மொத்தப் பக்கக்காட்சிகள்

12/01/2011

திருவண்ணாமலை கோவில் வரலாறு

திருவண்ணாமலை கோவில் வரலாறு:

பஞ்ச  பூத  ஸ்தலம் (5 இயற்கை காரணிகள்)

பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகிறது
1) நிலம்,

2) தண்ணீர்,

3) தீ,

4) காற்று,

5) ஆகாசம்.

இதில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம

மலையே இறைவனாக வணங்கப்படும் தலம் திருவண்ணாமலையாகும். நினைத்தாலே முக்தி தரும் இந்த தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப பெருவிழா பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித்தலமாக போற்றப்படும் இந்த தலத்தில் அக்னியை வணங்கும் விதமாக கார்த்திகை தீபப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து செல்கின்றனர்.

நெருப்பாய் தோன்றிய இறைவன்

சிவபெருமான் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயின் வடியில் இங்குள்ளார் என்பது ஐதீகம். பிரம்மன் -விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் என செருக்கு கொண்டபோது சிவபெருமான் நெருப்புத்தூண் வடிவில் தோன்றியதாகவும் அந்த தூனே 'திருவண்ணாமலை' என்றும் கூறப்படுகிறது.

பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி உருவானது. அப்போது இருவருக்கும் இடையில், திடீரென்று பெரிய நெருப்புப் பிழம்பு உருவானது. உடனே அந்த நெருப்பு பிழம்பு எங்கே தொடங்குகிறது... எங்கே முடிகிறது என்று யார் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருவரும் தேடத் தொடங்கினர். பிரம்மா அன்னம் வடிவெடுத்து ஜோதி வடிவின் தலை எங்கே என்று தேடிப் போனார். திருமாலோ வராகமாக வடிவெடுத்து, நெருப்பின் அடி தேடிச் சென்றார். காலங்கள் ஓடின; யுகங்கள் நீண்டன; கண்டுபிடிக்கவே முடியவில்லை. திருவடியைத் தேடியவர் திரும்பினார்; முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்;

பொய் சொன்ன பிரம்மா

ஆனால் திருமுடி தேடிய பிரம்மாவோ தாழம்பூவுடன் ஒப்பந்தம் போட்டு திருமுடியை பார்த்ததாக பொய்சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதை பொய் என்பதை உணர்த்திய இறைவன் தாழம்பூவை பூஜையில் இருந்து ஒதுக்கினார்.

பொய் சொன்ன பிரம்மாவின் ஒரு தலை கிள்ளப்பட்டது; கோயிலும் இல்லாமல் போனது; நெருப்புப் பிழம்பு மெள்ளக் குளிர்ந்து மலையாக உருவெடுத்தது. அதுவே திருவண்ணா மலை ஆனது என்கின்றது புராண கதை.


அண்ணுதல் என்றால் அணுகுதல் என்று பொருள்; தேடியவர் அணுக முடியாத மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர். ஆணவத்தால் தேடியபோது அடியோ முடியோ கிட்டவில்லை; ஆயின், அன்புடன் பக்தர்கள் தேடினால், அடியையும் முடியையும் காணலாம் என்று அத்தாட்சியாக நிற்கிறது மலை.

அருணம், சோணம் என்ற சொற்கள் செம்மை நிறத்தைக் குறிப்பவை; சிவந்த மலை என்பதால் சோணாசலம், அருணாசலம்! மலையே சுயம்பு. இறைவனாரே மலையாக உருவெடுத்ததால், இந்தத் தலத்தில் மலை வழிபாடு பிரதானம். மலை சுற்றுவதும் மலையை வழிபடுவதும் தவறாமல் செய்யப்படுகின்றன. இந்த மாமலையின் உயரம் 2665 அடிகளாகும். தற்போது தமிழக அரசு இதன் உயரம் 2748 அடிகள் என அறிவித்துள்ளது.

அண்ணாமலை கிரிவலம்

மலையைச் சுற்றி வலம் வரும் போது கிழக்குப் பகுதியிலிருந்து பார்த்தால், மலை ஒற்றையாகத் தெரியும். ஏக லிங்கமாக, ஒன்றே கடவுள் என்பதை உணர்த்தும். சற்று தூரம் சென்ற பின்பு பார்த்தால், இரண்டாகத் தெரியும். ஆணாகவும் பெண்ணாகவும் உலகை இயங்க வைக்கும் அர்த்தநாரீஸ்வரர். மேற்கு திசையிலிருந்து நோக்கினால், மூன்று சிகரங்களைக் காணலாம். அது மும்மூர்த்திகளை உணர்த்தும். மெதுவாய் நடந்து மலையைத் திரும்பிப் பார்த்தால், இப்போது ஐந்து கூம்புகள். இறைவனாரின் பஞ்சமுக தத்துவத்தையும், பஞ்ச பூதப் பெருமையை உணர்த்தும் மலை திருவண்ணாமலை என்பதை உணரலாம்.

சித்தர்கள் வாழும் மலை திருவண்ணாமலை

மலைப்பாதையில் அஷ்டலிங்கங்கள் எனப்படும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் அமைந்துள்ளன.

இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வருகின்றனர்.

அக்னி மலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால், உடல் நோய் நீங்கி, இறைவனது திருவடி கிட்டும்; திங்கள் வலம் வந்தால், எல்லையற்ற ஆற்றலும் சக்தியும் கிடைக்கும்; செவ்வாய் எனில் வறுமை அகலும்; புதனன்று வலம் வந்தால் கல்வியில் பெரியர் ஆகலாம்; வியாழன் வலம், ஞானம் தரும்; வெள்ளி வலமோ, விஷ்ணு பதம் கொடுக்கும்; சனிக்கிழமை சுற்றி வந்தால், நவக்கிரகக் கேடுகள் நீங்கும் என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்கள்.

மகாதீபத் திருவிழா

அக்னி ரூபமாய் ஒளிரும் மலை மீது கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் மகா தீபம் ஏற்றுவது சிறப்பு. இந்த ஆண்டிற்கான தீப விழா  கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. வெள்ளி ரத வீதி உலாவும்,  மகாரத தேரோட்டமும் நடைபெறுகிறது. 8ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவை ஒட்டி நகர காவல்தெய்வமான துர்க்கையம்மனுக்கு சனிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தினத்தின் முக்கிய விழாவான மகாதீப விழா கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப பெருவிழா 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக