மொத்தப் பக்கக்காட்சிகள்

12/08/2015

கண்ணாடி சொல்லும் 3 பாடங்கள் !

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...
(தெரிந்துகொள்வோம் )

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
 
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
 
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?
 
இல்லையே…!
 
அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
 
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்.
Thanks to S.Nataraj








12/04/2015

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில்-

அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ !

50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.

நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..


Thanks to Sountha!

11/21/2015

திண்டுக்கல் தனபாலன்- பிரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள் !



1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடவுங்கள். நீங்கள் போவது கேன்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங்கில் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரெஜிஸ்டர் புக்கோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாஸின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடவுங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள். முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாஸுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.


திண்டுக்கல் தனபாலன்

11/14/2015

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள்..!!

இந்த பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள்..!!

1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப் படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே இருப்பது மரங்களைப் போலவே மனிதர்களுக்கும் ஆபத்து.

2. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.

3. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்.

4. பெரும்பாலான நட்புகளின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு வேலையைத் தொடங்கும் போதும் மூன்று கேள்விகள் கேளுங்கள்.
இதை ஏன் செய்கிறேன்??.
இந்தச் செயலின் விளைவுகள் என்ன?
இதை வெற்றிகரமாகச் செய்வேனா?

6. அச்சம் எப்போது நெருங்குகிறதோ, அப்போதே அதை எதிர்த்து, அடித்துக் கொன்று விடுங்கள்.

7. ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்.

8. காற்று வீசும் திசையில்தான் மலரின் வாசனை பரவும்.
ஆனால் உங்கள் நல்ல இயல்புகள் எல்லாத் திசையிலும் பரவும்.

9. உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ, அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.

10. உங்கள் குழந்தைகளை முதல் ஐந்து வயது வரை கொஞ்சிக் கொஞ்சி வளர்த்துங்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்புக் காட்டுங்கள்.
அதற்குப் பிறகு நண்பர்களாய் நடத்துங்கள்.

11. எல்லா இடங்களிலும் மதிப்பைப் பெற்றுத் தருவது கல்வி. இளமையின் அழகைக் காட்டிலும் உயர்ந்தது கல்வியின் மதிப்பு.

12. பார்க்க முடியாதவர் முன்னால் நிலைக் கண்ணாடி எப்படி பயன்படாதோ அது போல் முட்டாள்களுக்குப் பரிசளிக்கும் புத்தகங்களும் பயன்படாது.

13. ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம். முட்டாள்களை அவர்கள் முட்டாள் தனத்தைப் பொருட்படுத்தாததன் மூலம் வெற்றி கொள்ளலாம். அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம்.

14. அற்பமான ஜந்துக்களிடம் கூட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்.

15. அரசர் எளிய குடிமகன் போல் வாழ்கிற தேசத்தில், குடிமக்கள் அரசர்களைப் போல் வாழ்வார்கள்.

16. தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை!

காற்றுக்கு பெயர்கள் !!!

 



தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்!


வடக்கிலிருந்து வீசினால் --வாடை !


கிழக்கிலிருந்துவீசினால் ---கொண்டல் !


மேற்கிலிருந்து வந்தால் ---மேலை!


திசை பொருத்து காற்றின் பெயர்கள்:


(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று!


(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று !


(3) கிழக்கிலிருந்துவீசுவது கொண்டல்க் காற்று !


(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று !


காற்று வீசும் வேகம் பொருத்து 

பெயர்கள்:


(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"


(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"


(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"


(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"


(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"


(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"


(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"


(8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"