தமிழ்ச் சினிமா துறையில் ‘இலட்சிய நடிகர்’
என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல் நலக்
குறைவால் இன்று காலமானார்.[24.10.2014] அவருக்கு வயது 86.
எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆரம்பத்தில் நாடக
நடிகராக இருந்து பிறகு சினிமாவுக்கு வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இவரும் ஒரு முன்னணி
கதாநாயகனாகவே இருந்தார்.
1947-ம் ஆண்டு வெளியான ‘பைத்தியக்காரன்’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘குல தெய்வம்’, அம்மையப்பன்,
‘முதலாளி’, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘சிவகங்கை சீமை’, ‘ராஜா
தேசிங்கு’, ‘குமுதம்’, ‘முத்து மண்டபம்’, ‘ஆலயமணி’, ‘காஞ்சித் தலைவன்’,
‘பூம்புகார்’, ‘மணி மகுடம்’, ‘குங்குமம்’, ‘பச்சை விளக்கு’, ‘சாரதா’, ‘பார்
மகளே பார்’, ‘கை கொடுத்த தெய்வம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த ‘முதலாளி’ படம் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்றது.
1960-ம் ஆண்டில் ‘தங்கரத்தினம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.
மிக நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல்
இருந்த எஸ்.எஸ்.ஆர்., 1980-ல் நடிகர் மோகனுடன் ‘அன்பின் முகவரி’ என்ற
படத்தில் நடித்தார். இதன் பின்பு டிவி சீரியல்களிலும் நடித்திருந்தார்.
திராவிட
முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டதில் இருந்தே அதில் தீவிரமாகப்
பணியாற்றியவர் பேரறிஞர் அண்ணா மீதி மிகுந்த பாசம் வைத்திருந்தவர். 1962-ம்
ஆண்டு தி.மு.க.வின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு
செய்யப்பட்டவர். இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு நடிகர் எம்.எல்.ஏ.வாக
தேர்வானார் என்றால் அது எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான்.
பின்னர் 1970-1976 வரையிலும் பாராளுமன்றத்தின் மேல் சபையில் தி.மு.க.வின் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.
பின்பு தி.மு.க.வில் இருந்து விலகி
அ.தி.மு.க.வில் இணைந்தார். 1981-ல் அ.தி.மு.க. சார்பில் ஆண்டிப்பட்டி
தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அப்போது அரசு சிறு சேமிப்பு
திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார்.
பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதை
கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். ”தமிழ் மொழியின் உச்சரிப்பை இவரைப்
பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அண்ணா அவர்களே பாராட்டியதுபோல
திரைப்படங்களில் இவர் பேசும் தமிழ், அவ்வளவு அழகாக இருக்கும்.
திராவிட இயக்கத்தின் மீது கொண்ட பற்று
காரணமாக தான் நடித்தவரையிலும் எந்தப் படத்திலும் கடவுளர் வேடங்களில்
நடித்ததே இல்லை எஸ்.எஸ்.ஆர். அது போன்ற வேடங்கள் வந்தபோதெல்லாம் அது தான்
கொண்டிருக்கும் கொள்கைக்கு விரோதமானது என்று ஒதுக்கித் தள்ளினார். இதனாலேயே
‘இலட்சிய நடிகர்’ என்ற பட்டப் பெயரோடு அழைக்கப்பட்டார்.
86
வயதாகிய நிலையில் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு சில தினங்களுக்கு முன்
திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மயிலாப்பூரில் உள்ள
மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருடைய குடலில் நோய் தொற்று
மற்றும் சளித் தொல்லைகள் இருந்தன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தாலும் நேற்று அவரது உடல்நிலை
மிகவும் மோசம் அடைந்தது. உடனடியாக எஸ்.எஸ்.ஆர். அவசர சிகிச்சை பிரிவிற்கு
மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் பெபருத்தப்பட்டு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அந்தச் சிகிச்சைகள் பலனளி்ககாமல் இன்று
காலை 11 மணியளவில் அவர் காலமானார்.
எஸ்.எஸ்.ஆர். மூன்று திருமணங்கள் செய்தவர். இவருடைய முதல் மனைவியின்
பெயர் பங்கஜம். இரண்டாவதாக தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த விஜயகுமாரியை
திருமணம் செய்தார். இவர்களு்ககு ஒரு மகன் உண்டு. சில ஆண்டுகள் கழித்து
இருவரும் பிரிந்துவிட்டனர். மூன்றாவதாக தாமரைச்செல்வியை மணந்தார்.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு..!
இலட்சிய நடிகரின் மரணத்திற்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.
Thanks to tamilcinetalk.com
Thanks to tamilcinetalk.com