மொத்தப் பக்கக்காட்சிகள்

12/05/2011

இலவச திட்டங்கள் இல்லாமல் இருக்குமேயானால் விலையுயர்வைத் தவிர்க்க முடியும்


பால் விலை, பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்காக அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் நிச்சயமாக குறை சொல்லும். மறுபரிசீலனை செய்து பஸ் கட்டண உயர்வை குறைக்கச் சொல்வார்கள். தமிழக அரசும் நிச்சயமாக இதில் சிறிது மாற்றங்களைச் செய்து, கட்டணங்களைக் கொஞ்சம் குறைக்கலாம். ஒட்டகத்தின் மீது சுமையை ஏற்றிவிட்டு, கொஞ்சம் சுமையை ஒட்டகத்தை ஏமாற்றக் கீழே போடும் உத்திதான் இதுவும்!


 தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வு தவிர்க்கப்படக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை.மின்சாரத் துறையைப் பொருத்தவரையில் வழித்தட இழப்பை குறைப்பதும், வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்குவதைத் தவிர்ப்பதும் செலவுகளைக் குறைக்க உதவும். இதனால் மின்கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிக்க முடியும்.


இலவச மின்சாரம் அளித்தாலும்,அவற்றை மீட்டரில் அளந்து பதிவு செய்யவும், அந்த விவசாய நிலத்தில் மின்பயன்பாட்டுக்கு ஏற்ப விவசாயம் நடைபெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொத்தாம் பொதுவாக இலவச மின்சாரம் வழங்குவதால், அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.


மத்திய அரசுக்கு இணையாக சம்பளம்,மின்வாரியத்தில் கூடுதலாக ஆட்கள் நியமனம் ஆகியவற்றால் அத்துறைக்கு ஏற்பட்டுள்ள செலவினம் தான் அத்துறைக்கு இழப்பைக் கூடுதலாக்குகிறது. அதைச் சரிசெய்யத்தான் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது. மின்துறையைப் பொருத்த வரை சரியான அணுகுமுறை, நடவடிக்கை எடுக்கப்பட்டாலே போதும் இந்த மின்கட்டண உயர்வைத் தவிர்க்க முடியும்.


பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியே ஆக வேண்டும் என்கின்ற போது,அதன் அடுத்தகட்ட தாக்கம் விற்பனை விலையின் மீது தான் விழும்.இல்லையென்றால் இந்த விலை உயர்வை அரசு தாங்கிக் கொள்ள வேண்டும்.


பஸ் கட்டணம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.திமுக ஆட்சிக் காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்ட பின்னரும்கூட பஸ் கட்டணத்தைத்  உயர்த்தாமல் காலம் கடத்தினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. தனியார் பேருந்துகள் மட்டும் சில வழித்தடங்களில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் உயர்த்திக் கட்டணம் வசூலித்தன.அதை அந்த அரசு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தனியார் பேருந்துகளைப் போன்று, அப்போது பொதுவாக ஒரு ரூபாய் உயர்த்தியிருந்தாலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த இரு ஆண்டுகளில் சில நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். .


 இந்த விலை உயர்வை அரசே, சென்ற ஆட்சிக் காலத்தில் திமுக செய்ததைப்போல, தாங்கிக்கொண்டு சமாளிக்க முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது. இலவசங்களை மேலும்மேலும் கூட்டிக்கொண்டே போகிற அரசினால், இதைச் செய்ய முடியாது. மக்கள் தாங்கள் பெறும் இலவசங்களுக்குத் திருப்பித் தரும் விலைதான் இத்தகைய கட்டணங்கள் மற்றும் விலை உயர்வு. இந்த இலவச திட்டங்கள் இல்லாமல் இருக்குமேயானால், இந்த விலை உயர்வைக் கூடாது என்று கேட்கும் தார்மிக உரிமை நமக்கு இருந்திருக்கும். அரசுக்கும் விலையுயர்வைத் தவிர்க்கும் பொருளாதார வசதி இருந்திருக்கும்.
மிக்ஸி, 20 கிலோ அரிசி, லேப்}டாப், ஆடு, மாடு என்று இலவசங்களை அடுக்கிக்கொண்டே போனால், இந்த அரசினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை தானே ஏற்றுத் தாங்கிக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது.


அதைவிடக் கசப்பான புள்ளிவிவரம்: மது விற்பனை தமிழ்நாட்டில் மாதம்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏப்ரலில் ரூ.1555 கோடி, மே மாதம் ரூ.1736 கோடி, ஜூன் ரூ.1732 கோடி, ஜூலை ரூ.1796 கோடி, ஆகஸ்ட் ரூ.1800 கோடி, செப்டம்பர் ரூ.1824 கோடி, அக்டோபர் ரூ.1924 கோடி.

இத்தனைக் கோடி ரூபாய்க்கு சாராயம் (ஐஎம்எப்எல் என்றும் நாகரிகமாக சொல்லலாம்தான்) குடிக்கிற தமிழன், பாலுக்கும் பஸ்ஸýக்கும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கட்டுமே என்று அரசு நினைத்தால், அதற்காக யாரைக் குறை சொல்வது?


தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Thanks to Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக