மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

7/23/2012

1962 தேர்தல்: 50 இடங்களில் தி.மு.க. வெற்றி - காஞ்சீபுரத்தில் அண்ணா அதிர்ச்சி தோல்வி


 
1962 ல் நடைபெற்ற மூன்றாவது பொதுத்தேர்தலில், காங்கிரசுக்கு "மெஜாரிட்டி" கிடைத்தது. என்றாலும், தி.மு.கழகம் 50 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.1957 தேர்தலில் தி.மு.கழகம் முதன் முதலாக போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது அல்லவா? அந்த 15 தொகுதிகளிலும் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று காமராஜர் திட்டமிட்டு வேலை செய்தார்.
 
அந்த 15 தொகுதிகளிலும் தி.மு.க. தோற்றது. 1957 ல் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி, 1962 தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார்.
 
15 தொகுதிகளில் தி.மு.க.வை தோற்கடிப்பதில் காமராஜர் வெற்றி பெற்றார் என்றாலும், தி.மு.கழகம் புதிதாக 50 இடங்களில் வெற்றி பெற்றது அவருக்கும், மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. தி.மு.கழகம் 50 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், அக்கட்சி மகிழ்ச்சி அடையமுடியவில்லை.
 
காரணம், கட்சித் தலைவர் அண்ணா, தன் சொந்தத் தொகுதியான காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், பஸ் அதிபருமான நடேச முதலியாரிடம் தோல்வி அடைந்தது தான். தேர்தல் தோல்வியைக்கண்டு அண்ணா துவண்டு போய்விடவில்லை. "என் தம்பிமார்கள் 50 பேரின் உருவத்தில் நான் சட்ட சபைக்குச் செல்கிறேன்" என்று கூறினார்.  
 
மொத்தம் உள்ள 206 தொகுதிகளில் 139 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. காமராஜர் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆனார். முந்திய மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களில் எம். பக்தவச்சலம், ஆர்.வெங்கடராமன், பி.கக்கன், வி.ராமையா ஆகியோர் மீண்டும் மந்திரிகளானார்கள்.
 
ஜோதி அம்மாள், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார், பூவராகன், அப்துல் மஜீத் ஆகியோர் புதிதாக இடம் பெற்றார்கள். இவர்களுக்கு கவர்னர் விஷ்ணுராம்மேதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். (சி.சுப்பிரமணியம் இம்முறை பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று, நேரு மந்திரி சபையில் இடம் பெற்றார்.) 
 
சட்டசபை தேர்தலில் அண்ணா தோல்வி அடைந்தது, ஒருவிதத்தில் அவருக்கு நன்மையாய் முடிந்தது. தி.மு.கழக எம்.பி.க்கள், அவரை பாராளுமன்றத்தின் ஓர் அங்கமான டெல்லி மேல் சபைக்கு ("ராஜ்ய சபை") தேர்ந்தெடுத்தார்கள்.
 
ராஜ்ய சபையில் அவர் முதன் முதலாகப் பேசிய பேச்சை இந்தியாவே கூர்ந்து கவனித்தது. அன்றைய கூட்டத்துக்கு மேல் சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.கழகத்தின் லட்சியங்களையும், கொள்கைகளையும் விளக்கிய அண்ணா, "திராவிட நாடுதான் எங்களுடைய லட்சியம். நாட்டைப் பிரித்துக் கொடுங்கள்" என்று கூறினார்.
 
இந்திய பாராளுமன்றத்தில், பிரிவினை கோரிக்கை ஒலித்தது அதுதான் முதல் தடவை. அதற்கு முன் தி.மு.கழக எம்.பி.க்களாக இருவர் இருந்தும் அவர்கள் பிரிவினை பற்றிப் பேசவில்லை. அண்ணாவின் பேச்சு, பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக இடம் பெற்றது.
 
பிரிவினை கோரிக்கையை அண்ணா வலியுறுத்தியது வட இந்தியத் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்த போதிலும், அண்ணாவின் பேச்சு வன்மையை வியந்து போற்றினர். அண்ணா பேசியபோது, பிரதமர் நேரு ராஜ்யசபையில் இல்லை.
 
ஆனால் பின்னர் அவர் விவாதத்துக்கு பதிலளிக்கும் போது, அண்ணாவின் பேச்சு பற்றி குறிப்பிட்டார். "ஏற்கனவே ஒரு பிரிவினை (பாகிஸ்தான்) நடந்தது போதும். இனி பிரிவினை வேண்டாம். பிரிவினைக்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம்" என்று கூறினார். 
 
Thanks to Malaimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக