மொத்தப் பக்கக்காட்சிகள்

11/05/2011

நதி நீர் இணைப்பு சாத்தியமே

காந்திநகர்: நதி நீர் இணைப்பு சாத்தியமில்லாதது. இதனால் இந்தியாவில் சுற்றுச்சூழல், பொருளாதார, மனிதகுல பேரழிவு ஏற்படும் என கூறியுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
iron_gate_dam_klamath_river_california_treehugger_american_rivers
   இதுகுறித்து குஜராத் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நதீன் படேல் கூறுகையில், நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது என்பது எளிதல்ல என்ற ஜெய்ராம் ரமேஷின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நிச்சயம் அது சாதாரண விஷயமல்லதான். ஆனால், அந்தத் திட்டத்தால் பேரழிவு ஏற்படும் என்று ரமேஷ் கூறுவதை அப்படியே நிராகரிக்கிறேன்.

குஜராத் மாநிலத்தில், கிட்டத்தட்ட அரை டஜன் நதி நீர் இணைப்புத் திட்டங்களை நாங்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். சுஜலம்-சுபலம், சபர்மதி- சரஸ்வதி, பாதர்- மாஹி ஆறுகள் இணைப்புத் திட்டம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டங்களால் பலன்களும் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டங்களால் வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் குடிநீர்ப் பிரச்சினை, நீர்ப்பாசனப் பிரச்சினைக்கு பெரும் விமோச்சனம் பிறந்துள்ளது.

நதிகள் இணைப்பால் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. குஜராத் முழுவதும் அமலாகிக் கொண்டிருக்கும் நதி நீர் இணைப்புத் திட்டங்களால் நாட்டின் பசுமைச் சூழல் மேலும் அதிகரித்துள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.
ஆறுகளை இணைப்பது என்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடிய திட்டம்தான். ஆனால் அதை விட மக்களுக்கு தண்ணீர் கிடைப்பது முக்கியமல்லவா. அதைத்தான் நாங்கள் கருத்தில் கொண்டு பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கான இந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.

முன்னாள் மத்திய நீர் வளத்துறை செயலாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆலோசகருமான நாவல்வாலா கூறுகையில், நதி நீர் இணைப்பு நிச்சயம் நாட்டுக்கு மிகுந்த நன்மை பயக்கக் கூடியதே.

 நமது நாட்டின் மழை பெய்யும் முறைகள் மாறிப் போய் விட்டன. நீராதாரங்கள் குறைந்து விட்டன. இப்படிப்பட்ட நிலையில் நாட்டில் சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது. ஒரு பக்கம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு பக்கம் வறட்சி தலைவிரித்தாடுகிறது.

இப்படி உள்ளதை மாற்றி தண்ணீர் அதிகம் உள்ள பகுதியிலிருந்து அவற்றைத் திருப்பி தண்ணீரே இல்லாமல் தவிக்கும் பகுதிகளுக்குக் கொடுப்பது நமது கடமையாகும்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982ம் ஆண்டு தேசிய நீர் மேலாண்மை கழகம் உருவாக்கப்பட்டது. நதி நீர் இணைப்பு குறித்து ஆய்வு செய்யவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் சுற்றுச்சூழலியாளர்கள் தேவையில்லாமல் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

ஜெய்ராம் ரமேஷ் கூறியது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. 1992-93ல் நானும், அவரும் மத்திய திட்ட ஆணையத்தின் இணைச் செயலாளர்களாக இருந்தோம். அவர் மிகவும் புத்திசாலியானவர். அதேசமயம், ஆறுகளை இணைப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதனால் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். பல்வேறு மாநிலங்களில் நிலவும் வறட்சி, குடிநீர்ப் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.

இருப்பினும், ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பு அனைத்து உள்ளூர் நீராதாரங்களும் உரிய முறையில் முறைப்படுத்தப்பட்டு விட வேண்டும் என்றார்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக