மொத்தப் பக்கக்காட்சிகள்

1/27/2012

5 ஆயிரம் பாடல்கள் எழுதிய கண்ணதாசன்



தமிழ்த்திரைப் படங்களுக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கருத்தாழம் மிக்கப் பாடல்கள் எழுதி சாதனை படைத்தவர், கவியரசர் கண்ணதாசன்.சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார். கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் சாத்தப்ப செட்டியார். தாயார் விசாலாட்சி ஆச்சி.

இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழந்தைகள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. கண்ணம்மை, 2. ஞானாம்பாள், 3. முத்தாத்தாள், 4. காந்திமதி, 5. கண்ணப்பன், 6.ஏ.எல்.சீனிவாசன்,7. சொர்ணம்பாள், 8. முத்தையா(கண்ணதாசன்), 9. சிவகாமி.

9 குழந்தைகள் பிறந்த காரணத்தால், சாத்தப்ப செட்டியார் ஏழ்மையில் வாழ்ந்தார். முதல் இரண்டு மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். செட்டி நாட்டில், அதிக பிள்ளைகள் உடையவர்கள், குழந்தை இல்லாத உறவினர்களுக்கு, குழந்தைகளை சுவீகாரம் செய்து கொடுப்பது வழக்கம். தனது ஐந்தாவது மகன் கண்ணப்பனையும், ஆறாவது மகன் ஏ.எல்.சீனிவாசனையும் பங்காளிகளுக்கு சுவீகாரம் செய்த கொடுப்பதற்கு சாத்தப்ப செட்டியார் ஏற்பாடு செய்தார்.

அப்போது ஏ.எல்.சீனிவாசன் நோஞ்சானாக இருந்தார். பெற்றோரைப் பிரிய மனமின்றி அழுதார். அதனால், முத்தையா (கண்ணதாசன்), 'அண்ணனுக்கு பதில் நான் சுவீகாரமாகச் செல்கிறேன்' என்று முன்வந்தார். அவர், முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு தத்து ப்பிள்ளையாகச் சென்றார். இப்படி சுவீகாரம் சென்ற முறையில் காரைக்குடி 'கம்பன் அடிப்பொடி'சா.கணேசன், கண்ணதாசனுக்கு தாய்மாமன் ஆனார்.(தத்து கொடுக்கப்பட்ட கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன்தான் பஞ்சு அருணாசலம்.இவர் பிற்காலத்தில் கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்து, பல படங்களுக்கு கதை- வசன ஆசிரியராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.)

கண்ணதாசனுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா பின்னர் கவிதைகள் எழுதத் தொடங்கும்போது, அவர் கண்ணதாசன் என்ற புனை பெயரை சூட்டிக்கொண்டார். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது. கண்ணதாசன் காரைக்குடி அருகில் உள்ள அமராவதிப் புதூரில் இருக்கும் குருகுலம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பிறகு படிக்க வசதி இன்றி தனது 17-வது வயதில் படிப்பை நிறுத்தினார்.

அவர் படிக்கும்போது பள்ளியின் ஆசிரியராக இருந்தவர்,'நீ உருப்பட மாட்டாய்' என்று அடிக்கடி சொல்லி இருக்கிறார்.

'அவர் சொன்னதின் பலனாகத்தானோ என்னவோ நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்' என்று கண்ணதாசன் பிற் காலத்தில் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிடுவார். 1944-ம் ஆண்டில் புதுக்கோட்டையில் இயங்கி வந்த 'திருமகள்' பத்திரிகை ஆசிரியராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு வயது 17 தான். கண்ணதாசன் எழுதிய கவிதைகள் அதில் பிரசுரமாயின. 1945-ல் 'திரை ஒளி' பத்திரிகையின் ஆசிரியரானார், கண்ணதாசன். பிறகு அங்கிருந்து விலகி, 1947-ல் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய 'சண்ட மாருதம்' என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார்.

'சண்ட மாருதம்' ஆசிரியராக இருந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசன் இடம் பெற்றார்.அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'மந்திரிகுமாரி'படத்துக்கு வசனம் எழுத மு.கருணாநிதி வந்தார். கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்தக் காலக்கட்டத்தில்,திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். கண்ணதாசனுக்கும், திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதவேண்டும் என்று கண்ணதாசன் விரும்பினார்.

'சண்டமாருதம்' பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வந்தால் பாடல் ஆசிரியர் ஆக முன்னேற முடியாது என்று கண்ணதாசன் கருதினார். எனவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கோவை சென்றார். அங்கு ஜுபிடர் நிறுவனம், கேமரா மேதை கே.ராம்நாத் டைரக்ஷனில் 'கன்னியின் காதலி' என்ற படத்தைத் தயாரித்து வந்தது. ஜுபிடரின் மானேஜராக இருந்த வெங்கடசாமி (நடிகை யூ.ஆர்.ஜீவரத்தினத்தின் கணவர்) சிபாரிசின் பேரில், அந்தப் படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது.
'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலை எழுதிக்கொண்டு போய்,டைரக்டர் ராம்நாத்திடம் கொடுத்தார், கண்ணதாசன். பாடல் டைரக்டருக்கு பிடித்து விட்டது. அந்தப் பாடலை, கதாநாயகி மாதுரிதேவிக்காக டி.வி.ரத்னம் பாடினார்.

கண்ணதாசனின் முதல் பாடலே 'ஹிட்' ஆகியது. கல்கத்தாவில் தேவகி போஸ் என்ற பிரபல டைரக்டர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த 'ரத்ன தீபம்' என்ற படத்தை தமிழில் 'டப்' செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது. அவர் கல்கத்தாவுக்குச் சென்று, வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பினார். 1953-ல் தி.மு.கழகம் நடத்திய டால்மியாபுரம் போராட்டத்தில் கண்ணதாசன் கலந்து கொண்டார். அவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் 'தென்றல்' என்ற வாரப் பத்திரிகையை தொடங்கினார். அதில் கண்ணதாசன் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் அவருக்கு புகழ் தேடித்தந்தன.

 1954-ல் நேஷனல் புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனி, ஆங்கிலப்படம் ஒன்றின் கதையை தழுவி 'அம்மையப்பன்' என்ற படத்தை தயாரித்தது.

சரித்திரப் பின்னணியுடன் இதன் திரைக்கதை- வசனத்தை கருணாநிதி எழுதினார். இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா ஜோடியாக நடித்தனர். ஏ.பீம்சிங் டைரக்ட் செய்தார். இதே கதையை மாடர்ன் தியேட்டர்சார் 'சுகம் எங்கே' என்ற பெயரில் சமூகப் படமாகத் தயாரித்தார்கள். கே.ஆர். ராமசாமி, சாவித்திரி நடித்த இப்படத்தை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார். வசனத்தை கண்ணதாசனும், ஏ.கே. வேலனும் எழுதினார்கள்.

இரண்டு படங்களின் கதைகளும் ஒரே மாதிரி இருந்ததுடன், சில கட்டங்களில் வசனமும் ஒரே மாதிரி இருந்தது! இதனால் கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் உரசல் ஏற்பட்டது. இருவருடைய கருத்து மோதல்களும், 'முரசொலி'யிலும், 'தென்ற'லிலும் எதிரொலித்தன. 

Thanks to Malaimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக