மொத்தப் பக்கக்காட்சிகள்

11/29/2024

'ஆண் பாவம்' படத்தின் வெற்றி விழாவில் அந்த வழக்கத்தை மாற்றினார் பாண்டியராஜன்!

 

சந்தோஷமாக இருந்தது பாண்டியராஜனுக்கு !

அவர் டைரக்ட் செய்த முதல் படம் 'கன்னி ராசி' சக்ஸஸ் ஆக ஓடிக் கொண்டிருந்தது.

(1985)

அவரை இயக்குனராக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். பல வருட கனவு பலித்து விட்டது.

அடுத்த சில மாதங்களில்...

மீண்டும் சந்தோஷமாக இருந்தது பாண்டியராஜனுக்கு !

அவர் கதாநாயகனாக நடித்த 'ஆண்பாவம்' சூப்பர் ஹிட்.

"நீ ஏன்யா ஹீரோவா நடிக்கிறே?" என்று வெறுப்பேற்றிய விநியோகஸ்தர்கள் முன்னால் வெற்றி பெற்றுக் காட்டி விட்டார். வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் அது.

ஆனால் இதை விடப் பெரிய சந்தோஷத்தை அடைய ஆசைப்பட்டார் பாண்டியராஜன்.

பொதுவாக திரைப் படங்களின் வெற்றி விழாக்களில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர் , நடிக நடிகைகள்... இப்படி முக்கியமான கலைஞர்களுக்கு மட்டுமே ஷீல்ட் கொடுப்பது வழக்கம்.

ஆனால் 'ஆண் பாவம்' படத்தின் வெற்றி விழாவில் அந்த வழக்கத்தை மாற்றினார் பாண்டியராஜன்.

அந்தப் படத்தின் "காதல் கசக்குதய்யா" பாடல் காட்சியில் பாண்டியராஜன் நடனம் ஆடியிருப்பார். அவர் கூடவே சேர்ந்து பெயர் தெரியாத சில குரூப் டான்ஸர்களும் ஆடியிருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் ஞாபகத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன்.

அத்தனை குரூப் டான்ஸர்களையும் 'ஆண் பாவம்' வெற்றி விழா மேடைக்கு வரவழைத்து, தனித் தனியாக ஷீல்ட் கொடுத்துக் கௌரவித்தார் பாண்டியராஜன்.

அசந்து போனார்கள் அந்த குரூப் டான்ஸர்கள்.

அவர்கள் வாழ்வில் இதுவரை பார்க்காத பாக்கியம்,

கிடைக்காத கௌரவம் இது.

அந்த நெகிழ்வான நிகழ்ச்சியை பாண்டியராஜனே நேரிலே சொல்லக் கேட்டேன் : "எனக்கு தெரியல ஜான் பிரதர், எனக்கு முன்னாலே யாராவது இப்படி குரூப் டான்ஸர்களுக்கு ஷீல்ட் கொடுத்தாங்களான்னு தெரியல. அதுக்குப் பிறகு செய்றாங்களா, அதுவும் தெரியல. ஆனா அன்னைக்கு என் மனசுக்கு கொடுக்கணும்னு தோணுச்சு. கொடுத்தேன். அவ்வளவுதான்."

தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஷீல்டுகளை பார்த்துப் பார்த்து பரவசம் அடைந்தார்களாம் குரூப் டான்ஸர்கள்.

"விழா முடிஞ்சது ஜான் சார் , ஃபங்ஷனுக்கு குடும்பத்தோடு வந்த குரூப் டான்ஸர்கள் கொண்டாட்டத்தோடு ஷீல்டை வீட்டுக்கு கொண்டு போனாங்க. அவங்க குடும்பத்து குழந்தைங்க ஏதோ பிள்ளையார் சிலையை தூக்கிட்டு போற மாதிரி, தலையில வச்சு அந்த ஷீல்டை வீட்டுக்கு தூக்கிட்டு போறாங்க. அந்த ஃபேமிலில உள்ளவங்க எல்லோர் முகத்திலும் ஏகப்பட்ட சந்தோஷம். ஏன்னா அவங்க வாழ்க்கையில முதல் முதலா வாங்கற ஷீல்ட் அது."

நான் பாண்டியராஜன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களில் ஈரம் மின்ன பாண்டியராஜன் சொன்னார் : "சினிமாவில ஜெயிச்சு நான் முதல் முதல்ல ஷீல்ட் வாங்கறப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா ஜான் சார் ? அதே சந்தோஷத்தை அன்னைக்கு ஷீல்ட் வாங்கின அந்த குரூப் டான்ஸர்ங்க எல்லோருடைய முகத்திலயும் பார்த்தேன். என் வாழ்க்கையின் சந்தோஷங்களிலேயே மிகப் பெரிய சந்தோஷம் அன்னைக்குத்தான் எனக்கு கிடைச்சது."

கண்களை துடைத்துக் கொண்டார் பாண்டியராஜன்.

இப்படிப்பட்ட ஈர இதயம் உள்ள பாண்டியராஜன் அவர்களின் நட்பு வட்டத்தில் நான் இருப்பது, உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறது எனக்கு !

பாண்டியராஜன் குருவான கே.பாக்கியராஜ் அடிக்கடி சொல்வது என் நினைவுக்கு வந்தது :

"சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம், அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான்."

நல்லது.

(அக்டோபர் 2) பாண்டியராஜன் அவர்களின் பிறந்த தினம்.

வழக்கம்போல வாட்சாப்பில் வாழ்த்து சொல்லி விட்டேன்.

ஃபேஸ்புக் நண்பர்கள் சார்பாக இப்பொழுது வாழ்த்து சொல்கிறேன்.

வாழ்க வாழ்க..!

John Durai Asir Chelliah

மூர்த்தி சிறிது! கீர்த்தி பெரிது என்பது இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது. நல்ல மனம் வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக