மொத்தப் பக்கக்காட்சிகள்

12/24/2011

ஆன்மீகம் பொறாமை கூடாது


பகவான், மனிதர்களுக்கு மனதைக் கொடுத்தான். அதிலே எண்ணங்களை எழச் செய்தான். எண்ணங்களில் ஆசைகளைத் தோன்றச் செய்தான். ஆசையின் காரணமாக பாவங்களைச் செய்கின்றனர். பாவத்தின் காரணமாக பிறவி ஏற்படுகிறது. பிறப்பதும், பாவம் செய்வதும், மீண்டும் பிறப்பதுமே தான் தொழிலா? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா? ஆசைகளை விட்டால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள். இதற்கு ஆசார்யர்களும், மகான்களும் தான் வழி காட்ட வேண்டும். அவர்களை அண்டினால் வழி பிறக்கும். ஆசை என்பது மட்டுமல்ல, பொறாமை என்பதும் கூடாது. இதை, “மாச்சர்யம்’ என்பர்.

“அவன் ஏதோ சவுக்கியமாக இருக்கிறான். அவன் செய்த புண்ணியம்…’ என்று நினைக்க வேண்டும். “அதுபோல் நமக்கு கிடைக்கவில்லையே…’ என்று மனம் வேதனைப்படக் கூடாது! நாம் முன்னுக்கு வர நல்ல வழியில் முயற்சி செய்ய வேண்டுமே அல்லாது பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதால் என்ன பயன்? அவர்களைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணி, தீய வழிகளில் ஈடுபட்டு, பணம், பொருள் சம்பாதித்தால், முடிவில் வேதனை தான் மிஞ்சும். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!’ இந்த மருந்து சிலருக்குப் பிடிக்காது; சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. என்ன செய்வது? காரணமின்றி ஒரு துவேஷம்! இது, இவனையே அழித்து விடும். யட்சப்ரச்னத்தில் துவேஷம் என்பதைப் பற்றி யட்சஸ் கேள்வி கேட்கும் போது, துரியோதனன் ஞாபகம் வருகிறது. துரியோதனனைப் பற்றி தர்மபுத்திரர் குறைவாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கிறது. அதனால், “மாச்சர்யம் உள்ளவன் யார்?’ என்று கேட்கிறது. தர்மபுத்திரரின் மனதில் துரியோதனனைப் பற்றிய ஞாபகமே வரவில்லை. துரியோதனனால் தான் தனக்கு இப்படி காட்டுக்கு வர நேர்ந்தது என்பதும் சொல்லவில்லை. “என் விதி வசத்தால் கானகம் வந்தேன்…’ என்றார். இது மகான்களின் நிலை, அடுத்து, “எது அகங்காரம்?’ என்று கேட்கிறது. தான், தனது என்ற எண்ணமே அகங்காரம் என்கிறார் தர்மர். “தானுள்ளது குழம்பு; தானற்றது ரசம்…’ என்கின்றனர். சமையலில், “தான்’ என்ற காய் இருந்தால் அது குழம்பு. அந்த தான் என்ற காய் இல்லாதது ரசம்!

“தான், தனது’ என்ற அகம்பாவம் உள்ளவரையில் ஒரு வித பற்றுதலும், ஆசையும் இருக்கும். இந்த இரண்டும் இருந்து விட்டால் மன அமைதி கெடும். மன அமைதி இல்லையேல் ஒரே குழப்பம்தான். மனம் குழம்பி விடுகிறதல்லவா? அதனால், “தான்’ இருந்தால் குழம்பு என்கின்றனர். இந்த “தான், தனது’ என்ற அகங்காரம் இல்லாவிடில், எதிலும் ஆசையோ, பற்றுதலோ இராது!

“நான், என்னுடையது என்று உலகில் என்ன சார் இருக்கிறது! ஏதோ அவன் கொடுத்தான்! வைத்துக் கொண்டிருக்கிறேன். அவன் எடுத்துக் கொள்வதானால் கொடுத்து விட வேண்டியது தானே…’ இப்படி ஒரு எண்ணம் இருந்து விட்டால் வாழ்க்கையே ரசமாக இருக்கும். பரமானந்தம் பெறலாம். அதனால், “தான்’ அற்றது ரசம் என்கின்றனர். குழப்பம் வேண்டாம். மனத் தெளிவு இருந்தாலே போதும்.

சஞ்சல மனதுடன் இருப்பவன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? சதா சஞ்சலமும், குழப்பமும் இருந்தால் வாழ்க்கையை எப்படி ரசிக்க முடியும்? அதனால், “தான், தனது’ என்பது தான் அகங்காரம் என்பது தர்மரின் பதில். இதையெல்லாம் நாம் விவேகத்தோடு படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்! ஏனோதானோ என்று இருக்கலாமா? வாழ்நாள் என்பது ஒரு குறிப்பிட்ட குறுகிய காலம் தானே! நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி நல்ல பயன் பெற வேண்டாமா? இந்த ஜென்மாவில் இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு ஜென்மாவில் ஞானம் பெற்று விடுதலை பெற வேண்டாமா? அதற்கு இதெல்லாம் அஸ்திவாரமாக அமையுமே! வீண் பொழுது போக்கினால் என்ன பயன்? யோசிக்க வேண்டும்! ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக