மொத்தப் பக்கக்காட்சிகள்

6/14/2014

மன நிம்மதி


சிவபெருமான் உலகை எல்லாம் படைத்துக் கொண்டிருந்தாராம். அவருக்கு உதவியாக உமாதேவியார் இருந்தாராம்.

எல்லா தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள் என்று எல்லாவற்றையும் படைத்துவிட்டு இறுதியாக தனது அம்சமாக மனிதனைப் படைத்தாராம்.

அவனைப் படைத்து விட்டு தன்னருகே உள்ள ஒவ்வொரு பாத்திரங்களிலும் உள்ள ஒவ்வொரு விஷயமும் மனிதன் அடையும் படிக்கு அருளினாராம்.
 முதலில் செல்வங்களை அடையும்படிக்கு செல்வம் உள்ள பாத்திரத்தில் உள்ள செல்வங்களை அவன்மீது தெளித்தாராம்.
பிறகு கல்வி, தைரியம், சந்தோஷம் என்று அங்கிருந்த பாத்திரங்களில் உள்ள எல்லாவற்றையும் அவன் மீது வர்ஷித்து அவையெல்லாம் அவனுக்கு கிடைக்கும்படிக்கு அருளினாராம்.

எல்லாவற்றையும் கொடுத்தாலும் ஒரு பாத்திரத்தை மட்டும் கொடுக்காமல் இருக்கவே, உமா தேவியார் சுவாமி ''இந்த பாத்திரத்தில் என்ன இருக்கிறது ? இதை மட்டும் ஏன் மனிதனுக்கு கொடுக்காமல் ஒதுக்குகிறீர்கள் ? ஆறறிவு, வடிவம், இத்யாதி செல்வங்களையெல்லாம் எல்லாம் கொடுத்த நீங்கள் இதை மட்டும் கொடுக்காமல் விட்டதென்ன ? அப்படி அதில் என்னதான் இருக்கிறது ? என்று கேட்கவும், சிவபெருமான் புன்னகைத்தபடி ''தேவி அதில் உள்ளது நிம்மதியாகும்'' என்கிறார்.

உமா தேவியும் அதை ஏன் கொடுக்கவில்லை என்று மீண்டும் வினவ, சிவபெருமான் ''தேவி அதைக் கொடுத்துவிட்டால் மனிதன் என்னை மறந்துவிடுவான் என்பாராம்.''

இது கதைதான் என்றாலும் மிகப் பெரிய உண்மையை உணரவைக்கும் கதையாகும்.

நாம் வாழும் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் உற்று நோக்கும் போது இந்த உண்மை புரியும்.

மன நிம்மதி என்பது பூர்வ புண்ணியத்தினால்தான் கிடைக்கும் என்று புதிய கதையெல்லாம் சொல்வார்கள்.

 கிட்டத்தட்ட உண்மை நிலையும் அவர்கள் கூற்றுக்கு சாதகமாகவே இருக்கிறது.

 மன நிம்மதி என்பது அரிதாகவே இருக்கிறது.

நம் எல்லோருடைய அனுபவமும் இதுதான். கல்வி, பதவி, சொத்து, அந்தஸ்து என்று ஒவ்வொன்றாக கிடைக்கக் கிடைக்க நிம்மதி என்பது விலகிப் போய்க் கொண்டே இருக்கிறது.

ஆனால் இதுவே தீர்மானமான முடிவல்ல. நாம் ஆழ்ந்து சிந்தித்தோமேயானால் ஆரோக்யம், சக்தி, அறிவு, உணர்வு, உற்சாகம், சந்தோஷம் எல்லாம் நம் வாழ்வில் அளவுக்கு அதிகமாகவே கொட்டிக் கிடக்கிறது.

அதே போல் மன நிம்மதியும் நம்மிடம் ஏராளமாகவே இருக்கிறது.

ஆனால் அதை அடையும் வழிமுறைகளை நாம் பின்பற்றுவதில்லை.

 நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் முறை, இயற்கைக்கும், இறைவனுக்கும் முரணான செயல்பாடுகள் என்ற இவற்றை விட்டு கொஞ்ச கொஞ்சமாக விலகி வருவதால் ஆரோக்யம், சந்தோஷம், மன நிம்மதி எல்லாம் பறிபோகிறது.

இதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இவற்றிற்கு எல்லாம் அடிப்படை நம் மனமும், எண்ணமும், உணர்வுகளும், செயல்களுமே ஆகும். எனவே அதற்குத் தகுந்தாற் போல, நம இயல்புக்குத் தகுந்தாற் போல வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, இயற்கையோடு ஒன்றி, இறையாற்றலை உணர்ந்து மெய்யறிவு பெற்று மனநிம்மதியோடு வாழ வாழ்த்துகிறேன்.

நான் வேண்டிக் கொள்வதெல்லாம், எல்லா மக்களும் ஆரோக்யம், சக்தி, உற்சாகம், சந்தோஷம், மனநிம்மதி பெற்று, நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வேண்டும் என்பதே.வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக