முப்பது வயதாகியும் திருமணத்திற்கு வரன் கிடைக்காத என் நண்பனுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்கள்.
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து அவனை சென்னையில் பார்க்கும் பொழுது புலம்பித் தள்ளி விட்டான். அவன் மனைவி அவனை விட ஒரு வருடம் பெரிய பெண்ணாம், இவன் கோதுமை நிறம் அவன் மனைவி மாநிறத்திற்கும் சற்று கம்மி.
ச்சே.. எல்லாம் இந்த ஜாதகம் ஜோசியம் இதனால வந்தது.. எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குறதுனால வேற எந்த பொண்ணும் கிடைக்கல..
"சரி விடுடா.. ரிலாக்ஸா மேரேஜ் லைப்பை ஓட்ட பாரு.." என்றேன். என்னால் வேறு என்ன சொல்ல முடியும்.
மூன்று மாதங்களுக்கு பிறகு அவனை சந்திக்க குடும்பத்துடன் சைதாபேட்டையில் இருந்த அவனுடைய அபார்ட்மெண்ட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி இருவருக்குள் செல்ல சீண்டல்கள் போன்ற அன்னியோன்யம் தெரிந்தது. என் மனைவியும் அவனுடைய மனைவியும் சேர்ந்து சமையல் வேலை செய்து கொண்டிருக்க, என் மகன் டிவி பார்த்து கொண்டிருந்தான், நானும் அவனும் சில பொருட்களை வாங்க அருகிலிருந்த கடைக்கு சென்றோம்.
என்னடா மச்சான்.. அன்னைக்கு பிடிக்கல'ன்னு சொன்ன.. இப்ப பார்த்தா அப்படி தெரியலையே..
நிஜம் தான்'டா..
பிறகு அவனே வாய் திறந்தான். திருமணத்திற்கு பின் மூன்று மாதங்கள் ஆன பிறகும் கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை. இருவருக்குள்ளும் 'ஆம்' 'இல்லை' என்று ஒரு வார்த்தை பதிலுடனே வாழ்க்கை சென்று கொண்டிருந்திருக்கிறது.
இவர்கள் போர்ஷனுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டி இதை கவனித்திருக்கிறார். ஒரு நாள் இவன் மனைவியிடம் விசாரிக்க, அவனுடைய மனைவியும் "அவரு விலகி போனா நான் என்ன செய்யுறது?.." என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார்.
அந்த பாட்டிக்கு இவனை, இவனுக்கு திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே தெரியும் என்பதால் இவனை அழைத்து "ஏன்டா.. பொண்டாட்டியை வெளிய கூட்டிகிட்டு போறது தான?.." என்று கூறியிருக்கிறார்.
இவன் அதற்கு "இந்த வாரம் ஞாயித்துக் கிழமை மாயாஜால் அழைச்சுக்கிட்டு போறேன்.." என்று கூறியிருக்கிறான்.
அந்த பாட்டி அதற்கு இவனை கபாலீஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து சில நாட்களுக்கு செல்லும்படி கூறி, அவருக்கு தெரிந்த அர்ச்சகர் மூலமாக சில பூஜைகளையும் புக் செய்து கொடுத்திருக்கிறார். அதுவும் அவருடைய சொந்த செலவில். அந்த பாட்டி தான் இவர்கள் இருக்கும் போர்ஷனின் உரிமையாளர் என்பதால் இவனால் மறுக்க முடியவில்லை.
சரிடா.. அதுக்கும் உன் மனசு மாறுனதுக்கும் என்னடா சம்பந்தம்..
இல்லடா.. தொடர்ந்து மூனு ஞாயித்து கிழமை அங்க போனோம்.. ஒரு பொண்ணு அவ்வளவு லட்சணமா இருந்தா, ஆனா கோவில் வாசல்'ல முட்டி போட்டு கண்ணை மூடிக்கிட்டு மடிப்பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தா.. அவளுக்கு பக்கத்துல அவளோட புருஷன் கைக்குழந்தையோட நிக்குறான்.. பார்த்தாலே கொஞ்சம் வசதியானவங்க தான்னு தெரியுது.. அந்த பொண்ணு ரெண்டு கையில பிடிச்சிக்கிட்டு இருக்குற புடவை முந்தானையில சில்லறை காசுங்களும் அஞ்சு பத்து ரூபா நோட்டெல்லாம் இருந்தது.. இவங்களுக்கும் ஏதோ பிரச்சினை இருக்குன்னு தான அர்த்தம்.. அங்க நாங்க போகும் போது நிறைய கல்யாணம் நடந்துகிட்டு இருக்கும்.. ஒன்னு மாப்பிள்ளை சுமாரா இருப்பான் பொண்ணு சூப்பரா இருக்கும்.. பொண்ணு சுமாரா இருந்தா மாப்பிள்ளை நல்லா இருக்கான்.. அதுவும் இல்லாம பொண்ணுங்களை புடைவையில பார்க்கும் போது ஏதோ ஒரு நிறைவா இருக்குடா.. என் மனைவி கூட இந்த நைட்டி குர்தா எல்லாத்தையும் விட புடவையில உறுத்தாத அழகோட இருக்காங்க.. என்னமோ அப்படியே எல்லாம் மாறி போயிடுச்சு..
கடையிலிருந்து அவனுடைய வீட்டிற்கு திரும்பி சென்றவுடன் நான் நேராக அந்த பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். எனக்கும் அந்த பாட்டியை ஓரளவிற்கு தெரியும்.
சிறிது நேர பேச்சுக்கு பின் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன். "இப்படி பண்ணா மனசு மாறிடுவான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?.." என்றேன். அதற்கு அந்த பாட்டியின் கணவர் தன் நடுங்கும் குரலில் "கண்ணை மூடி சாமி கும்பிடும் போது நம்ம மனைவி ரொம்ப லட்சணமா தெரிவாங்க'ப்பா.." என்றார் கிண்டலாக.
சும்மா சொல்லாதீங்க..
அந்த பாட்டி உடனே "மாலுக்கு தியேட்டருக்கு எல்லாம் போனா, ஆம்பளை ஒன்னு செலவை பத்தி கவலைப்படுவான்.. இல்லைன்னா அடுத்தவன் பொண்டாட்டியை பார்த்து வயித்தெரிச்சல் படுவான்.." என்றார். மேலும் "அதே அடிக்கடி கோவிலுக்கு போய் பாரு.. அங்க வர்ற பெரும்பாலான தம்பதிகள் அழகா இருந்தாலும் சரி, சொத்து சுகம் இருந்தாலும் சரி, இங்க பிரச்சினை இல்லாத மனுஷங்களே இல்லைன்னு புரியும்.. அதுமட்டுமில்லாம வெயில் நேரத்துல பொண்ணுங்க புடவை கட்டிக்கிட்டு பளிச்சுன்னு முகம் தெரிய கூட வரும் போது, எல்லா ஆம்பளைங்களுக்கும் அவங்க மனைவியை ரொம்ப பிடிக்கும்.." என்றார்.
அந்த குறும்புக்கார தாத்தா கிண்டலாக "ஈவ்னிங் கற்பூர வெளிச்சத்துல அம்மனை தரிசிச்சிட்டு அப்படியே திரும்பி அந்த மங்கலான கருவறை வெளிச்சத்துல, உன் பக்கத்துல நிக்குற மனைவியை பாரு.. ரெண்டு முகமும் ஒரே மாதிரி தெரியும்.." என்றார்.
என் நண்பனும் 2015-இல் வீட்டை காலி செய்து கொண்டு ஊரப்பாக்கம் சென்றுவிட்டான். என் நண்பனுக்கு இப்பொழுது ஆறாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த பாட்டியும் தாத்தாவும் ஒருவரை தொடர்ந்து இன்னொருவர் காலஞ்சென்று நான்கு ஆண்டுகளாகின்றது.
ஆனால் இப்பொழுது அவர்களை பற்றி நினைத்தாலும் என் நண்பன் கண் கலங்குவான். அந்த தாத்தா இவனிடம் அடிக்கடி கூறுவாராம் "உனக்கான வீட்டுத் தெய்வம் உன் மனைவி தான்.. அவ நியாயமான விஷயங்களுக்கு அழுதா உனக்கு வாழ்க்கையில நிம்மதியும் ஏற்றமும் இருக்காது.." என்பாராம்.
அந்த பாட்டி அவனுடைய மனைவியிடம் "வீட்டு ஆம்பளைக்கு நம்மள விட்டா வேற யாரும்மா இருக்கா.. எல்லா பொண்டாட்டிகளுக்குமே அவங்க புருஷன் தான முதல் குழந்தை.." என்பாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக