மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

இந்தியாவின் வளர்ச்சியும், அரசியலும் கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும்-காந்தி


நம்மைச் சுற்றியுள்ள உலகம், எப்போதும் ஆச்சர்யங்கள் நிரம்பியது, வித்தியாசமான மனிதர்கள், அழகும் ஆபத்தும் நிரம்பிய இடங்கள், சில மனிதர்களின் இரட்டை வாழ்கை, இப்படி நம்மை வியக்கவும், அதிர்ச்சியடையவும் வைக்கும் விஷயங்கள் ஏராளம். நேற்று, நாளிதழொன்றில் படித்த ஒரு செய்தி, ஆச்ச்சர்யமளிப்பதாக இருந்தது. காவல் நிலையம், நீதி மன்றப் படிகளை மிதிக்கத கிராமம் பற்றிய செய்தி அது.

ஒரிசா மாநிலத்தில், கேந்திரபாரா எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள, சனமன்கராஜ்பூர் எனும் கிராமம் தான் இப்படிப்பட்ட அபூர்வமான மக்களைக் கொண்டது. இவர்கள், தங்கள் பிரச்னைகளுக்காக, காவல் நிலையங்களுக்கோ, நீதி மன்றங்களுக்கோ, செல்வதில்லை. எத்தனை பெரிய வழக்கானாலும், ஊர்ப் பெரியவர்கள் கூடி, இரு பக்க வாதங்களையும் கேட்டு, சரியான தீர்ப்பு வழங்கிவிடுகின்றனர். இதனை ஊர் மக்கள் அனைவரும், முழுமனதோடு ஏற்றுக்கொள்கின்றனர்.

சுமார் நாற்பது வீடுகளும், 300 க்கு மேற்ப்பட்ட மக்கள் தொகையும் கொண்ட இந்த கிராமம், பொருளாதார ரீதியாகவும், உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மக்கள், ஊர்ப் பெரியவர்களால் சொல்லப்படும் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஒரு சிலர் மத்தியில் பகை நிலவினாலும், அவை நிலம் தொடர்பானாதாகவே இருக்கிறது. இந்த சச்சரவுகளும், சுமூகமாக தீர்க்கப்பட்டுவிடுகிறது.

கௌரவத்திற்காகவும், ஒருவரை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்திலும், காவல் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் செல்லும் இந்தக் காலத்தில், இப்படிப் பட்ட ஒழுக்கத்தோடும், கட்டுகோப்பாகவும் வாழ இந்த மக்களால் எப்படி முடிகிறது?

இதற்கு முக்கிய காரணம், இந்த கிராமத்தின் மக்கள், பெரும்பாலும் படித்தவர்கள் என்பதுதான். இவர்கள், நீதி மன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் செல்வதால் வரக் கூடிய பிரச்னைகளையும், சிக்கல்களையும், ஏற்படக்கூடிய கால தாமதங்களையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால், உடனடித் தீர்வாக, ஊர் பெரியவர்கள் சொல்லும் தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டு, பிரச்னைகளை சுமூகமாகத் தீர்த்துக்கொள்கின்றனர்.



மேலோட்டமாகப் பார்த்தால், பழங்காலத்து கிராமப் பஞ்சாயத்து முறையைத் தானே பின்பற்றுகிறார்கள், இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறதென்று தோன்றலாம். ஆனால், ஊன்றிக் கவனித்தால், இந்த நடைமுறையில், எண்ணற்ற நன்மைகள் இருப்பது புலப்படும்.

சிந்தித்துப் பாருங்கள், அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு. அதுவும் நியாயமான, நேரடியான தீர்வு. நீதி மன்றங்களுக்குச் சென்றால், காலவரையற்ற தாமதமும், செலவும் ஏற்படக்கூடும். ஆனால், இந்த மக்கள் பின்பற்றும் முறையில், எந்தவித செலவுகளோ, தாமதமோ இன்றி உடனடித் தீர்வுகள். அதைவிட முக்கியம், எந்தவிதமான குறுக்கு வழிகளும் தேவை இல்லாத நடைமுறை.

நமது பிரச்னைகள், ஊர் மக்கள் முன்பு விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு நியாயங்களும், கேட்கப்பட்ட பிறகே தீர்ப்பு வழங்கப்படும். இதனால், எந்தவொரு தரப்பும், பாதிக்கப்பட வாய்ப்பு இல்லாத, நேர்மையான விசாரணை நடத்தப்படும்.

இதையெல்லாம் விட முக்கியமான நன்மை என்று பார்த்தால், தனி மனித ஒழுக்கம் பின்பற்றப்படும்.

நமது நாட்டின் இன்றைய உடனடித் தேவையே தனி மனித ஒழுக்கம்தான். இத்தைகைய ஒழுக்கம் மக்கள் மத்தியில் நிலவினால், நாட்டில், பிரச்னைகளோ, சச்சரவுகளோ எழாது.

எத்தனையோ தலைவர்களும், மகான்களும் போதித்த தனி மனித ஒழுக்கம், இந்த நடைமுறை மூலம் கடைபிடிக்கப்படும்.

பொதுவான நன்மைகளாக, நீதி மன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை குறையும், அரசாங்கத்தின் நேரமும், பொருட்செலவும் மிச்சமாகும்.

இப்படிப்பட்ட மக்கள், தேசம் முழுவதும் இருந்தால், சண்டைகளும் சச்சரவுகளும் அற்ற, அமைதியான, உலகத்திற்கே முன் மாதிரியான சமுதாயம் படைக்க முடியும்.

இதைதான் காந்தி, இந்தியாவின் வளர்ச்சியும், அரசியலும் கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும், என்று அன்றே சொன்னாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக