மொத்தப் பக்கக்காட்சிகள்

4/25/2012

சிதம்பரம் நடராஜர் கோவில் - Chidambaram Nataraja Temple


சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 

இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம். 

சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.  108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே. 
மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும். 
 1) சிதம்பரம் - கனகசபை
 2) திருவாலங்காடு - இரத்தினசபை
 3) மதுரை - வெள்ளிசபை
 4) திருநெல்வேலி - தாமிரசபை
 5) திருக்குற்றாலம் - சித்திரசபை.

இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.
சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.
கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது.  இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.
ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.

தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.
நிருத்தசபை  - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.
கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன. 
மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம். 
மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு.  500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். 
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன. 
தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.  

1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்

2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,

3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்

4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,

5)ஐந்தாம் பூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.

6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.

எப்படி செல்வது?
1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.

2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் சில ரயில்கள் 6701, 6702, 2794, 6175, 6854, 6853.

3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 195 கி.மீ தொலைவில். 

4/05/2012

நிலையானது மரணம்.. நிலையில்லை வாழ்க்கை


மரணம்..

எல்லோர்க்கும் நிச்சயம்.
ஆயினும்
உற்றாருக்கு வாய்த்ததும்
அலறுகிறது மனம்..
ஏன்..?

இறக்கத்தான் மனிதன்
படைக்கப்பட்டான் எனில்
இடையில் பாசம் எதற்கு
பற்று   எதற்கு..?

நிலையின்மை பற்றி
நிதம் நிதம் பேசினாலும்
நட்பின் மரணம்
நம்மை நிலை குலைப்பதேன்..?

அண்ணா
தம்பி
ஐயா
அப்பா
நண்பனே
அம்மு
எல்லாம் சட்டெனமாறி

சடலம் என்னும்
பொதுப்பெயர் பெறுகிறோம்..

சலனமிருந்தால் சந்தோஷம்
சடலமானால் துக்கம்..

மனிதன்
உயர்பிறவிதானா..?



சிலகாலம் வந்தோம்
சிலகாலம் சிரித்தோம்
சிலகாலம் அழுதோம்
சிலகாலம் மகிழ்ந்தோம்

ஒருநாளில் மறைகிறோம்.
மாயம்தான் வாழ்க்கை எனில்
மனிதன்
உயர்பிறவிதானா..?

சென்றவரெல்லாம் திரும்புவதில்லை
இருப்பவர் அவருடன் செல்வதில்லை

இன்று இறந்தவருக்காய்
நாளை போகுபவர் அழுகிறார்கள்..
மனிதப்பிறவி
உயர்வானது தானா..?

நிலையில்லை வாழ்க்கை
நிலையில்லை மகிழ்ச்சி
நிலையில்லை அழுகை
நிலையில்லை சலனம்
நிலையில்லை ஜனனம்

நிலையானது மரணம்..

மனிதன் உயர்வானவன் ..

மரணம்

அவனினும் உயர்வானது..!


3/27/2012

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.



பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.




மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...


தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வ...ரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!


01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

நன்றி ராவணன் தமிழன்
See More