மொத்தப் பக்கக்காட்சிகள்

11/26/2011

மதவாதிகளே! தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!


ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.

டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.

‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.

அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.

படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.

அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.

இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.

இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!

மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!

இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!

தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

எது சரி


தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதைகள்

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.


கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்

எதை விட்டுக் கொடுப்பது?

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காத


ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!

மனிதநேயம் - தென்கச்சி சுவாமிநாதன்

thenkachi-swaminathan
இப்பொழுதெல்லாம் மிருகங்களைவிட மனிதனிடம் தான் ஜாக்கிரதையாக பழக வேண்டி உள்ளது. ஏனென்றால், மிருகங்கள் என்ன செய்யும் என்பது தெரியும். எனவே அதற்காக முன்கூட்டியே தயாராகிவிடலாம்.

ஆனால் மனிதன் அடுத்து என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாது.

என்ன தான் மதம் மனித நேயத்தை குலைக்கிறது என்றாலும், மதமோ, கட்சியோ, அரசியலோ எல்லாவற்றையும் விட மனிதநேயம் தான் முக்கியம் என்பதற்கு இன்றைக்கும் நடக்கும் பல நிகழ்ச்சிகள் உதாரணமாக உள்ளது.

மனித நேயம் குறைந்து வருவதற்கு மனிதர்கள், குறிப்பாக தமிழர்கள் அறிவு வசப்படுவதற்கு பதிலாக உணர்ச்சி வசப்படுவது தான் காரணம்.

பெரும்பாலும் மனிதநேயம் எங்கு குறைகின்றது என்றால், படித்தவர்கள், அரசியல்வாதிகள், பெரிய மனிதர்கள் அதிகம் உள்ள இடத்தில் தான் மனிதநேயம் தேய்கிறது.

அவசர வாழ்க்கை, கோபம், டென்ஷன், கர்வம் கொள்ளுதல் சகிப்புத்தன்மை குறைவு, பொறாமை போன்றவை தான் மனித நேயம் குறைய வழிவகுக்கிறது.

இதனால் மனிதனுக்கே மனிதனை அடையாளம் காட்ட வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.