கவாசல்’.

பகுத்தறிவுப் பாசறையாகப் புகழ் பெற்று அண்ணாவின் உரிமைக்குரலை எங்கும் தமிழ் முழக்கம் செய்து வெற்றி வலம் வந்தது.

ரா.வே. என்று மிகச் சுருக்கமாக அழைக்கப்பட்ட ரா. வேங்கடாசலம் எழுதிய கதையை ஏவி.எம். ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் படமாக்கியது. (தமிழில் பெண், தெலுங்கில் சங்கம், இந்தியில் லடுக்கி)

மூன்றிலும் அஞ்சலி- வைஜெயந்திமாலா முதன் முதலாக இணைந்து நடித்தார்கள்.

அஞ்சலியின் ஜோடி ஜெமினி கணேசன். அவர் ஹீரோவாக ஒப்பந்தமான முதல் படம் பெண். அவர் முதன் முதலில் காதல் காட்சியில் நடித்ததும் அஞ்சலியுடன் தான்.

‘நான் மாடிப்படிகளில் ஏறிச் செல்வேன். என் எதிரில் அஞ்சலிதேவி மாடியிலிருந்து இறங்கி வருவார். இருவரும் முட்டிக் கொள்வோம். ’

இதுவே நான் நடித்த முதல் லவ் சீன். எம்.வி. ராமன் டைரக்ட் செய்தார். ஏவி.எம்மில் அதற்காக 40 முறை ஒத்திகை பார்த்தார்கள். காட்சியை எடுத்து முடிக்க ஏழு டேக் ஆகியது. ’ - ஜெமினி கணேசன்.

அஞ்சலியுடன் மிக அதிக வெற்றிப்படங்களில் நடித்த ஒரே தமிழ் ஹீரோ ஜெமினி கணேசன். அதற்கு அரங்கேற்றம் ஏவி.எம்.மின் பெண்.

டி.கே.ஷண்முகம் குழுவினர் நடத்திய வெற்றிகரமான நாடகம் ஸ்ரீதரின் முதல் கதையான ரத்தபாசம்.

‘ ரத்தபாசம்’ படத்தில் நடிப்பதற்காக அஞ்சலிதேவியை அழைத்தோம். நாடகத்தைப் பார்த்த அவர், அதில் கதாநாயகியாக நடித்த எம். என். ராஜத்தின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.

‘ராஜம் நன்றாகத்தானே நடித்திருக்கிறார். அவரையே நீங்கள் ஏன் சினிமாவிலும் பயன் படுத்தக்கூடாது? ஒரு சிறந்த கதாநாயகியை நீங்கள் அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் பெருமை கிடைக்குமே! ’ என்றார் அஞ்சலி.

அவரது உள்ளம் உயர்ந்தது. சக நடிகையின் வாய்ப்பை நாம் தட்டிப் பறிக்கலாகாது என்று பெருந்தன்மையுடன் பேசினார் அஞ்சலி.

ஸ்டார் வேல்யூவுக்காக அஞ்சலி ரத்தபாசம் சினிமாவில் அவசியம் நடிக்க வேண்டும் என்று விளக்கினோம். அதன் பிறகே சம்மதித்தார்’.- டி.கே. ஷண்முகம்.
images for anjali devi க்கான பட முடிவு
ரத்தபாசம் படத்தில் வீதியில் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தும் அழகியாக அஞ்சலி நடித்தார். அவருக்கு ஜோடி டி.கே. ஷண்முகம்.

ரத்தபாசம் மிகப்பெரிய வசூலோடு வெற்றிகரமாக ஓடியது. உடனடியாக ஏவிஎம்.அதை இந்தியில் ரீமேக் செய்தது.

அஞ்சலியின் கவர்ச்சிக் கன்னி இமேஜை அடியோடு உடைத்து எறிந்தது 1955. மார்ச் 12ல் வெளியான பத்மினி பிக்சர்ஸ் ‘முதல் தேதி’, எடுத்த எடுப்பில் அதற்குக் கட்டியம் கூறியது. முழு நீள சோகச் சித்திரம்! நடிகர் திலகத்துடன் அஞ்சலி முதன் முதலாக இணைந்து நடித்தார்.

‘எந்தவொரு கலைஞருக்கும் நடிகர் திலகத்துடன் இணைந்த பின் நடிப்பில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும்! ’ என்பது வரலாறு. அந்தச் சரித்திரத்தில் அஞ்சலிக்கும் முதல் தேதி மூலம் இடம் கிடைத்தது.

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த ஏழைத் தாயாக அஞ்சலி அற்புதமாக நடித்த ‘முதல் தேதி’ வசூலில் தோல்வி அடைந்தது. ஆனாலும் அஞ்சலியின் மாறுபட்ட நடிப்புக்கு மக்களிடையே வரவேற்பு பெருகியது.

‘முதல் தேதி’ தொடங்கி அஞ்சலி மறக்க முடியாத குணச்சித்திர நாயகி ஆனார்!

தாய்க்குலம் அஞ்சலியை நோக்கிக் கை தொழும் நிலையை உண்டாக்கிய திருப்புமுனைச் சித்திரம் கணவனே கண் கண்ட தெய்வம்! 1955ன் கொடும் கோடையில் மே 6ல் திரைக்கு வந்தது.

அண்ணாவின் படைப்பான ‘சொர்க்க வாசலில்’ அஞ்சலியின் நடிப்பு நாராயணன் கம்பெனியாரை வெகுவாகக் கவர்ந்தது. மறு தினமே ‘கணவனே கண் கண்ட தெய்வத்தில்’ ஒப்பந்தம் செய்தார்கள்.

ஏகப்பட்டப் படங்களில் நடித்த போதும் அஞ்சலி வசன ஒத்திகைகளுக்கும் நாள் தவறாமல் சென்றார். நாராயணன் கம்பெனி முதலாளிகளுக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களது தயாரிப்புகளில் அஞ்சலிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரிசையில் நின்றன.

பாலகனான மகன் தன் தந்தையைக் காப்பாற்றும் நோக்கத்தில் குகைக்குள் சிக்கிக் கொள்வான். வெளியே அஞ்சலி தலையை முட்டிக் கொண்டு கதறி அழும் உச்சக்கட்டக் காட்சி படமானது.

சினிமா ஷூட்டிங் என்பதை மறந்து அஞ்சலி சுவற்றில் மோதிக் கொண்டதில் நிஜமாகவே நெற்றியில் பலமான காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிவதையும் கவனிக்காமல், உண்மையான தாயாகவே மாறி உணர்ச்சிகளைக் கொட்டி நடித்தார் அஞ்சலி!

அதைக் கண்டு ஒட்டு மொத்த யூனிட்டும் அதிர்ந்தது.

ஷாட் முடிந்தும் அஞ்சலியின் பதற்றம் சற்றும் குறையவில்லை. அன்னை உடல் நடுநடுங்கியபடியே இருந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த இடத்திலேயே வெட்டப்பட்ட மரம் போல் மூர்ச்சையாகித் தரையில் விழுந்தார் அஞ்சலி.

ஜெமினிகணேசனும் அஞ்சலியும் ஜோடி சேர்ந்து நடித்தவற்றில் வசூலிலும் ஓட்டத்திலும் வரலாறு படைத்தது கணவனே கண் கண்ட தெய்வம்.

தொடக்கத்தில் வீர சாகஸங்கள் புரியும் வசீகர வாலிபன் விஜயன் - பின்னர் நாக தேவதையின் சாபத்துக்கு ஆளாகி, குரூபியாகவும் கூனனாகவும் உருமாறும் பரிதாபமிக்கத் தோற்றம்- இரண்டிலும் சக்கை போடு போட்டார் ஜெமினி.

கதாபாத்திரமாகவே மாறி விட்டார் என்பார்கள். அஞ்சலி அதையும் கடந்து நின்றார் கண்ணீர் சிந்தும் நடிப்பில்!

கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளையையும் ஒரு சேரக் காப்பாற்றும் பொருட்டு அஞ்சலி, அம்பாளிடம்

‘ஓ! மாதா! மாதா! வந்தருள் விரைந்து நீ தா! ஜெகன் மாதா! ’

என்று பாடி கதறிய போது உடன் சேர்ந்து அழுதது மகளிர் கூட்டம்.

பி. சுசிலாவின் அழியாப் புகழுக்குப் பிள்ளையார் சுழி போட்டு, எம்.ஏ. ராமாராவ்- ஹேமந்த் குமார் இருவர் இசையில் கணவனே கண் கண்ட தெய்வம் படப் பாடல்கள் காலத்தை வென்று வாழ்கின்றன இன்றும்.

‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா

கண் வளராய் என் ராஜா’

தாலாட்டுப் பாடல்களின் தனி மகுடம்!

நாராயணன் கம்பெனியார் இந்தியில் ஜெமினிக்குப் பதிலாக முதலில் திலீப் குமாரை நடிக்க அழைத்தார்கள். அவருக்குப் படத்தையும் போட்டுக் காட்டினார்கள். அதன் பிறகே ‘தேவதா’வில் ஜெமினி ஹீரோ என்று தீர்மானமாயிற்று.

ஆனால் நாயகி அஞ்சலி என்பது ஆரம்பத்திலேயே முடிவான ஒன்று!

தேவதா இந்திப் பட விளம்பரங்களில் அஞ்சலியின் பெயரே முதலில் காணப்பட்டது. அதனை அடுத்து ஆர். கணேஷ், வைஜெயந்திமாலா என்று பட்டியல் தொடர்ந்தது.

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...?,

பொன்னான வாழ்வு மண்ணாகிப்போமா துயரம் நிலைதானா? ’

போன்ற மிக இனிமையான சூப்பர் ஹிட் பாடல்களுக்காகவே தமிழ் நாட்டில் நிரந்தரமாக ஓடியது ‘டவுன் பஸ். ’ 1955 தீபாவளி வெளியீடு.

எம்.என். கண்ணப்பா என்கிற அதிகம் பிரசித்தி பெறாத கலைஞருடன் அஞ்சலி ஜோடியாக நடித்திருந்தார்.

அஞ்சலிக்கு மிக வித்தியாசமாக ‘அமுதா’ என்கிறத் ‘தனியார் பேருந்து நடத்துனர்’ வேடம்.

கண்டக்டர் யூனிபார்மில் தலையில் தொப்பியும், கூலிங் கிளாசுமாக ரைட் சொல்லி, முதலும் கடைசியுமாகத் தோன்றிய ஒரே லேடி சூப்பர் ஸ்டார் அஞ்சலி மட்டுமே.

1956 -ன் கோடையும் ஜெமினி - அஞ்சலி ஜோடிக்குத் தொடர்ந்து பெருமை சேர்த்தது. காரணம் தாபி சாணக்யா இயக்கி வெளியான ‘காலம் மாறிப் போச்சு’ ஏழை விவசாயிகளின் துயரங்களை அப்பட்டமாகச் சொன்னது. ஓஹோ என்று ஓடி அநாயாசமாக வசூலித்தது.

 ‘ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்னண்னே’ சூப்பர் ஹிட் பாடலை நாட்டுப் புறங்களில் இப்போதும் பெரிசுகள் பாடக் கேட்கலாம்.

அதே ஆண்டின் இறுதியில் ஜெமினி-அஞ்சலியின் அடுத்த பம்பர் ஹிட் மாதர் குல மாணிக்கம். சாவித்ரி - ஏ. நாகேஸ்வரராவ் மற்றொரு இணை.

சாவித்ரியின் தாய் மண்ணான விஜயவாடாவில் ‘பாலராஜூ’ பிரமாதமாக ஓடியது. அதில் அஞ்சலி ஆடிய நாட்டுப்புற நடன அசைவுகள் பாலகி சாவித்ரிக்கு அத்துபடி. நினைவு தெரிந்த நாள் முதலாக அஞ்சலியின் ரசிகை!

அஞ்சலி மாதிரியே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சாவித்ரி, அவருடன் இணைந்து நடித்த ஒரே தமிழ்க் குடும்பச் சித்திரம் மாதர் குல மாணிக்கம். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெற்றிக்கனியைப் பறித்தது.

‘அரியலூர் ரயில் விபத்து’ என்ற நிகழ்கால சம்பவத்தைக் கொண்டு உடனடியாக உருவான சினிமா. டைரக்டர் டி.பிரகாஷ் ராவ்.

காலம் மாறிப் போச்சு, மாதர் குல மாணிக்கம் இரு படங்களின் தொடர் வெற்றியும் வசூலும் அஞ்சலிக்கு ஆரத்தி எடுக்க வைத்தன.

அஞ்சலி தேவி: 3. பிறவிக் கலைமணி!
By ப. தீனதயாளன்

1957 ஜனவரி ‘பேசும் படம்’ அஞ்சலி குறித்து நீண்ட பாராட்டுக் கட்டுரையைப் பிரசுரித்தது. அதில் நிறைவாகக் காணப்பட்ட வரிகள் அஞ்சலியின் நட்சத்திர அந்தஸ்தை பறை சாற்றின.

‘அஞ்சலி இன்றையத் திரையுலகில் சக்கரவர்த்தினி. பட உலகில் அடி எடுத்து வைத்தது முதல் ஓயாமல் நடிக்கும் சிரஞ்சீவி நடிகை. அஞ்சலிக்குத் தொடர்ந்து அதிகப்படங்கள் இருந்து வருகின்றன.

அஞ்சலி பிறவிக் கலைமணி! ’

1957ன் தைத் திருநாளையொட்டி ஜனவரி 18ல் வெளியானது சக்கரவர்த்தித் திருமகள்! அஞ்சலிக்கு மற்றொரு ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்தது.

சக்கரவர்த்தித் திருமகளாக இளவரசி ‘கலா மாலினி’யாக எம்.ஜி.ஆருக்கு இணையான கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிப்பில் புகழ் கொடி நாட்டினார்.

புரட்சி நடிகருடனான அறிமுகக் காட்சியில் ஆண் உடையில் தோன்றி தன்னை‘மோகன்’ என்கிற யுவராஜாவாகக் காட்டிக் கொள்வார். வில்லியாக வரும் எஸ். வரலட்சுமியால் கடைசி வரையில் ஹீரோவை அடைய முடியாத சிக்கல்களில் அவதியுற்றுத் தவிப்பார்.

தன்னுடைய அரியணையில் எஸ். வரலட்சுமியை, எம்.ஜி.ஆரின் பட்ட மகிஷியாகப் பார்த்துப் பதறியவாறு அஞ்சலி பாடி ஆடிடும் ‘எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ வஞ்சனையாலே வலை வீசியே... ’ காலங்களைக் கடந்தும் உருக்கமாக ஒலிக்கிறது.

அதற்கு ஓர் உதாரணம். 2016 பிப்ரவரி 3ல் புதன்கிழமை இரவில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில் அப்பாடலைப் பாடிய ‘பஃரிதா’ என்கிற பாடகிக்குக் குவிந்த பாராட்டு.

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் தி.மு.க. அபிமானிகளுக்கும் ‘சக்கரவர்த்தித் திருமகள்’ என்றும் நினைத்தாலே தித்திக்கும் சர்க்கரைப்பொங்கல். காரணம் அதில் புரட்சி நடிகரின் கதாபாத்திரப் பெயர் உதயசூரியன்!

எம்.ஜி.ஆர். வேண்டுமென்றே அந்தப் பெயரை வைத்துக் கொண்டதாகப் பத்திரிகைகள் விமர்சித்தன.

 மூன்று மொழிகளில் அதிரடியாக ஓடி‘கணவனே கண் கண்ட தெய்வம்’ சம்பாதித்த செல்வாக்கும் அஞ்சலிக்குத் தேடித் தந்த பேரும் புகழும் தென்னகத் திரையுலகில் ட்ரென்ட் செட்டராக அமைந்தன.

மீண்டும் மாயாஜாலப் படங்களுக்கான மவுசு கூடியது. நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம், காத்தவராயன் உள்பட ஏராளமான மந்திர தந்திரக் கதைகள் டாக்கிகளாகி அணி வகுத்து நின்றன. மற்ற படாதிபதிகள் சம்பாதிக்கும் போது அஞ்சலி பிக்சர்ஸ் மட்டும் வேடிக்கை பார்க்குமா...?

ஜெமினியின் மதனகாமராஜன், பி.யூ. சின்னப்பாவின் ஜெகதலபிரதாபன், ஜூபிடரின் மோகினி, அலாவுதீனும் அற்புத விளக்கும், மாயாபஜார் போன்ற வெற்றிச் சித்திரங்களின் சம்பவங்களோடு ஓர் அவியலான திரைக்கதைக்குத் தலை அசைத்தது.

‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற அதே ஸ்டைல் டைட்டிலோடு ஜெமினி-அஞ்சலி ஜோடியாக நடிக்க படம் வேகமாக வளர்ந்தது. முடிவடையும் தருணத்தில் அஞ்சலி கேள்விப்பட்டத் தகவல் அவரைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

‘ஜூபிடர்ல அப்ப ஜெமினி- சாவித்ரி ஜோடியா நடிக்க ‘கற்புக்கரசி’ன்ற படத்தை எடுத்தனர். எங்கத் தயாரிப்புக்கும் ஜூபிடர் பிக்சர்ஸூக்கும் ஒரே காமிராமேன் எம்.ஏ. ரஹ்மான்.

மாயாஜாலக் காட்சிகளைப் பிரமாதமா எடுக்க அப்ப அவரை விட்டா வேற ஆள் கிடையாது. ஜெமினி கணேசன் கல்லாயிடற சீன் அன்னிக்கு எடுக்க இருந்தோம். அதோட ஷூட்டிங் ஓவர்.

ஷாட்டுக்கு எல்லாம் தயாரான நிலையில் ஒளிப்பதிவாளர் எம்.ஏ. ரஹ்மான், பதற்றமா எங்க அஞ்சலி பிக்சர்ஸ் ஆபிசுக்கு ஓடி வந்தார்.

‘ஆதி ஆதின்னு என் கணவர் பெயரைச் சொல்லிக் கிட்டே நின்னவர், மேலே பேச முடியாமத் தவிச்சார். அவருடையத் துடிப்பும், பரபரப்பும் எங்களுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணுச்சு.
images for anjali devi க்கான பட முடிவு
காமிராமேனை ஓரளவுக்கு ஆசுவாசப்படுத்தி மெல்ல விஷயத்தைக் கேட்டோம். தயங்கித் தயங்கி வார்த்தைகள் அகப்படாமல் அவர் சொன்னது -
‘ஆதி உங்க படத்துலயும் கற்புக்கரசியிலும் ஹீரோ ஜெமினி கணேசன் கல்லாயிடற மாதிரி ஒரே சீன் ரிபிட் ஆகுது. ’ எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. லட்சக் கணக்கில் செலவழித்து ரிலீசுக்கும் நாள் குறித்த நிலையில், எங்கள் படத்திலும் கற்புக்கரசியிலும் ஒரே மாதிரியான கதை, காட்சிகள் இடம் பெற்றால் அது பெரிய ஆபத்து ஆயிற்றே!

முதலில் திரைக்கு வந்து மக்கள் ரசிக்கிற படமே வெற்றி பெறும். மற்றது எவ்வளவுதான் சிறப்பாக எடுக்கப்பட்டு இருந்தாலும், அதற்கு ஜனங்களின் அங்கீகாரம் ரெண்டாம் பட்சமாகவே இருக்கும்.

இரண்டில் ஓடப் போகிற படம் எது...? அம்பேலாகிற சினிமா எது...?

எங்களின் தூக்கம் மட்டுமல்ல. ஜூபிடர் முதலாளியின் உறக்கமும் அதனால் போயே போச்!

ஜூபிடர் சோமு பல தினங்கள் சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்தார். என் கணவரிடம்,

‘ஆதி, நீ அறிவித்தத் தேதியில் உன் படத்தை முதலில் ரிலீஸ் செய். கற்புக்கரசியை சில வாரங்கள் கழித்து நான் திரையிடுகிறேன். ’ என்றார். அதைக் கேட்டதும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

எங்களுக்காக நஷ்டப்படக் கூட ஒருவர்...!

அதிலும் என்னை மின்னல் வேகத்தில் முன்னுக்குக் கொண்டு வந்த என் எஜமானர்!

‘நீங்கள் எனக்காக விட்டுக் கொடுங்கள்... ’ என்று உத்தரவு போடாமல், நிராதரவான நிலையிலும் உறுதியாக உதவ முன் வருகிறார்!

நாங்கள் எதிர்பாராத இன்ப நெருக்கடி..! அதுவரைக் கலை உலகில் எங்கும் யாரிடமும் முன் பின் பார்த்திராதத் தமிழ்ப் பண்பாட்டின் உச்சம்..!

இப்படியொரு மனிதரா ஜூபிடர் சோமு!

எந்தப் பட அதிபரும் அத்தகைய ரிஸ்க்கான அறிவுரையை வழங்க மாட்டார்கள். ஜூபிடர் சோமுவின் பெருந்தன்மையைச் சொற்களில் சொல்லி மாளாது.

தான் வாழ வேண்டும் என்று எண்ணுவது மானுட இயல்பு. தன்னால் எல்லாரையும் வாழ வைக்க முடியும் என்பது நம்மைப் படைத்த பகவானின் தெய்வீக குணம்.

முதலாளி சோமு எங்களின் கண்ணுக்கு நாங்கள் வழிபடும் திருப்பதி ஏழுமலையானாக விஸ்வரூபக் காட்சி அருளினார்.

அஞ்சலி பிக்சர்ஸ் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ 1957 மே 24ல் மக்களைச் சந்தித்தது. ஜூபிடர் பிக்சர்ஸ் கற்புக்கரசி 21 நாள்கள் இடைவெளியில் ஜூன் 14ல் வெளியானது.

ஜனங்கள் இரு படங்களையும் பார்த்து ரசித்தார்கள். எங்கள் முதலாளி சோமுவின் நல்லெண்ணத்துக்கு எல்லாமே நல்லவிதமாகவே நடந்தது.

நாயகன் ஜெமினி கணேசனுக்கு இரண்டிலும் ஜாக்பாட் அடித்த பெருமை கிடைத்தது. ’ -அஞ்சலிதேவி.

 அஞ்சலியின் கணவர் ஆதிநாராயாணராவின் இசை ஆளுமைக்கு மணாளனே மங்கையின் பாக்கியம் பாடல்கள் மிகச் சிறந்த உதாரணம்.

ஏழு நிமிடங்கள் ஒலிக்கக் கூடிய சப்தஸ்வர சங்கீத அருவிகளான

‘அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆரூயிரே மறவேன்’

வேங்குழல் கீதமும் பி. சுசிலாவின் குரலும் இழைந்து இழைந்து நம் இருதயங்களில் இசை ரங்கோலி போடும்.

ஆதி சிவனுக்கு உகந்த ஆரூத்ரா, சிவராத்திரி, பிரதோஷ தினங்களில் அனைத்து வானொலிகளும் மறவாமல் ஒலிபரப்புச் செய்யும்

‘ஜெகதீஸ்வரா... பாஹி பரமேஸ்வரா... ’

இரண்டும் என்றும் பி. சுசிலாவின் பெருமை பேசும். தனியார் சேனல்களின் சூப்பர் சிங்கர் போட்டிகளில் நாள் தவறாமல் இடம் பெறும் கந்தர்வ கானங்கள்.

‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ மரபு வழி மாதரசிகளுக்கு மகத்தானப் பரிசாக அமைந்தது. அதை ஆனந்த விகடன் தனக்கே உரித்தான கேலி கிண்டலோடு வெளிப்படையாக விமர்சித்தது.

மீனாட்சி அம்மாள் - - ------ படத்துல அந்தக் கமண்டலம் இருக்கு பாருங்க, அது எது கேட்டாலும் கொடுக்கும்!

சண்முகம் பிள்ளை – ‘அது என் கிட்டே இருந்தா, நல்ல தமிழ்ப்படமா ஒண்ணு கொடேன்னு கேப்பேன். ’

மீனாட்சி அம்மாள்- - ---‘ஏன் இதுக்கு என்ன குறைவாம்! ஒரொரு இடத்துல அப்படியே மனசை உருக்குதுங்க.

சண்முகம் பிள்ளை - - ‘இப்படி நீ சொல்வன்னு தெரிஞ்சுதானே இந்த மாதிரிக் கதைகளைப் படம் எடுக்குறாங்க. ஒரே போக் லோர்; ட்ரிக் ஷாட்; காக் அண்ட் புல் ஸ்டோரி. ’

மீனாட்சி அம்மாள்- -- ‘நீங்க சொல்றது ஒண்ணும் எனக்குப் புரியல்லே. படம் பார்க்க நல்லா இருக்குது. நல்லாவும் புரியுது. ஆனால் எனக்கு சொல்லத்தான் வரலே.

ஜெமினி கணேசனும் அஞ்சலியும் அற்புதமா நடிச்சிருக்குதுங்க! ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே டான்ஸ் மயம் தான். அஞ்சலி, ராஜசுலோசனா, கிரிஜா, ஈ.வி. சரோஜா, சூர்யகலான்னு எல்லாரும் ஆடறாங்க. ஜெமினி கணேசன் கூட ஆடறாரு!

படம் பார்க்கிறதுக்குப் பளிச்சுன்னு இருக்குது. அரண்மனைகளும், தேவ சபைகளும், மாட மாளிகைகளும் நல்லா இருக்குதுங்க.

சண்முகம் பிள்ளை - - ‘அஞ்சலிதேவி நடிச்ச படங்களிலே எது உனக்கு ரொம்பவும் புடிச்சது ? ’

மீனாட்சி அம்மாள் -‘எதுக்குக் கேக்கறீங்க? ’

சண்முகம் பிள்ளை -‘ இதே அஞ்சலிதேவி நடிச்ச அற்புதமான படம் ஒண்ணு, ‘அனார்கலி’ன்னு பேரு! ஆனா வசூலே ஆகலே. எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இதே டைரக்டர் எடுத்த படம் தான் அது. ’

இது என்னடான்னா பழைய கதம்பமா இருக்குது. மந்திரமும், மாயமும், ஜாலமும் தான் இருக்குது. ஆனால் நல்லா ஓடும் போல தோணுது! காலம் அப்படியிருக்கு! ’

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்டக் கருத்து வேறுபாட்டால் தேவர் பிலிம்ஸ் தாய்க்குப் பின் தாரம் வெற்றிக்குப் பிறகு ரஞ்சன் - அஞ்சலி ஜோடியாக நடிக்க நீலமலைத் திருடன் படத்தைத் தயாரித்தது.

தேவர் அழுமூஞ்சி அஞ்சலிக்கு அரை நிஜார் மாட்டி விட்டு, கையில் கத்தியைக் கொடுத்து சினிமா ஸ்டண்ட் செய்ய வைத்தார்.

அதற்கு ஏதுவாக மகளிருக்கான உரிமை கீதம், மிக எளிய கவிதை நடையில் உயிரோட்டமான சொற்களோடு

‘கொஞ்சும் மொழி பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி

வஞ்சகரை எதிர்த்திடவே வாளும் ஏந்த வேணுமடி’

சூப்பர் ஹிட் பாடலும் ஜிக்கியின் குரலில் இன்று வரை ஒலிக்கிறது.

எம்.ஜி.ஆர் - பானுமதிக்கு இணையாக ரசிக்கும் படியான ஜனரஞ்சகமான நடிப்பை ரஞ்சனும் - அஞ்சலியும் வழங்கினர்.

100 நாள்கள் ஓடி வசூலில் அட்டகாசம் புரிந்து, எம்.ஜி.ஆர். இன்றியும் தேவர் நிமிர்ந்து நிற்க முடியும் என்று நீலமலைத் திருடன் நிருபித்தது.

பொதுவாக நடிகைகள் தங்களின் காதல் கணவர் பற்றிப் பத்திரிகைகளில் பேட்டி அளிப்பது தொட்டில் பழக்கம்.

ஆதி நாராயண ராவ் தென்னகத்தின் மிகப் பிரபலமான இசை அமைப்பாளர் மற்றும் படத்தயாரிப்பாளர். பண்பாடு மிக்கவர் என்று கோலிவுட் அமரர்களால் போற்றப்பட்டவர்.

‘முதன் முதலில் எனது பாடலுக்குப் பெரும் தொகை கொடுத்து அப்படியே என் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றவர், அஞ்சலிதேவியின் கணவர் ஆதி நாராயண ராவ். ’ - கண்ணதாசன்.

சினிமாவில் நடிக்க வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் தென்னகத்தில் எவராலும் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக அஞ்சலி மீண்டும் மீண்டும் மின்னிய வருடம் 1957.

ஆதி அப்போது தன் ‘சாதனை மனைவி அஞ்சலி! ’குறித்து, ‘குமுதம்’ இதழில் வழங்கிய நேர்காணலின் சில பகுதிகள்-

1956 வரையில் அஞ்சலி நடித்து 50 படங்கள் வந்திருக்கின்றன. எப்போதும் அவர் தன் கூட நடிப்பவர்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை.சோர்வு என்றால் என்னவென்றே தெரியாது அஞ்சலிக்கு.

ஒரே நாளில் மூன்று ஷூட்டிங் என்றாலும் பட அதிபர்கள் எவரையும் ஏமாற்ற மாட்டார். குறிப்பிட்ட நேரத்தில் சென்று நடித்து விட்டுத் திரும்புவார்.

வீட்டில் மிக எளிமையாக இருப்பார். ‘பிரபல நடிகை’ அந்தஸ்தோ அடையாளமோ தெரியாது. மிகச் சாதாரணமான சேலையில் நடமாடுவார். வருடம் தவறாமல் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதில் அலாதி ஆனந்தம் அஞ்சலிக்கு.

‘எவரோ ஒரு புண்ணியவான் எனக்குத் தர வேண்டிய நடிப்புக் கூலி பாக்கியை, முழுவதும் தந்து விட்டதாகச் சொன்னீர்கள் அல்லவா! அதற்காகத்தான் இந்தக் காணிக்கை’ என்பார்.

பெருமாளை வழிபட்ட உற்சாகத்தில் திருப்பதியிலிருந்து திரும்பி வரும் போது காரில் குலுங்க குலுங்கச் சிரித்துக் கொண்டே வருவார்.

அஞ்சலியின் நட்சத்திர மதிப்பு உயர உயர வீட்டில் காலண்டர் கிழிக்கக் கூட நேரம் கிடையாது. வீடு சத்திரமாகி விட்டது.

நாங்கள் இல்லாத நேரத்தில் அவள் பெயரையும், என் பெயரையும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டே எவராவது வந்து சாப்பிட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். ’

1960 அஞ்சலிக்கு அதிர்ஷ்டமான மற்றொரு ஆண்டு. அடுத்த வீட்டுப் பெண், ஆட வந்த தெய்வம், எங்கள் செல்வி, மன்னாதி மன்னன் என ஒன்றுக் கொன்று மாறுபட்ட வேடங்களில் அஞ்சலி நவரஸ நடிப்பை வழங்கினார்.

‘பக்க இண்டி அம்மாயி’ என்ற அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்பே தமிழில் அடுத்த வீட்டுப் பெண்.

அதற்கு ஸ்ரீதர் உரையாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார் அஞ்சலி. முன் பணமாக ஆயிரம் ரூபாயையும் கொடுத்தார்.

ஸ்ரீதரின் முதல் கதையான ‘ரத்தபாசம்’ அஞ்சலியின் நடிப்பில் வெற்றி பெற்று, சினிமா எனும் சொர்க்க வாசலைத் திறந்ததால், அஞ்சலி மீது ஸ்ரீதருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

‘பக்க இண்டி அம்மாயி’ தெலுங்கை விடத் தமிழில் கூடுதலாக ஹாஸ்ய அமர்க்களம் செய்து மராத்தான் ஓட்டம் ஓட வேண்டும். அதற்குத் தனது எழுத்து பயன் படட்டும்’ என்று மனமார விரும்பினார்.

மூலப்படத்தில் இருந்து திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்தால் விறுவிறுப்பும் காமெடியும் சற்று அதிகரிக்கும் என்பது ஸ்ரீதரின் அபிப்ராயம். தனது எண்ணத்தை அஞ்சலியிடம் தெரிவித்தார்.

அஞ்சலிக்கும் அளவு கடந்த ஆனந்தம். ஸ்ரீதரின் பங்களிப்பு தன் தயாரிப்புக்கு மேலும் வசூல் சேர்க்கும் என்று நன்றி கூறினார்.

அதோடு கூடச் சீக்கிரத்தில் ஸ்ரீதர், அவர் நினைக்கும் மாற்றங்களைச் செய்து ஸ்கிரிப்டைத் தர வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொண்டார்.

1960களில் இந்திய சினிமாவின் இமாலயப் படைப்பாளிகளில் ஒருவர் ஸ்ரீதர். அவரது ஒவ்வொரு நகர்வும் தலைப்புச் செய்தியாயிற்று. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலும் அவர் பிஸி!

ஏராளமான வேலைகளுக்கு நடுவே அஞ்சலி ஒப்படைத்தப் பணியைச் செய்து முடிக்கத் தாமதமாகியது.

ஸ்ரீதர் வசனம் எழுதி முடித்து விட்டாரா...? என்று அஞ்சலி பிக்சர்ஸ் நிர்வாகிகள் அவ்வப்போது விசாரித்தனர்.

அஞ்சலிக்கு இருப்பு கொள்ளவில்லை.

ஸ்ரீதர் இனி புதிதாகச் சிந்தித்து உரையாடல் எழுத வேண்டாம். தெலுங்கு டயலாகை தமிழில் மொழி பெயர்த்தாலே போதும்’. என்று தன் ஊழியரிடம் கூறி அனுப்பினார்.

'ரத்த பாசம்’ ஸ்ரீதரை அஞ்சலியின் வார்த்தைகள் ரணப்படுத்தின.

ஓர் உண்மையான படைப்பாளி, இன்னொரு எழுத்தாளரின் சொற்களை அப்பட்டமாக 'காப்பி’ அடிப்பது அவமானம் என உணர்ந்தார்.

ஓர் இக்கட்டான சூழலில் அஞ்சலி கொடுத்திருந்த அட்வான்ஸ் ஆயிரம் ரூபாயையும், கதை வசன ஃபைலையும் கொடுத்து அனுப்பினார்.

ஸ்ரீதரும் தன்னைப் போன்ற பட முதலாளி. திரைத் தொழிலின் அவஸ்தைகளை நன்கு உணர்ந்தவர் - கால விரயம் செய்ததோடு மட்டுமல்லாமல், காசோலையையும் திருப்பித் தந்து அவமதித்ததில் அஞ்சலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

ஸ்ரீதர் இல்லாமலேயே 'அடுத்த வீட்டுப் பெண்’ சினிமாவை சிறப்பாகத் தன்னால் வழங்க முடியும் என்று நிருபித்தார்.

ஒரு முழு நீள நகைச்சுவைச் சித்திரத்தில் அஞ்சலியை நாயகியாக ஜனங்கள் எதிர்பார்க்கவில்லை. கவர்ச்சி, கண்ணீருடன் ஹாஸ்யமும் தனக்கு அத்துபடி என்று அஞ்சலி அதிரடியாக ஜெயித்துக் காட்டினார்.

சித்ராலயா கோபுவின் உத்தரவின்றி உள்ளே வா, கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா, சுந்தர் சி.யின் உள்ளத்தை அள்ளித்தா, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா எல்லாமே அடுத்த வீட்டுப் பெண்ணின் மறு அவதாரங்கள்.

பி.சுசிலாவுக்கு கணவனே கண் கண்ட தெய்வம், எம்.எஸ். ராஜேஸ்வரிக்கு டவுன் பஸ், என்று அஞ்சலியின் உதட்டசைவு புது வாழ்வு பெற்றுத் தந்ததைப் போல்,

பி.பி. ஸ்ரீனிவாஸின் குற்றால குரலுக்குத் தமிழகத்தில் நிரந்தர மேடை அமைத்தது அடுத்த வீட்டுப் பெண்.

'வனிதா மணியே, மலர்க் கொடி நானே - மகிழ்ந்திடுவேனே..., கன்னித் தமிழ் மணம் வீசுதடி... என எல்லாமும் சூப்பர் ஹிட் பாடல்கள்.

பிரபல எழுத்தாளர் 'எல்லார்வி’ எழுதியது 'கலீர் கலீர் ’ தொடர்கதை.

அன்னையின் ஆணை படத்துக்குப் பின்னர் பாரகன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவாஜி - பத்மினி நடிப்பில் சி.ஹெச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் உருவாக இருந்தது.

நடிகர் திலகமும்-பத்மினியும் 1957ல் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்த நேரம். அவர்களின் கால்ஷீட் கிடைக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற திரை கானங்களில் ஒன்று - 'மாலையிட்ட மங்கை’யில் ஒலித்த 'செந்தமிழ்த் தேன்மொழியாள்! ’ டி.ஆர். மகாலிங்கத்துக்குப் பட உலகில் மறு மலர்ச்சி தந்தது.

இன்றளவும் சூப்பர் சிங்கர் போட்டிகளில் சிறப்பிடம் வகிக்கிறது.

டி.ஆர். மகாலிங்கத்தை நாயகனாக்கி, 'கலீர் கலீர்’ ஆட வந்த தெய்வமாக உருவானது. அதில் நாட்டிய நங்கையாக அஞ்சலி.

'பஹாடி’ என்கிற இந்துஸ்தானி ராகத்தில் டி.ஆர். மகாலிங்கம் - பி. சுசிலாவின் மயக்கும் குரல்களில் டூயட்டாக ஒலிக்கும்

'கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்

கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்’

அர்த்த ஜாமங்களில் செந்தேனை செவிகளில் சேர்த்து விட்டுப் போகும்.

இப்பாடல் காட்சியில் வில்லன் வீசி எறியும் கண்ணாடித் துண்டுகளுக்கு இடையேயும் அஞ்சலி அற்புதமாக ஆடுவார். கே.வி. மகாதேவன் இசையில் இனிமையான பாடல்கள் நிறைந்த படம் ஆட வந்த தெய்வம்.

இதே பாடல் இன்னொரு முறை பி.சுசிலா - பி. லீலாவின் இணைந்த குரல்களிலும் ஒலிக்கும்.

ஏறக்குறைய முப்பது வயதைக் கடந்த நிலையிலும் அழகும் இளமையும் கொலுவிருக்க, அஞ்சலி ஆடிய ஆட்டம் படத்தின் வெற்றிக்கு விதையூன்றியது.

'சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

அதைச் சொன்னாலும் கேட்பவர்க்குப் புரியவில்லை’

பி. சுசிலாவின் குரலில் ஒலித்த அற்புதப் பண். அஞ்சலியின் உதட்டசைவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அமைந்த 'எங்கள் செல்வி’ படப் பாடல் அது.

ஏ.நாகேஸ்வர ராவ்- அஞ்சலி தம்பதியராக நடித்த நல்ல சினிமாக்களில் எங்கள் செல்வியையும் சேர்த்துக் கொண்டார்கள் தமிழர்கள்.

1960ல் தொடர் தோல்விகளால் இலேசாக மங்கியிருந்தது பொன்மனச் செம்மலின் புகழ் வெளிச்சம். தீபாவளி வெளியீடுகளில் மன்னாதி மன்னனுக்கு மக்கள் மகுடம் சூட்டியதால், மீண்டும் புரட்சி நடிகரின் கவுரவம் நிலைத்தது.

கவிஞர் கண்ணதாசனின் 'ஆட்டணத்தி-ஆதிமந்தி’ மன்னாதி மன்னனாகத் திரை வடிவம் பெற்றது.

எம்.ஜி.ஆரால் கவர்ந்து வரப்படும் கரிகாலன் மகள் கற்பகவல்லியாக அஞ்சலியும், புரட்சி நடிகரின் காதல் பைங்கிளி சித்ராவாக நாட்டியப் பேரொளி பத்மினியும் பங்கேற்ற படம்.

அஞ்சலியை விட சித்ராவாக வரும் பத்மினிக்கே நடிக்கச் சந்தர்ப்பம் கூடுதலாக இருந்தது. காரணம் மன்னாதி மன்னன் படத்தைத் தயாரித்த நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸின் ஆஸ்தான நாயகி பத்மினி.

ஆனாலும் டைட்டிலில் அஞ்சலியின் பெயரை முதலில் போட்டுப் பெருமைப்படுத்தினார் பட அதிபரும் டைரக்டருமான நடேசன்.

'என்றும் எம்.ஜி.ஆரின் ராசியான ஜோடி அஞ்சலி! ’ என்பது பரிபூரணமாக நிருபனமானது.

'காவிரித்தாயே காவிரித்தாயே காதலர் விளையாட பூ விரித்தாயே! ’

என்று கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பாடலில் அஞ்சலிக்காக ஒலித்த குரல் கே. ஜமுனாராணி.

 பி.சுசிலா, எம்.எஸ். ராஜேஸ்வரி வரிசையில் கே. ஜமுனாராணிக்கும் அஞ்சலிக்கு வாயசைத்ததால் புதுப் புகழ் வாய்த்தது.

ஏராளமான இனிய பாடல்களால் மன்னாதி மன்னனுக்குத் தாய்ப்பால் ஊட்டியவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டி.கே. ராமமூர்த்தி.

எம்.ஜி.ஆரின் அதிகப்படியான அழுகைப் பாடல்களுக்கு ஒட்டுமொத்தக் குத்தகைதாரர் டி.எம்.எஸ். ஆனால் மன்னாதி மன்னனில் பி.பி. ஸ்ரீநிவாஸ் -பி.சுசிலா- கே. ஜமுனா ராணி குரல்களில் மயிலிறகின் வருடலாக

'நீயோ... நானோ... யார் நிலவே...

அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே... ’

சூப்பர் ஹிட் சோக கீதம் அமைதியான இரவுப்பொழுதுகளில் ஆயிரம் அர்த்தங்கள் கூறி இனிமை சேர்க்கிறது இன்றும்.

அஞ்சலியின் நடிப்பில் 1961 தீபாவளி ரிலீஸ் பங்காளிகள்.

ஜெமினிகணேசன் - அஞ்சலி தொடர்ந்து ஜோடியாக ரசிகர்களை மகிழ்வித்த சமயம். அவர்கள் இருவரையும் அண்ணன் தங்கையாகப் பாச மழையில் நனைவித்தது பங்காளிகள்.

1962 ஆகஸ்டு 31ல் அஞ்சலி பிக்சர்ஸின் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் வெளியானது. வழக்கமான ஜெமினி - அஞ்சலி ஜோடியுடன் எம்.ஆர். ராதாவும் நடித்த மாயாஜாலப்படம். பத்திரிகை விமர்சனங்களை மீறி வசூலை வாரித் தந்தது.

‘அருகில் வாராய் எனைப் பாராய்

அபயம் நீயே மகாதேவா

அருகில் வா வா என்னைக் கா வா’

பி. சுசிலாவின் தேன் குரலில் மாறுபட்ட பாடலாக சூப்பர் ஹிட் ஆனது.

1963 . தெலுங்குப் பட உலகின் முதல் வண்ணச் சித்திரம் லவகுசா. அதில் என்.டி. ராமாராவ் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகவும், அஞ்சலி சீதாப்பிராட்டியாகவும், ஜெமினி கணேசன் லஷ்மணனாகவும் நடித்து ஜனங்களை ஆட்கொண்டார்கள்.

ஆண்டு முழுவதும் ஓடி ஆந்திராவில் பொன்விழா கொண்டாடியது லவகுசா.

'லவகுசா வெளியான நேரம். யாரும் என்னை சொந்தப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. சீத்தம்மா சீத்தம்மா என்றே அழைப்பார்கள். அந்த அளவு சீதையாகவே என்னை பாவித்தார்கள். பொது இடங்களில் பார்க்கிற பலர் 'சீத்தம்மா ஆசீர்வாதம் பண்ணுங்க’ என்று காலிலேயே விழத் தொடங்கினார்கள். அதற்காகவே நான் பயந்து ஓடி ஒளிந்தது உண்டு. ’ - அஞ்சலிதேவி.

லவகுசா தமிழிலும் வந்து பிரமாதமாக ஓடியது.

கே.வி. மகாதேவனின் இசையில் ஏ. மருதகாசியின் காவிய வரிகளில் ஒலித்த

'ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே

அதை தினமும் தினமும் பாடிடுவோம் கேளுங்கள் இதையே’

பல காண்டங்களை உள்ளடக்கிய ராமாயணத்தைப் பத்து நிமிடங்களில் உலகெங்கும் பக்திப் பறை சாற்றிற்று.

'பராசக்தி’யில் முழுதாக நடித்து முடித்து, படம் திரைக்கு வருமா...? ’ என்கிற அவல நிலை வி.சி. கணேசனுக்கு, ஏவி. மெய்யப்பச் செட்டியாரால் ஏற்பட்டது.

பரிதாபகரமான சூழ்நிலையில் கணேசன் வாய்ப்பு தேடிச் சென்ற இடம் அஞ்சலி பிக்சர்ஸ்.

கணேசனுக்கு மிகத் தைரியமாக இரண்டாவது ஹீரோ வாய்ப்பை வழங்கினார் எல்.வி. பிரசாத். ஏ.நாகேஸ்வர ராவுக்கும் அஞ்சலிதேவிக்கும் மருமகனாக கணேசன் நடித்த படம் பூங்கோதை.

ஒரே நேரத்தில் தமிழிலும், பரதேசி என்ற பெயரில் தெலுங்கிலும் உருவானது. இரண்டிலும் கணேசன் இடம் பெற்றார்.

சிவாஜிகணேசனை ஆந்திராவில் எடுத்த எடுப்பில் அறிமுகப்படுத்திய பெருமை அஞ்சலியைச் சேரும்!

 பராசக்தி வெளிவர ஆறு மாதங்களுக்கு முன்னரே ஏப்ரல் 1952 பேசும் படம் இதழில்

'சிவாஜி யார்...? ’ என்றே திரை ரசிகர்களுக்குத் தெரியாத நிலையில், 'பூங்கோதை’ சினிமா விளம்பரத்தில்

அஞ்சலி, ஏ. நாகேஸ்வரராவ், எஸ். வி. ரங்காராவ் பெயர்களுக்கு அடுத்து நாலாவதாக,

'வி.சி. கணேசன்’ என்று நடிகர் திலகத்தின் பெயரையும் சேர்த்துப் பெருந்தன்மையுடன் வெளியிட்டது அஞ்சலி பிக்சர்ஸ்.

ஒரு பட விளம்பரத்தில் சிவாஜி கணேசன் பெயர் இடம் பெற்றது அதுவே முதல் முறை என்று உறுதியாகச் சொல்லலாம்.

சிவாஜி - அஞ்சலி லவ் டூயட் பாடி நடித்த ஒரே படம் 1959ல் வெளியான நான் சொல்லும் ரகசியம்.

கணேசனுக்கு அதில் சித்தார்த்தன் மாதிரியான மாறுபட்ட வேடம். பணக்கார இளைஞனாக வாழப்பிடிக்காமல் ரிக்ஷா ஓட்டுவார். அஞ்சலி கணேசனின் அத்தை மகள். நிஜமாகவே ஏழை. இருவருக்கும் இடையே வித்தியாசமாக சைக்கிள் ரிக்ஷா பேக் ரவுண்டில் ட்ரீம் சாங் இடம் பெறும்.

பி.பி. ஸ்ரீநிவாஸ்- பி. சுசிலா இரு குரல் இசையில் ஒலித்தது சூப்பர் ஹிட் பாடலான

'கண்டேனே உன்னைக் கண்ணாலே காதல் ஜோதியே! ’

பி.பி. ஸ்ரீநிவாஸ் சிவாஜிக்காகப் பாடிய ஒரே சிரஞ்சீவி கீதம்!

ஏறத்தாழ ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு 1971ல் முக்தா பிலிம்ஸ் 'அருணோதயம்’ படத்தில் சிவாஜியும் அஞ்சலியும் தாயும்- மகனுமாக நடித்தார்கள்.

சிவாஜிக்கு ஜோடியாகவும், அன்னையாகவும் உரு மாறிய நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர்.

நன்றி மறவாதவர் நடிகர் திலகம். அஞ்சலி மீது அபாரமான மதிப்பும் மரியாதையும் நிரம்பியவர். அவரைத் தன் வாழ் நாள் முழுவதும் 'முதலாளியம்மா’ என்கிற அர்த்தத்தில் 'பாஸ்’ என்றே அழைத்தார்.

பட்டிக்காடா பட்டணமா, வசந்தமாளிகை என்று 1972ல் இரு வெள்ளிவிழாப் படங்களை ஒரே ஆண்டில் தந்து சிவாஜி புதிய சாதனை படைத்திருந்த நேரம்.

சித்ராலயா ஸ்ரீதரின் ' ஹீரோ 72 ’படத்துக்கு கால்ஷீட் தர முடியாத நெருக்கடி. ஏராளமாகப் புது ஒப்பந்தங்கள் அணி வகுத்து நின்றன.

அத்தகைய கெடுபிடியான காலக் கட்டத்தில் அஞ்சலி தனது பக்த துகாராம் வண்ணத் தயாரிப்பில்,

நடிகர் திலகம், 'சத்ரபதி சிவாஜியாக’ சிறப்புத் தோற்றத்தில் நடித்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

'சிவாஜியும் நானும் அதிகப் படங்களில் இணைந்து நடிக்கவில்லை. உண்மையில் இருவரும் நிற்க நேரமில்லாமல் ஏராளமாக நடித்து முடிக்க வேண்டி இருந்தது.

ஆனாலும் பாருங்கள்... சிவாஜிக்கு எங்க கம்பெனின்னா ஒரு தனி மரியாதை.

'என் பாஸ் பண்ற படமாச்சே... அதில் நடிக்காமல் இருப்பேனா...! ’ என்று உற்சாகமாக ஒப்புக் கொண்டு, ஐதராபாத் வந்து அங்கேயே தங்கியிருந்து நடித்துக் கொடுத்தார். ’ அஞ்சலிதேவி.

மிகக் குறுகிய காலத்தில் தயாராகி, 1973 ஜூலை 5 ல் பக்த துகாராம் தமிழிலும் வெளியானது.

ஏ.நாகேஸ்வர ராவ் பக்த துகாராம். அவரது மனைவியாக அஞ்சலி நடித்திருந்தார்கள்.

பக்த துகாராமைத் தண்டிக்க வேண்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக ஏறக்குறைய படத்தின் அரை மணி நேர க்ளைமாக்ஸ் முழுவதும் சிவாஜி கணேசனின் சிம்மக் குரல் ஒலித்தது.

தனது முதலாளியம்மாவுக்காக கணேசனே டப்பிங் பேசியிருந்தார்.

மனப்பூர்வமான ஒத்துழைப்போடும் அருமையான ஆளுமை மிக்க நடிப்போடும் கணேசன் படத்தின் வெற்றிக்கும் மகத்தான வசூலுக்கும் அஸ்திவாரமாக நின்றார்.

சத்ரபதி சிவாஜியாக கணேசனை முழு நீள சினிமாவில் காண முடியாமல் போனது நமது துரதிர்ஷ்டம். அஞ்சலி மூலம் ரசிகர்களின் ஆசை பத்து விழுக்காடு நிறைவேறி இருக்கும்.

இதுவரையில் திரையில் சத்ரபதி சிவாஜியை கவனியாதவர்கள், அடிக்கடி சன் லைஃப் சேனலில் ஒளிபரப்பாகும் பக்த துகாராம் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

நடிகர்திலகத்தைக் கை தூக்கி விட்டவர்கள் எவரையும் மறக்காமல்,2002 முதல் ஆண்டு தோறும் கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் முதல் தேதி அன்று- 'சிவாஜி - பிரபு அறக்கட்டளை’ பாராட்டி ஐம்பதாயிரம் ரூபாய் பரிசளித்து நன்றி கூறுகிறது.

அந்த வரிசையில் 2003 அக்டோபர் 1ல் அஞ்சலிதேவிக்குச் சிறப்புச் செய்தார்கள் சிவாஜி குடும்பத்தினர். ஏ.நாகேஸ்வரராவ் - கமல்ஹாசன் இருவரும் விசேஷ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

லவகுசாவுக்குப் பின்னர் அஞ்சலியை நாயகியாகக் காண முடியாமல் போனது. எழுத்தாளர்  மகரிஷியின் மறக்க முடியாத புதினம்  ‘பனிமலை’.  ‘என்னதான் முடிவு? ’ என்கிற டைட்டிலில்  கே.எஸ். கோபாலகிருஷணனின் அற்புத படைப்பு. திரையில் ஓடாமல் போனது.

அதில் அஞ்சலி முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்.

‘அஞ்சலிதேவி கடைசியாக வந்தாலும் கவனத்தைக் கவர்கிறார். முடிவாக இது ஒரு புது முயற்சி! ’ என்று ஆனந்த விகடன் ஆதரித்து எழுதியது.

ஏவி.எம். ராஜனுக்கு நாயகன் அந்தஸ்து நிலைக்கக் காரணமாக இருந்த படம் என்னதான் முடிவு? ஏனோ அதற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய சமூகச் சித்திரமாக கமல் போன்றவர்களால் என்றும் கொண்டாடப்படுகிறது என்னதான் முடிவு.

அஞ்சலியின் செகன்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக ஆரம்பித்தது. குணச்சித்திர நடிப்பில் அடுத்து 1965  தீபாவளிக்குக்  கலைஞரின் பூமாலை மணம் சேர்த்தது.

ஏவி.எம்.மின் ‘பக்தப்பிரகலாதா’ தெலுங்கு வண்ணச்சித்திரத்தில் அஞ்சலிக்கு இரண்ய கசிபுவின் மனைவி லீலாவதி வேடம்.

இரண்யனாக எஸ். வி.ரங்காராவ் - பிரகலாதனாக பேபி ரோஜாரமணி இருவருக்கும் இடையில் அஞ்சலியின் தாய்மை பொங்கும் நடிப்பு பக்தப் பிரகலாதாவைத் தமிழிலும் பேச வைத்தது.

 தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் பணியாற்றிய காலம் முடிந்து, இளைய தலைமுறைக் கலைஞர்கள் முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களில் ‘அம்மா’ வேடங்களில் அஞ்சலி நடித்து வந்தார்.

1974 தைத்திருநாள் கொண்டாட்டம் ஸ்ரீதர் -பொன்மனச் செம்மல் முதன் முதலாக இணைந்த உரிமைக்குரல் வெற்றிச்சித்திரம்!

ஏ.நாகேஸ்வரராவ் நடித்த தசராபுல்லடு தெலுங்கு ரீமேக். அதில் ஏ.என்.ஆரின் அண்ணியாக அஞ்சலி நடித்திருந்தார்.

‘அடுத்த வீட்டுப் பெண்’ சினிமாவில் ஏற்பட்டக் கசப்பை மறந்து  ஸ்ரீதர்,  அஞ்சலியை அதே வேடத்தில்  தமிழிலும் அழ வைத்தார். அதில் அஞ்சலியின் கணவராக எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தவர்  எஸ். வி. சகஸ்ரநாமம்.

உரிமைக்குரல் பட்டி தொட்டிகளில் ஓடி அஞ்சலியை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்தது. 1979 தீபாவளிக்கு தேவர் பிலிம்ஸின் தமிழ்- தெலுங்கு வெளியீடு அன்னை ஓர் ஆலயம்.

அதில் ரஜினியின் அம்மாவாக இரு மொழிகளிலும் அஞ்சலிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு அமைந்தது. பெற்ற பிள்ளையைக் காப்பதற்காக மதம் பிடித்த யானையிடம் மாட்டிக் கொண்டு உயிரை விடும் வேடம்.

அஞ்சலியின் மறைவைத் தாங்க இயலாமல் டி.எம். எஸ்ஸின் கம்பீரக்குரலில் ரஜினி பாடுவதாக வரும்

‘அம்மா நீ சுமந்த பிள்ளை  சிறகொடிந்த கிள்ளை’ கல்யாண சத்திரங்களிலும் ஒலித்தது.

அஞ்சலி நிறைவாக ஓரிரு சினிமாக்களில் பங்கேற்றார்.

1982ல் கங்கை அமரன் இயக்கத்தில் பொழுது விடிஞ்சாச்சு படத்தில் பிரபுவின் பாட்டியாகவும், 1987 பொங்கல் ரிலிசான சத்யா மூவிஸ் காதல் பரிசு படத்தில் கமல்ஹாசனுடனும் அஞ்சலியைக் காண முடிந்தது. 

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் கலை உலகில் வெற்றி பவனி வந்தவர் அஞ்சலி. தமிழை விடத் தெலுங்கில் வசூல் சாதனை புரிந்து பிரமாதமாக ஓடிய அத்தனைப் படங்களிலும் அஞ்சலியே ஹீரோயின்.

அஞ்சலி- ஏ. நாகேஸ்வரராவ் இணைந்து நடித்த ஏராளமான வெற்றிச் சித்திரங்கள் ஆந்திர சகோதரர்கள் அனைவருக்கும் திகட்டாத திரை விருந்தாக இன்னமும் நினைவில் நிற்கும்.

தமிழில் 50, தெலுங்கில் 64, இந்தியில் 10 ஆக 1967 மார்ச் வரையில்  அஞ்சலி 124 படங்களில் நடித்துள்ளதாக பொம்மை மாத இதழ் ஒரு குறிப்பை வழங்கியுள்ளது.

தமிழில் அஞ்சலியோடு அதிகப்படங்களில் ஜோடி சேர்ந்த கதாநாயகன் ஜெமினி. காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதம்- 2006ல் ஜெமினி கணேசன் பற்றிய நேர்காணலுக்காக அஞ்சலிதேவியைச் சந்தித்தேன். அப்போது அவர்  என்னிடம் கூறியவை:

‘சினிமால 2006  போகி அன்னிக்கு எனக்கு அறுபதாவது வருஷம் ஆரம்பமாச்சு. கணவனே கண் கண்ட தெய்வம்  கதையை கேட்கறப்பவே நான் அழுதேன்.

‘முதல்ல எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்துடுங்க. அஞ்சலி டேக்ல அசத்திடுவாங்க. ’ என்று ரிகர்சலில் முந்திக் கொள்வார் ஜெமினி. பேசி வெச்சிக்கிட்டு இருவரும்  ஆக்ஷனுக்கு ரீ ஆக்ஷன் செய்வோம்.

கணவனே கண் கண்ட தெய்வம் ஓஹோன்னு ஓடுச்சு. அதன் இந்தி ரீமேக் ‘தேவதா’லயும்  நானும் ஜெமினியும் தான் ஜோடி.

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவுக்குள்ளே வந்தேன். அப்ப எனக்குத் தெரியாது- ஜெமினி ‘காதல் மன்னன்’னு.

கணவனே கண் கண்ட தெய்வம் ஷூட்டிங் சமயத்துலதான்  சாவித்ரியோட அவருக்கு லவ் அஃபேர் ஏற்பட்டுச்சு. சாவித்ரி அடிக்கடி வாஹினி செட்டுக்கு வரும்.

‘அக்கா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.  இவரைத்தான்...’

‘அப்படியாம்மா ரொம்ப சந்தோஷம்! ஆனா நீ ஜாக்கிரதையா இருக்கணும். நாம தெலுங்கு. அவரு தமிழ். ’

நானும் சாவித்ரியும் சிஸ்டர்ஸ் மாதிரிதான். அப்புறமா அஞ்சலி அம்மான்னு ரொம்ப மரியாதை என் மேலே. பெரிய ஸ்டார் ஆகியும் அஞ்சலியம்மா படங்கள் பார்த்துத்தான் நடிக்க வந்தேன்னு’ சாவித்ரி ஓபனா சொல்லும்.

ஒரு நாள் ஜெமினி கிட்டே நேரடியாவே கேட்டுட்டேன்.

‘என்ன சமாச்சாரம்... கல்யாணம்னு சொல்லுதே அந்தப் பொண்ணு.’

‘ஆமாம்மா’

‘உங்கள நம்பி வருது ஜாக்ரதையா பார்த்துக்குங்க’

அப்புறம் தான் தெரிஞ்சது. அவரு ஏற்கனவே கல்யாணம் ஆனவர்னு. பர்ஸ்ட் வைஃப் ஒத்துக்கிட்டார். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தாங்க.

ஜெமினி கணேஷ் ரொம்ப நல்லவர். எந்த ப்ரொடியூசரும் அவரால சஃபர் ஆனதா சொல்ல முடியாது. சாவித்ரியைக் கல்யாணம் பண்ணிண்டப்பறம் தெலுங்கு நல்லா பேசுவார். எங்க வீட்டுக்காரர்னா அவருக்கு ரொம்ப உசுரு. மியூசிக்லயும் கணேஷூக்கு இன்ட்ரஸ்ட் உண்டு.

நளாயினி படத்துல எனக்கு காந்தாராவ் ஜோடி. சிவனாக ஜெமினி -பார்வதியா சாவித்ரி, பிரம்மாவாக ஜக்கையா - சரஸ்வதியா  ஜமுனா  கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தாங்க.

ஜெமினியோட டாட்டர் ரேகாவுக்கு அப்ப பத்து வயசு இருக்கும். எங்கூட ‘ரங்குல ராட்டினம்’ படத்துல நடிச்சது. பெரிய பெண்ணாகி ‘அம்ம கோசம்’ படத்துல கிருஷ்ணம் ராஜூ-ரேகா இளஞ்ஜோடி, அவங்களோட நானும் கும்மிடி வெங்கடேஸ்வராவும் சேர்ந்து நடிச்சோம்.

பொதுவா நான் யாரு ஹீரோன்னு கேட்டதே கிடையாது. அவங்க யாரா இருந்தா என்ன...?  எனக்கான கேரக்டர் என்ன, கதை என்னன்னு தான் பார்ப்பேன்.

அப்படியும் ஜெமினி மட்டுமில்லாம அவர் வாரிசோடயும், சிவாஜி - பிரபு ரெண்டு பேர் கூடவும் நடிக்க சந்தர்ப்பம் கிடைச்சது! ’

எந்தத் தென்னக நட்சத்திரத்துக்கும் இன்று வரை அமைந்திராத மிக அரிய அரியணை வாய்ப்பு 1959ல் அஞ்சலிக்குக் கிடைத்தது.

‘தென் இந்திய நடிகர் சங்கத்தின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய  ஒரே ஒப்பற்றத் தலைவி அஞ்சலி! ’

 அஞ்சலி பங்கேற்ற அத்தனைத் துறைகளிலும் முத்திரை பதித்தது போல் நடிகர் சங்கத்திலும் மிகக் குறுகிய காலத்தில் அதிரடி முடிவுகளை எடுத்தார்.

கலையுலகில் திருவாங்கூர் சகோதரிகளுடன் உல்லாச ஊர்வலம் வந்தனர் சாவித்ரி- எம். என். ராஜம்- ராஜ சுலோசனா மூவரும். அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து,

‘இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை - சங்கக் கலைஞர்களின் விடுமுறை தினம்’ என்று உத்தரவு போட்டார் அஞ்சலி!

ஓய்வு ஒழிச்சலின்றி ஒப்பனையோடு அவதிப்பட்ட நடிகைகள், அஞ்சலியால் அப்பாடா...! என்று ஓய்யாரப் பெருமூச்சு விட்டனர்.

கடவுள்களுக்கும் கலைஞர்களுக்கும் கணிசமான தொடர்பு எப்போதும் உண்டு. தமிழ் சினிமா சரித்திரப் பாடத்தில் ‘பொருத்துக’ என்கிறத் தலைப்பில்,

நடிகர் நடிகைகளையும், தெய்வங்களையும் மாற்றி மாற்றிக் கொடுத்தாலும், கண்ணை மூடிக் கொண்டு

1.எம். என். நம்பியார் - அய்யப்பஸ்வாமி  2. சாண்டோ சின்னப்பா தேவர் - முருகன்  3. என்.டி.ராமாராவ் -கிருஷ்ணன்  4. ரஜினிகாந்த்-ஸ்ரீராகவேந்திரர்  5. அம்மன் - கே.ஆர்.விஜயா  6. சாய்பாபா - அஞ்சலிதேவி என்று  மிகச் சரியான விடையை எழுதி முழு மதிப்பெண் பெறுவான் கடைசிக் குடிமகனும்!

அன்றாடம் அரிதாரம் பூசி வெள்ளித் திரையில் ஆடிப்பாடிக் கொண்டிருந்த  அஞ்சலியை  சாயிபாபா எப்படி ஆட் கொண்டார்...!

தமிழகத்தில் கோடானு கோடி ஆன்மிக அடியார்களின் ‘சாயி பக்த சமாஜத்தில்’ அஞ்சலியை சங்கமிக்கச் செய்து அவரையும் சாயிக்குத் தொண்டாற்ற ஓர் உந்து சக்தியாக்கினார்...?

இந்தி கணவனே கண் கண்ட தெய்வம் (தேவதா) வடக்கில் மேலும் அஞ்சலியைப் பிரபலப்படுத்தி வசூலில் வாகை சூடியது.

அதன் வெற்றி தந்தத் துணிச்சல் அஞ்சலி பிக்சர்ஸ் இந்திப்படத் தயாரிப்பில் ஈடுபட்டது.

தமிழிலும் தெலுங்கிலும் வெற்றி முரசு கொட்டிய மணாளனே மங்கையின் பாக்கியம் சினிமாவை இந்தியிலும் வெளியிட்டனர். நன்றாகவே ஓடி பொருளீட்டித் தந்தது.

அதற்குப் பின் நடந்தவை அஞ்சலியின் மனப்பத்தாயத்திலிருந்து-

‘இந்தி சூப்பர் ஸ்டார்கள் அசோக் குமார், மனோஜ் குமார், வைஜெயந்திமாலா நடிக்க‘பூலோகி சேஜ்’ங்கிற பெயர்ல பிரம்மாண்டமா  சினிமா எடுத்தோம்.

மிகப் பெரிய நடிகர்கள், பிரம்மாண்டமானத் தயாரிப்புன்னு ஏராளமா செலவு பண்ணியும் டிஸ்டிரிபியூட்டர்களிடம் மோசம் போயிட்டோம்.

விநியோகஸ்தர்களின் நம்பிக்கைத் துரோகம் திடீரென எங்களைக் கழுத்தளவு கடல் தண்ணீரில் கொண்டு விட்ட மாதிரியானது.

ஏகப்பட்ட கடன் சுமையால் தொடர்ந்து அதிர்ச்சி. தொட்டதெல்லாம் பொன்னாகியத் தருணங்கள் எங்கள் வாழ்வில் விடை பெற்றுப் போனதாக நிலை குலைந்தோம்.

அந்த நேரத்தில் எங்கள் குடும்ப நண்பரும் மிகச் சிறந்த நடிகரும்- இசைச் சித்தருமான சித்தூர் வி. நாகையா அண்ணன் மூலம் ‘பாபாவின்’ கருணை கிட்டிற்று.

நாகையா அவர்களின் ‘சஷ்டியப்த பூர்த்தி விழா’ பாபா அருளினால் நடந்தது.

அது முடிந்த ஐந்தாவது நாள் பாபா சென்னைக்கு வந்தார். பாபாவை அருகாமையில் பார்த்ததும் எனக்குப் பேச்சே வரவில்லை. என் இருதயத்தில் அதுவரை இருந்து கொண்டிருந்த பாரம் எங்கே போனதென்றே தெரியவில்லை.

கருணையோடு எங்களைப் பார்த்தார் பாபா. கவலைப்படாதீங்க. மறுபடியும் நல்லா வருவீங்க’ என்று இவ்வளவுதான் சொன்னார். அது நடந்தது 1963 டிசம்பர் மாதம்.

அதன் பிறகு இழந்து போனதாக நாங்கள் உணர்ந்த அத்தனையும் கூடுதலாகவே எங்களுக்குத் திரும்பக் கிடைத்தது. தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டோம்.

இரண்டாவது இன்னிங்ஸில் முதலாவதாக ‘சக்குபாய்’ பக்திச்சித்திரம் வந்தது. நன்றாக ஓடியது. அடுத்து எடுத்த எல்லா சினிமாக்களுமே லாபம் தந்தன.

பாபா அனுமதியுடன் ‘சாயி கதை’ பற்றிய பாட்டு எழுதிக் கொடுத்தேன். சின்னத் திரைக்காக நான் தயாரித்த  ‘சாயி’ வரலாற்றுத் தொடரில் பாபாவின் அன்னை ‘ஈஸ்வரம்மாவாக’ நடித்தேன். அது  பெரும் பாக்கியம்!

 பாபாவின் தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

அதுவரையில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து அவதிப்பட்ட சூழலில், காந்தியவாதியும், மிகச் சிறந்த குணச்சித்திரக் கலைஞருமான  கே. சாரங்கபாணி அண்ணன் இல்லம் தேடி வந்தார்.

‘உன் பெரிய பையனுக்கு என் பெண்ணைத் தர விரும்பறேம்மா’ என்ற சர்க்கரைச் செய்தியை இனிப்பாகத் தெரிவித்தார்.

எந்தச் சமயத்தில் சாரங்கபாணி அண்ணன் சம்பந்தம் பேசினார் என்பதைச் சற்றே சிந்திக்க வேண்டும். நாங்கள் நிராதரவான நிலையில் நாளைய பொழுது எப்படி விடியுமோ... என்று  நிம்மதி இழந்து நின்ற நேரத்தில்,  எங்களைத் தேடி வந்து சுப காரியம் பேசினார்.

‘இனி எல்லாம் பாபா’தான் என்றாகிப் போனதால், பாபாவை தரிசித்து இந்த மங்கலச் சேதியை அவர் காதுகளுக்கும் கொண்டு சேர்க்கலாமே என புட்டபர்த்திக்குப் புறப்பட்டோம்.

அவரது திருவடிகளைத் தொழுது நின்றதும் சிரித்துக் கொண்டே,

‘என்ன... சாரங்கபாணி பொண்ணு தரேங்கிறாரா... ’ என்றார்.

தெய்வீகப் புன்னகை திவ்ய முகத்தில் அருட் புனலாக ஓட, மெல்ல பாபாவின் ஞானக் குரல் கருணையோடு ஒலித்தது.

எங்களுக்கு மெய் சிலிர்த்தது. அந்த ஆச்சரியத்தை ரசித்தவர் போல்,

‘தாராளமாகக் கல்யாணம் செஞ்சு வையுங்க. மன தைரியத்தோட மங்கல காரியத்தை நடத்துங்க. அவங்க நல்லா இருப்பாங்க... ’ 

என்று ஆசி கூறினார். பகவானின் வாழ்த்து பலித்தது!

ட்வன்டிபர்ஸ்ட் செஞ்சுரியிலும் என் சுறுசுறுப்புக்கு சாயிபாபாவின் அளவற்ற அருளே காரணம் என உளமாற உணர்கிறேன். ’ - அஞ்சலிதேவி.

அஞ்சலி- ஆதி நாராயணராவ் தம்பதியருக்கு அளவான மகிழ்ச்சியான குடும்பம். இரு மகன்கள். முதலாமவர் - இன்ஜினியர் சின்னாரி ராவ்.  அவரது மனைவி விஜயலட்சுமி- நடிகர் கே. சாரங்கபாணியின் மகள்.

இளைய தம்பதிகள் நிரஞ்சன் குமார்-பாரதி. இருவருமே டாக்டர்கள்.

மிக நீண்ட காலம் அழகோடும் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் தென்னகத் திரைவானில் நட்சத்திரமாக கம்பீர ஒளி வீசியவர்  அஞ்சலி. 2006ல் அவரை முதலும் கடைசியுமாக நான் சந்தித்த போது அதை உணர்ந்தேன்.

அஞ்சலி நடித்த தெலுங்கு படங்களான அனார்கலி, ஸ்வர்ன சுந்தரி, செஞ்சு லட்சுமி, ஜெயபேரி போன்றவை பிலிம் ஃபேர் அவார்டு வாங்கியவை.

குண்டூர் நாகார்ஜூனா பல்கலைக்கழகம் அஞ்சலிக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பத்மினி, சாவித்ரி, வரிசையில் அஞ்சலிக்கும்  உரிய பரிசை  ஏனோ மத்திய அரசு வழங்காமல் போனது.

‘பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் என்பது போன்ற அரசு விருதுகள் எதுவும் என்னைத் தேடி வரவில்லை. ஆனால் இப்போதும் என்னைப் பார்க்கிற ரசிகர்கள் ‘அம்மா... கணவனே கண் கண்ட தெய்வம் பார்த்தேன்... மணாளனே மங்கையின் பாக்கியம் பார்த்தேன் என்று சொல்லி, என் நடிப்பைப் பாராட்டும் போது கிடைக்கிற சந்தோஷத்தை விட ‘விருது’ பெரிய உற்சாகத்தைத் தர முடியாது. ’- 1999ல் அஞ்சலிதேவி.

2014  ஜனவரி 13 மதியம். அஞ்சலி கலையுலகில் காலடி எடுத்து வைத்த போகித் திருநாள்!

ரசிகர்களை மகிழ்விக்க  ஆடிப்பாடிய அதே வாஹினி வளாகம்- விஜயா மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

சாயிபாபா காட்டிய ஆன்மிக வழியில் அமைதியாக அஞ்சலியின் வாழ்க்கை நிறைவு பெற்றது.





By ப. தீனதயாளன்
Thanks to Dinamani.com