மொத்தப் பக்கக்காட்சிகள்

11/29/2024

பாலச்சந்தர் நினைவு தினம். (23 டிசம்பர் 2014)

 

கொஞ்சம் எச்சரிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் பாலச்சந்தர்.

அவருக்கு எதிரே ஒரு பத்திரிகை நிருபர்.

இதுவரை அந்த நிருபர் கேட்ட கேள்விகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் தர்மசங்கடமானது.

இதற்கு பதில் சொன்னால்,

தான் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பது பாலச்சந்தருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து போயிற்று. அதனால்தான் அவர் கொஞ்சம் உஷார் ஆனார்.

அந்த நிருபர் கேட்ட கேள்வி இதுதான்.

“ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும்.

ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ?”

எடக்கு மடக்கான இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் கூறப் போகிறார், அதைத் தனது பத்திரிகையில் எப்படி தலைப்பு வைத்து வெளியிடலாம், எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தலாம் என ஆவலோடும் பரபரப்போடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த பத்திரிகை நிருபர்.

ஆனால் இதற்கு பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

"நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார்.

ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.

அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.

அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

அதைத்தான் நான் பார்க்கிறேன்.”

இப்படி ஒரு பக்குவமான பதிலை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த பத்திரிகை நிருபர், பணிவோடு எழுந்து பாலச்சந்தரை வணங்கி விட்டு புறப்பட்டுப் போனார்.

பாலச்சந்தர் நினைத்திருந்தால்

அந்த நிருபரின் கேள்விக்கு என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். அதற்கான முழு உரிமையும், தகுதியும் அவருக்கு இருக்கிறது.

ஆனால் தனக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய இமேஜ் கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கிறது. அந்த இமேஜ் கெடுவதற்கு, தான் பேசும் வார்த்தைகள் காரணமாகி விடக்கூடாது.

தான் பேசும் எந்த ஒரு வார்த்தையும், எந்த ஒரு மனிதரையும் காயப்படுத்தி விடக்கூடாது, எவர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாலச்சந்தர்.

பாலச்சந்தர் தன் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை இந்த ஒரு சம்பவமே நமக்கு புரிய வைக்கிறது.

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.”

இன்று பாலச்சந்தர்

நினைவு தினம்.

(23 டிசம்பர் 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக