கடல் கடந்து, கண்டம் கடந்து, கண்டெய்னரில் தன் உயிரேயே பணயம் வைத்து பணத்திற்காக, தன்னை சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காக செல்லும் சகோதரர்களுக்கு ஒரு சிந்தனை கட்டுரை.
பணம்
பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும்,பணம் பாதாளம்வரை பாயும், பணமில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வார்த்தைகள் மூலம் பணம் பணம் என்று நாம் மனமும், அது எங்கு கிடைத்தாலும் ஓட,ஆட வைக்கிறது.பணம் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் மாயப்பொருள்தான் அதில் சந்தோசம் இல்லை,ஆனாலும் அதிகப்படியான “பணம்” நம்மை மகிழ்ச்சிபடுத்துமா அல்லது நம் மகிழ்ச்சியை குதறுமா என்பதுதான் கேள்வி....அலசிபார்ப்போமே..
தன்னிறைவு
தன்னிறைவு என்ற வார்த்தையில் உள்ள அர்த்தத்தை நாம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும், பட்டுக்கோட்டையில் ஒரு நிலமும்,சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் ஒரு பலமாடி கட்டிடமும் இருந்தால்தான் தன்னிறைவு என்று எண்ண கூடாது,ஒருவர் உயிர்வாழ என்ன அடிப்படை தேவைகள் அது எந்த சிரமும் இல்லாமல் பூர்த்தி ஆகுதோ அதனைதான் தன்னிறைவு என்று கொள்ளவேண்டும்.அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது. நிம்மதி போய் ஆற்றுப் பாலத்தில் மனதை ஆற விட்டவங்களும் உண்டு
ஒரு ஊரில் நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர், ஒரு சிறிய வீட்டைக்கட்டி அமைதியாக வாழ்ந்துவந்தார், நிம்மதியான தூக்கமும் இருந்தது, திடீரென அவருக்கு ஒரு பணக்காரர் வந்து , இறைவன் என் கனவில் வந்து இந்த வைரக்கல்லை உங்களிடம் கொடுக்க சொன்னார், அமானிதத்தை ஒப்படைப்பது என் கடமை எனவே இதை ஏற்றுக்கொள்ளுங்கள்,மனிதனுக்கு தலை,கால் புரியவில்லை சந்தோசமாக பெற்றுக்கொண்டார் ஆனால் அதனை பெற்றுக்கொண்ட நாள் முதல் அதனை எப்படி பாதுகாப்பது என்ற சிந்தனையிலயே அவர் தூக்கம் மறந்து நிம்மதி இழந்து பேயாக மாறிப்போனார்..இவ்வாறுதான் நாம் வாழ்க்கையும் கொடுத்ததை கொண்டு நிறைவடையாமல், மேலும் எடுத்து கொள்ள நினைக்கிறது, நிம்மதியை அணைக்கின்றது,ஆகையால் தன்னிறைவு தன்னம்பிக்கை தரும் வாழ்க்கையை செழிப்பாக்கும்.
வாழ்நாள் சாதனை
வாழ்க்கையில் நாம் என்ன சாதித்து இருக்கிறோம் என்பதற்க்கு நம் அக்கவுண்ட் பேலன்ஸ்/ நிலம் / வீடு வாசல்/ கார் போன்றவற்றைதான் அளவு கோளாக எடுத்து இருக்கின்றோம், யாரவது நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், பொதுநலப் பணிகள் போன்றவற்றை அளந்து வாய் பிளந்து இருப்போமென்றால் மிகக்குறைவுதான் மனிதனுடைய வாழ்க்கை என்னவோ அதிகபட்சமாக 65 வயதுவரைதான், அதுவும் இப்போதெல்லாம் 35 வயசுக்கு பிறகு படுக்கையில் எழுப்பிவிடுவதற்க்குட ஒர் ஆள் தேவைபடும் அளவிற்க்கு நோய்கள் மொய்க்கின்றன,வாலிபத்தை தொலைப்பதும் வாழ்வின் தோல்வியே
பணம் என்ற உப்புத் தண்ணிரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்க்காக தேடலை நிறுத்திவிட்டு ஊரில் வெட்டியாக சுற்றவேண்டும் என்பதில்லை..எதற்க்கும் ஒரு எல்லையை வரையறை செய்து கொள்ளவேண்டும்,உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதை கண்டெறிய வேண்டும்..அதுவே நம் இலக்காக இருக்கவேண்டும்.
நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பொருள் தேடல் என்ற கடலில் நம்மையும் தொலைத்துவிட்டு, வாழ்க்கையும் தொலைத்து விடுகிறோம்.. ஒருவர் பொருள் தேட ஜப்பானுக்கு சென்று 8 வருடங்கள் கழித்து வந்தார்.. பணம் அவரிடம் வந்தது..ஆனால் வாழ்க்கை விலகி ஓடிவிட்டது...…ஆனால் அந்த பணம் அவரின் இழந்த வாழ்க்கையை திருப்பி தர முடியவில்லை
ஆகையால் இந்த போரை நடத்தி கொண்டிருக்கவேண்டியதுதான், அந்த போரில் வெற்றிபெற உதவுவது உழைப்பு ..உழைப்பால் பணம் வரவு மட்டும் இல்லை, உடலும் ஆரோக்கியமடைகிறது....உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மன ஆரோக்கியம் முக்கியம் ,அந்த மன ஆரோக்கியத்திற்க்கு மருந்து மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்தான் பணமல்ல….