மொத்தப் பக்கக்காட்சிகள்

10/17/2015

"ஆச்சி " மனோரமா வாழ்க்கை வரலாறு !

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. தென்னிந்தியாவில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.


"ஆச்சி' மனோரமா

தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா' கொண்டாடியவர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26ல் கோபிசாந்தா காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக மனோரமா பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பின் இவரது குடும்பம் வறுமை காரணமாக காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் என்ற இடத்துக்கு குடிபெயர்ந்தனர். மனோரமா தனது 12 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். "யார் மகன்' என்பது தான் இவரின் முதல் நாடகம். "அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம்.

நாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு "மனோரமா' என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

வெள்ளித்திரைக்கு பயணம்

நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். முதல் படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்தார். ஆரம்பக்காலத்தில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தினர். முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.

பாடல்

"மகளே உன் சமத்து' என்ற படத்தில் முதன்முதலாக பாடினார். தயாரிப்பாளர் குமார் என்பவர் இந்த வாய்ப்பினை வழங்கினார். "தாத்தா தாத்தா பிடி கொடு... இந்த தள்ளாத வயசில சடுகுடி' என்று இந்த பாடல் தொடங்கும். இருப்பினும் இவர் பாடிய "வா வாத்தியாரே வுட்டான்ட' என்ற பாடல் மனோரமாவின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது. "டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' , "நாட்டு புற பாட்டு ஒன்னு...' , "மெட்ராச சுத்தி பாக்க போறேன்...' , உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

ஆறு மொழிகளில்

மனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

ஜில் ஜில் ரமாமணி

"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்க வைத்தார்.

விருதுகள்

1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் "கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார்.

முக்கிய நிகழ்வுகள்

* 1963ல் வெளிவந்த "கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.

* "கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

* "குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார்.

* "நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று.

* அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார்.

* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என தெரிவித்தார்.

* ஒரு "டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் "சோ', இவரை "பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டார்.

* மனோரமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன் மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார்.

* "உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.

* "மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "கட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாக நடித்த "ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார்.

* இவர் கடைசியாக நடித்த படம் "பொன்னர் சங்கர்'.

நடித்த சில முக்கியபடங்கள்:

5 தலைமுறை நடிகை

*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*சின்னக்கவுண்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ரசிகன்
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்


பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது

"பெண் நடிகர் திலகம்' என்று மனோரமாவுக்கு முதல்வர் ஜெயலலிதா புகழாரம் சூட்டினார்.

  சென்னை தியாகராய நகரில் உள்ள மனோரமாவின் இல்லத்தில், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியது:

  எனது மூத்த சகோதரி மனோரமா இயற்கை எய்திவிட்டார். எனக்கு ஏற்பட்ட துக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஏராளமான திரைப்படங்களில் மனோரமாவும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். அவர் என்னை "அம்மு' என்று அழைப்பார். நான் என்றுமே "மனோரமா' என்று தான் அழைப்பேன். படப்பிடிப்பு இல்லாத நாள்களில் பல முறை அவரது இல்லத்துக்கு நான் சென்றிருக்கிறேன்.

"சாப்பிடுகிறாயா அம்மு?' என்று கேட்பார். "சரி' என்பேன். அவர் கையாலே எனக்கு உணவு பரிமாறுவார். அதேபோல பல முறை எனது இல்லத்துக்கு வந்திருக்கிறார். என்னுடன் அமர்ந்து உணவு அருந்தியிருக்கிறார். அந்த நாள்களை மறக்க முடியாது. எனக்கும், மனோரமாவுக்கும் இருந்த ஒரு பந்தத்தை என்றைக்கும் யாராலும் பிரிக்க முடியாது.

  மனோரமா மீது எம்.ஜி.ஆருக்கு ஒரு அலாதி பிரியம் எப்போதும் உண்டு. அதேபோன்று நடிகர் திலகமும் என்னிடம் மனோரமா பற்றி பேசும்போது, நடிப்பில் "மனோரமா ஒரு ஜீனியஸ்' என்று பலமுறை கூறியிருக்கிறார். உண்மையிலேயே, அவர் நடிப்பில் ஒரு மேதை தான்.
  நடிகர் திலகம் சிவாஜிகணேசன் போல், மனோரமாவும் "நடிகையர் திலகம்' அல்லது "பெண் நடிகர் திலகம்' என்றே சொல்லலாம்.

  மனோரமாவை போல், ஒரு சாதனையாளர் தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு எவரும் இருந்ததில்லை. இனி எவரும் பிறக்கப் போவதில்லை. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இனி எந்த காலத்திலும் எவராலும் நிரப்ப முடியாது.

  அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டும். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக