மொத்தப் பக்கக்காட்சிகள்

12/06/2024

எம்.ஜி.ஆரிடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கம். ஏவிஎம் சரவணன் !

 

சிலர், ஒருசிலரிடமிருந்து எதாவது ஒரு நல்ல பழக்கத்தை வாழ்க்கையில் கற்றுக்கொள்வார்கள் .... இப்படித்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம் குறித்து ஏவிஎம் சரவணன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில்....

'அன்பே வா ' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையான காலை 11 மணி அளவில் ஒரு மெல்லிய பசி இருக்கும். அந்த வேளையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும், டீ மற்றும் வடை கொடுப்பது வழக்கம். நாங்கள் அதை ‘குரங்கு டிபன்’ என்போம். அன்றும் அப்படித்தான் கொடுக்கப்பட்டது. அப்போது என் அருகில் இருந்த எம்.ஜி.ஆர்., ‘சரவணன்.. நீங்க வடையை உங்கள் ரூம்ல வச்சி சாப்பிடுங்க’ என்றார்.

நான் என்ன ஏதென்று புரியாமல், ‘என்ன சார்.. என்னாச்சி?’ என்றேன்.

‘ஒரு பொருளை எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும். இல்லையென்றால் தனியாக வைத்து சாப்பிட வேண்டும்’ என்றார்

.

நானோ, ‘இல்லை சார். எல்லோருக்கும் கொடுத்தாச்சே..’ என்றேன்.

எம்.ஜி.ஆர். மேலே கையைக் காட்டினார். அங்கு ஒரு லைட்மேன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘அவருக்கு நீங்க டீ, வடை கொடுக்கலை’ என்றார்.

எல்லாருக்கும் கொடுத்தாச்சான்னு பார்த்துட்டு சாப்பிடணும் என்று எம்.ஜி.ஆர். சொன்ன அந்த வார்த்தை, இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் வெளியில் செல்வதற்காக புறப்படும்போது, என்னுடைய டிரைவரிடம் கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கச் சொல்வேன். அந்தப் பழக்கம் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வந்தது என தெரிவித்தார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக