மொத்தப் பக்கக்காட்சிகள்

12/24/2011

வாரியார் சொன்ன கருத்துக்கள்



தருக்கு கூடாது

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

கடவுளைக் காண

புறப்பற்றும் அகப்பற்றும் நீங்கப் பெறாதவர்கள் எத்தனை கோடி காலம் தவம் கிடந்தாலும் கடவுளைக் காண முடியாது. யான், எனது என்னும் பற்று அறுக்காதவரை ஈன சமயத்தார் என்கின்றார் அருணகிரிநாதர். இந்தப் பற்றுகள் இரண்டும் நீங்குவதற்கு உபாயம் பற்றற்ற பரமனை வழிபடுவதேயாகும்.

பிறவிப் பிணியை அகற்ற

பிறருடைய உடமையோ, உயிருள்ளவையோ நமக்கு எட்டாக்கனி போல் கசக்க வேண்டும். பிறர் பொருளை விரும்புதல் கூடாது. பிறகு தன் பொருளில் வைக்கும் பற்றையும் அறவே அகற்ற வேண்டும். இதுதான் பிறவிப்பிணியை மாற்றும் மார்க்கமாகும்.

மெய்ஞானம் தலைப்பட

நான், நான் என்ற எண்ணம் தான் அகப்பற்று என்பது. நான் செய்தேன், நான் சம்பாதித்தேன், நான் எல்லோரையும் காப்பாற்றினேன், நான் மிகவும் சமர்த்தன் என்ற எண்ணங்களை அடியோடு தொலைக்க வேண்டும். இந்த நான் என்கிற எண்ணம் என்று நீங்குகிறதோ, அன்றே மெஞ்ஞானம் தலைப்படும். நான் என்ற எண்ணம் கெட்டழிந்தவுடனே, துன்பம் முழுவதும் நீங்கப்பெற்று, அருட்பெருஞ்சோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் உண்டாகும். என்றுமழியா இன்பம் தோன்றும்.
அரியதை சாதிக்க
நீ எப்போதும் பெரியோரைத் துணைக்கொள். கல்லின் தன்மை தண்ணீரில் மூழ்கிவிடுவது. கட்டையின் தன்மை தண்ணீரில் மிதப்பது. சிறிய கல்லோ, பெரிய கல்லோ தண்ணீரில் போட்டால் தண்ணீருக்குள் மூழ்கி அமிழ்ந்துவிடும். ஆனால் ஒரு கல்லைப் படகு மேல் வைத்தால் அந்தக் கல் தண்ணீரில் மிதந்து செல்கிறது. அதுபோல் அறிவாற்றலால் ஆன்ற பெரியோர்களை நீ அடுப்பாயானால் உனது அறிவாற்றலுக்கு இயலாத பெரிய கருமங்களை நீ செய்து முடிப்பாய்.

படுக்கும் போது

நீ இரவில் படுக்கும் போது, நான் இன்று காலை கண் விழித்து எழுந்தது முதல் இப்போது கண் உறங்கப் படுக்கும் இதுவரை என்ன என்ன நன்மைகள் புரிந்தேன்? என்னால் இன்று யாருக்கு என்ன பயன் உண்டாகியது? மனதாலே, வாக்காலே, காயத்தாலே நான் இன்று செய்த நலங்கள் யாவை? என்று எண்ணுவாயாக.

பெரிய இன்பம்

இன்பங்களுக்கெல்லாம் பெரிய இன்பமாவது அறிஞர்களோடு பழகுவதேயாகும். அறிஞரோடு பழகும்போது உண்டாகும் இன்பம் இமையவர் உலகத்திலுமில்லை. மொழிக்கு மொழி தித்திக்கும் இனிய அறிவுரைகளும் அறிஞரிடம் உண்டாகின்றன. அவற்றால் உன் உள்ளம், உயிர், உணர்ச்சி ஆகிய அனைத்தும் குளிரும்.

கற்றவாறு ஒழுகு

நிரம்பவும் படிப்பதைவிட படித்தபடி நின்று ஒழுகுவதற்கு முயற்சி செய். படிப்பது உணவு உண்பது போலே, படித்தபடி ஒழுகுவது உணவு செரிப்பது (ஜீரணமாவது) போலே. உணவு நிரம்ப உண்டாலும் செரிக்கவில்லை யானால் என்ன பயன்? செரிக்காத உணவு துன்பம் செய்கின்ற தன்றோ? ஆதலினால் சிறிது கற்றாலும் கற்ற வண்ணம் நிற்க வேண்டும். "ஓதலின் நன்று ஒழுக்கமுடைமை."

ஆன்றோர் துணை

அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த ஆன்றோர்களைத் துணையாகக் கொண்டு ஒழுகு. அதனால் உனது வாழ்வு உயர்ச்சி உறும். துன்பத்தில் அழுந்த மாட்டாய். கொடியானது உயர்ந்த மரத்தைப் பற்றிச் சுற்றிக் கொள்வதனால் வானம் நோக்கி உயர்கிறது. இல்லையேல் மண்ணில் படர்ந்து காலினால் மிதிபடுகிறது.

இன்றே தருமம் செய்

பின்புறத்திலேயே கூற்றுவன் நிற்கிறான். அவன் எந்த நிமிடத்தில் உயிரைப் பற்றுவானோ தெரியாது. வாழ்க்கையோ நிலையற்றது. நீர் மேல் குமிழிக்கு நிகரானது. "இன்றைக்கோ, நாளைக்கோ, இன்னும் அரை நாழிகைக்கோ, என்றைக்கோ ஆவியிழப்பு" என்ற முதுமொழியினை நினைந்து தீயவைகளை விட்டு இயன்ற அளவில் தருமம் புரிதல் வேண்டும்.

இறைவனை நோவாதே

இறைவன் பாராட்சமில்லாதவன். விருப்பு வெறுப்பு இல்லாதவன். தன்னருள் புரியும் தயாநிதி. மாம்பழங்களை அதிகம் உண்டவனுக்கு வயிற்றுவலி உண்டாகும். அவரவர் செய்த வினைகளை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும். நாம் செய்த வினைப்பயனை நாம் நுகர்வது முறைதானே. துன்பங்கள் நேரும்போது, நாம் செய்த வினையையும் நம்மையும் நோவதன்றி இறைவனையும் பிறரையும் நோவக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக