மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

11/08/2011

எகிறும் பெட்ரோல் விலை: டீசல் கார் வாங்குவது புத்திசாலித்தனமா?

Petrol Vs Diesel
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து, டீசல் கார்களுக்கான தேவை எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது.


பெட்ரோலைவிட டீசலின் விலை குறைவு என்பதாலும், அதிக மைலேஜ் கிடைக்கும் என்பதாலும் டீசல் கார்கள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை நம் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 23 சதவீதமாக இருந்து வந்த டீசல் கார்களின் விற்பனை தற்போது 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.


அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் டீசல் கார்களின் விற்பனை 50 சதவீதம் வரை உயரும் சூழ்நிலை இருப்பதாக மாருதி, வோக்ஸ்வேகன் போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் கூறியுள்ளன.


இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வை மட்டும் காரணமாக வைத்து டீசல் கார் வாங்குவது சரியான முடிவாக இருக்குமா...?


கூடுதல் நிதிச்சுமை:


பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை மாடல்களுக்கு தக்கவாறு கூடுதலாக இருக்கின்றன. நம் நாட்டில் விற்பனையாகும் 70 சதவீத கார்கள் கடன் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.


இந்த நிலையில் டீசல் கார்களை வாங்கும்போது கூடுதலாக ரூ.80,000 வரை முதலீட்டை வாடிக்கையாளர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், டீசல் கார் வாங்கும்போது ஏற்படும் கூடுதல் கடன் தொகைக்கான வட்டி மற்றும் மாதத்தவணைத்தொகையிலும் கூடுதலாக செலுத்த நேரும். இதை கூர்ந்து கவனித்தால் ஒரு லட்சத்திற்கு ரூ.1,000 வரை கூடுதலாக நாம் செலுத்த தயாராக வேண்டும்.


மேலும், டீசல் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட தொகையையும், கடனுக்காக செலுத்தப்பட்ட கூடுதல் வட்டி மற்றும் தவணை ஆகியவற்றை கூட்டிக் கழித்து பார்க்கும்போது முடிவில் பெட்ரோல் காரை தேர்வு செய்வதே சிறந்ததாக தெரியும்.


கையை அறுக்கும் பராமரிப்பு செலவு:


டீசல் கார்கள் பராமரிப்பு செலவுகள் பற்றி வாடிக்கையாளர்களிடம் போதிய தகவல்களை கார் நிறுவனங்களும், டீலர்களும் கூறுவதில்லை. பெட்ரோல் காரைவிட டீசல் கார்களின் பராமரிப்பு செலவு பல மடங்கு கூடுதல் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.


டீசல் காரை சர்வீஸ் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆயிலை மாற்ற வேண்டிய அவசியம் உண்டு. ஆனால், பெட்ரோல் கார்களுக்கு இதுபோன்று அவசியம் இருக்காது.


எஞ்சின் ஆயுள்:


டீசல் கார்களின் எஞ்சின் அதி்க புகையை வெளியேற்றும் என்பதால் கரித்துகள்கள் அதிகம் படியும். ஆனால், பெட்ரோல் கார்களில் எரிபொருள் முழுமையாக எரிக்கப்படுவதால் அதிக கரித்துகள்கள் எஞ்சினுக்குள் படியாது. எனவே, பெட்ரோல் கார்களை ஒப்பிடும்போது டீசல் கார்களின் எஞ்சின் ஆயுள் குறைவு என்பதை குறிப்பிடவேண்டும். ஒரு சில ஆண்டுகளில் டீசல் கார் எஞ்சின் செலவு வைப்பது போன்று பெட்ரோல் கார் கணிசமாக சர்வீஸ் செலவை இழுத்து விடாது.


பெர்ஃபார்மென்ஸ்:


பெட்ரோல் கார் எஞ்சினில் கிடைக்கும் பிக்கப்பை டீசல் காரில் எதிர்பார்க்கமுடியாது. பெட்ரோல் கார் எஞ்சினைவிட டீசல் கார் எஞ்சினை ஒப்பிடும்போது அதிக இரைச்சலை வெளிப்படுத்தும். தவிர, டிரைவிங்கின்போது பெட்ரோல் கார்கள் ஸ்மூத்தாக செல்வதால் நிம்மதியான பயண அனுபவத்தை தரும் என்பது உறுதி.


எது சிறந்தது?


பெட்ரோல் கார்களின் உதிரிபாகங்களைவிட, டீசல் கார்களின் உதிரிபாகங்களின் விலையும் சற்று கூடுதலாக இருக்கும் என்பதால் அதிக பராமரிப்பு செலவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீண்ட நாள் தொல்லை தராத கார் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு பெட்ரோல் காரே சிறந்த தேர்வாக இருக்கும்.


ஆனால், தற்போது கார்களுக்கான டீசல் எஞ்சின் தொழில்நுட்பம் அதீதமாக மேம்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும், அதை இன்னும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்வது அவசியமாகிறது. எனவே, உங்களது முதலீடு மற்றும் பயன்பாட்டை பொறுத்து டீசல் காரா? பெட்ரோல் காரா? என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக