ஊரெங்கும் வெடிக்கும் பட்டாசுகள், சாலைகளெங்கும் பறந்து திரியும் காகிதக் குப்பைகள், காற்றுடன் கைபிடித்துத் திரியும் கரிய புகை, வீட்டுக்கு வந்து சேரும் பலகாரங்கள், விடியல் முதல் இரவு வரை தொலைக்காட்சியில் சிரிக்கும் அரிதார முகங்கள், புத்தம் புதிதாய் காத்திருக்கும் பட்டாடை இவற்றைத் தவிர தீபாவளி என்றவுடன் என்னென்ன நினைவுக்கு வருகின்றன ?
இதைத் தவிர தீபாவளிக்கு வேறென்ன நினைவுக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்களா ?
இந்த தீபாவளியை எப்படி வித்தியாசமாகக் கொண்டாடவேண்டும் என யோசிக்கிறீர்களா ? இதை முயன்று பாருங்களேன்.
சில நிமிடங்களில் வெடித்தும், எரித்தும் கரைக்கும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ, இல்லாத ஏழைகளுக்கோ வழங்கிவிடுங்கள். ஏழையின் சிரிப்பில் நரகாசுரன் அழிவான்.
• பலகாரங்களை இந்த முறை உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஏழைகளின் குடிசைக் கதவைத் தட்டி பலகாரம் கொடுத்து மனிதத்தின் ஆழத்தை அறிவியுங்கள்.
• விழா நாட்கள் உறவுகளைப் பலப்படுத்தும் நாட்களாக இருக்கட்டும். உங்கள் குடும்பத்தில் யாரோடேனும் மனத் தாங்கல் இருந்தால் இந்த விழா நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று உறவை மீண்டெடுத்துக் கொள்ளுங்கள்.
• குடும்பத்தினரோடு இந்த தீபாவளிக்கு ஒரு அனாதை இல்லத்தைச் சென்று சந்தியுங்கள். உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள்.
• தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அருகில் இருக்கும் குடும்பத்தினரும் முழு நேரமும் பேசுங்கள். நீங்கள் இழந்து கொண்டிருப்பது என்ன என்பது புரிய வரும்.
• நீண்ட நாட்களாக பேசாத நண்பர்கள் உறவினர்களை அழையுங்கள். யாரிடமேனும் சண்டையிட்டுப் பிரிந்திருக்கிறீர்களெனில் அவர்களை முதலில் அழைத்து வாழ்த்துச் சொல்லி நட்பைப் புதுப்பியுங்கள்.
• விழாக்கள் உறவுகளை வளர்க்க வேண்டும். பிறரைப் புண்படுத்துவதற்காக விழாக்களை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள்.
• விழா நாட்கள் என்றாலே சுற்றுப் புறத்தை மாசுபடுத்துவதற்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதாதீர்கள். சுற்றுப் புறத்தைத் தூய்மையாய் வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
• விழா நாளில் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் முதியவர் தனிமையில் இருந்தால் குடும்பத்துடன் அங்கே சென்று அவர்களுடன் உங்கள் நாளைச் செலவிடுங்கள்.
• ஏற்கனவே இருளில் தடவி நடக்கும் சூழல் நமது. மின்சாரத்தைச் சிக்கனமாய்ச் செலவழியுங்கள்.
• நீங்கள் வெடிக்க நினைக்கும் பட்டாசுகளை எதிர் சேரியிலிருந்து ஆவலுடன் எட்டிப்பார்க்கும் குழந்தைகளின் கைகளில் கொடுத்துவிடுங்கள். அவர்கள் புன்னகை மத்தாப்புக்களில் விழா கொண்டாடுங்கள்.
விழா நாட்கள் மனிதம் விழா நாட்களாக அமைவதே எந்த ஒரு விழாவுக்கும் சிறப்பானதாய் இருக்க முடியும். இந்த விழா நாள் அதற்கான முதல் சுவடை உங்கள் இல்லங்களில் எடுத்து வைக்கட்டும்.
அனைவருக்கும் இதயம் நிறை தீபாவளி நல்வாழ்த்துக்கள்