மொத்தப் பக்கக்காட்சிகள்

12/06/2024

எம்.ஜி.ஆரிடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கம். ஏவிஎம் சரவணன் !

 

சிலர், ஒருசிலரிடமிருந்து எதாவது ஒரு நல்ல பழக்கத்தை வாழ்க்கையில் கற்றுக்கொள்வார்கள் .... இப்படித்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம் குறித்து ஏவிஎம் சரவணன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில்....

'அன்பே வா ' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையான காலை 11 மணி அளவில் ஒரு மெல்லிய பசி இருக்கும். அந்த வேளையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும், டீ மற்றும் வடை கொடுப்பது வழக்கம். நாங்கள் அதை ‘குரங்கு டிபன்’ என்போம். அன்றும் அப்படித்தான் கொடுக்கப்பட்டது. அப்போது என் அருகில் இருந்த எம்.ஜி.ஆர்., ‘சரவணன்.. நீங்க வடையை உங்கள் ரூம்ல வச்சி சாப்பிடுங்க’ என்றார்.

நான் என்ன ஏதென்று புரியாமல், ‘என்ன சார்.. என்னாச்சி?’ என்றேன்.

‘ஒரு பொருளை எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும். இல்லையென்றால் தனியாக வைத்து சாப்பிட வேண்டும்’ என்றார்

.

நானோ, ‘இல்லை சார். எல்லோருக்கும் கொடுத்தாச்சே..’ என்றேன்.

எம்.ஜி.ஆர். மேலே கையைக் காட்டினார். அங்கு ஒரு லைட்மேன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘அவருக்கு நீங்க டீ, வடை கொடுக்கலை’ என்றார்.

எல்லாருக்கும் கொடுத்தாச்சான்னு பார்த்துட்டு சாப்பிடணும் என்று எம்.ஜி.ஆர். சொன்ன அந்த வார்த்தை, இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் வெளியில் செல்வதற்காக புறப்படும்போது, என்னுடைய டிரைவரிடம் கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கச் சொல்வேன். அந்தப் பழக்கம் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வந்தது என தெரிவித்தார்..

மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் !

 

முப்பது வயதாகியும் திருமணத்திற்கு வரன் கிடைக்காத என் நண்பனுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்கள்.

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து அவனை சென்னையில் பார்க்கும் பொழுது புலம்பித் தள்ளி விட்டான். அவன் மனைவி அவனை விட ஒரு வருடம் பெரிய பெண்ணாம், இவன் கோதுமை நிறம் அவன் மனைவி மாநிறத்திற்கும் சற்று கம்மி.

ச்சே.. எல்லாம் இந்த ஜாதகம் ஜோசியம் இதனால வந்தது.. எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குறதுனால வேற எந்த பொண்ணும் கிடைக்கல..

"சரி விடுடா.. ரிலாக்ஸா மேரேஜ் லைப்பை ஓட்ட பாரு.." என்றேன். என்னால் வேறு என்ன சொல்ல முடியும்.

மூன்று மாதங்களுக்கு பிறகு அவனை சந்திக்க குடும்பத்துடன் சைதாபேட்டையில் இருந்த அவனுடைய அபார்ட்மெண்ட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி இருவருக்குள் செல்ல சீண்டல்கள் போன்ற அன்னியோன்யம் தெரிந்தது. என் மனைவியும் அவனுடைய மனைவியும் சேர்ந்து சமையல் வேலை செய்து கொண்டிருக்க, என் மகன் டிவி பார்த்து கொண்டிருந்தான், நானும் அவனும் சில பொருட்களை வாங்க அருகிலிருந்த கடைக்கு சென்றோம்.

என்னடா மச்சான்.. அன்னைக்கு பிடிக்கல'ன்னு சொன்ன.. இப்ப பார்த்தா அப்படி தெரியலையே..

நிஜம் தான்'டா..

பிறகு அவனே வாய் திறந்தான். திருமணத்திற்கு பின் மூன்று மாதங்கள் ஆன பிறகும் கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை. இருவருக்குள்ளும் 'ஆம்' 'இல்லை' என்று ஒரு வார்த்தை பதிலுடனே வாழ்க்கை சென்று கொண்டிருந்திருக்கிறது.

இவர்கள் போர்ஷனுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டி இதை கவனித்திருக்கிறார். ஒரு நாள் இவன் மனைவியிடம் விசாரிக்க, அவனுடைய மனைவியும் "அவரு விலகி போனா நான் என்ன செய்யுறது?.." என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார்.

அந்த பாட்டிக்கு இவனை, இவனுக்கு திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே தெரியும் என்பதால் இவனை அழைத்து "ஏன்டா.. பொண்டாட்டியை வெளிய கூட்டிகிட்டு போறது தான?.." என்று கூறியிருக்கிறார்.

இவன் அதற்கு "இந்த வாரம் ஞாயித்துக் கிழமை மாயாஜால் அழைச்சுக்கிட்டு போறேன்.." என்று கூறியிருக்கிறான்.

அந்த பாட்டி அதற்கு இவனை கபாலீஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து சில நாட்களுக்கு செல்லும்படி கூறி, அவருக்கு தெரிந்த அர்ச்சகர் மூலமாக சில பூஜைகளையும் புக் செய்து கொடுத்திருக்கிறார். அதுவும் அவருடைய சொந்த செலவில். அந்த பாட்டி தான் இவர்கள் இருக்கும் போர்ஷனின் உரிமையாளர் என்பதால் இவனால் மறுக்க முடியவில்லை.

சரிடா.. அதுக்கும் உன் மனசு மாறுனதுக்கும் என்னடா சம்பந்தம்..

இல்லடா.. தொடர்ந்து மூனு ஞாயித்து கிழமை அங்க போனோம்.. ஒரு பொண்ணு அவ்வளவு லட்சணமா இருந்தா, ஆனா கோவில் வாசல்'ல முட்டி போட்டு கண்ணை மூடிக்கிட்டு மடிப்பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தா.. அவளுக்கு பக்கத்துல அவளோட புருஷன் கைக்குழந்தையோட நிக்குறான்.. பார்த்தாலே கொஞ்சம் வசதியானவங்க தான்னு தெரியுது.. அந்த பொண்ணு ரெண்டு கையில பிடிச்சிக்கிட்டு இருக்குற புடவை முந்தானையில சில்லறை காசுங்களும் அஞ்சு பத்து ரூபா நோட்டெல்லாம் இருந்தது.. இவங்களுக்கும் ஏதோ பிரச்சினை இருக்குன்னு தான அர்த்தம்.. அங்க நாங்க போகும் போது நிறைய கல்யாணம் நடந்துகிட்டு இருக்கும்.. ஒன்னு மாப்பிள்ளை சுமாரா இருப்பான் பொண்ணு சூப்பரா இருக்கும்.. பொண்ணு சுமாரா இருந்தா மாப்பிள்ளை நல்லா இருக்கான்.. அதுவும் இல்லாம பொண்ணுங்களை புடைவையில பார்க்கும் போது ஏதோ ஒரு நிறைவா இருக்குடா.. என் மனைவி கூட இந்த நைட்டி குர்தா எல்லாத்தையும் விட புடவையில உறுத்தாத அழகோட இருக்காங்க.. என்னமோ அப்படியே எல்லாம் மாறி போயிடுச்சு..

கடையிலிருந்து அவனுடைய வீட்டிற்கு திரும்பி சென்றவுடன் நான் நேராக அந்த பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். எனக்கும் அந்த பாட்டியை ஓரளவிற்கு தெரியும்.

சிறிது நேர பேச்சுக்கு பின் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன். "இப்படி பண்ணா மனசு மாறிடுவான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?.." என்றேன். அதற்கு அந்த பாட்டியின் கணவர் தன் நடுங்கும் குரலில் "கண்ணை மூடி சாமி கும்பிடும் போது நம்ம மனைவி ரொம்ப லட்சணமா தெரிவாங்க'ப்பா.." என்றார் கிண்டலாக.

சும்மா சொல்லாதீங்க..

அந்த பாட்டி உடனே "மாலுக்கு தியேட்டருக்கு எல்லாம் போனா, ஆம்பளை ஒன்னு செலவை பத்தி கவலைப்படுவான்.. இல்லைன்னா அடுத்தவன் பொண்டாட்டியை பார்த்து வயித்தெரிச்சல் படுவான்.." என்றார். மேலும் "அதே அடிக்கடி கோவிலுக்கு போய் பாரு.. அங்க வர்ற பெரும்பாலான தம்பதிகள் அழகா இருந்தாலும் சரி, சொத்து சுகம் இருந்தாலும் சரி, இங்க பிரச்சினை இல்லாத மனுஷங்களே இல்லைன்னு புரியும்.. அதுமட்டுமில்லாம வெயில் நேரத்துல பொண்ணுங்க புடவை கட்டிக்கிட்டு பளிச்சுன்னு முகம் தெரிய கூட வரும் போது, எல்லா ஆம்பளைங்களுக்கும் அவங்க மனைவியை ரொம்ப பிடிக்கும்.." என்றார்.

அந்த குறும்புக்கார தாத்தா கிண்டலாக "ஈவ்னிங் கற்பூர வெளிச்சத்துல அம்மனை தரிசிச்சிட்டு அப்படியே திரும்பி அந்த மங்கலான கருவறை வெளிச்சத்துல, உன் பக்கத்துல நிக்குற மனைவியை பாரு.. ரெண்டு முகமும் ஒரே மாதிரி தெரியும்.." என்றார்.

என் நண்பனும் 2015-இல் வீட்டை காலி செய்து கொண்டு ஊரப்பாக்கம் சென்றுவிட்டான். என் நண்பனுக்கு இப்பொழுது ஆறாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த பாட்டியும் தாத்தாவும் ஒருவரை தொடர்ந்து இன்னொருவர் காலஞ்சென்று நான்கு ஆண்டுகளாகின்றது.

ஆனால் இப்பொழுது அவர்களை பற்றி நினைத்தாலும் என் நண்பன் கண் கலங்குவான். அந்த தாத்தா இவனிடம் அடிக்கடி கூறுவாராம் "உனக்கான வீட்டுத் தெய்வம் உன் மனைவி தான்.. அவ நியாயமான விஷயங்களுக்கு அழுதா உனக்கு வாழ்க்கையில நிம்மதியும் ஏற்றமும் இருக்காது.." என்பாராம்.

அந்த பாட்டி அவனுடைய மனைவியிடம் "வீட்டு ஆம்பளைக்கு நம்மள விட்டா வேற யாரும்மா இருக்கா.. எல்லா பொண்டாட்டிகளுக்குமே அவங்க புருஷன் தான முதல் குழந்தை.." என்பாராம்.

11/30/2024

நடிகர் நாசர் சிவாஜியுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

 

இந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்… அப்போ சிவாஜி சார் இப்படி சொல்லிட்டார்… நாசர் பகிர்வு…

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகில் மேல்பாக்கம் என்ற ஊரில் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் நாசர். இவரது முழு பெயர் நாசர் முகமது ஹனீப் என்பதாகும். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் நாசர். நடிப்பது மட்டுமல்லாமல் நாசர் திரைக்கதை எழுதுதல், வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.

சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் நாசர் puc படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு குடிப்பெயர்ந்தார்.. சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயின்று நடிப்புத் துறையில் பட்டம் பெற்றார் நாசர். பின்னர் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்பு பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினை கண்ட கே. பாலச்சந்தர் ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார் அன்று தொடங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நாசர். சிறிது காலம் விமானப்படையிலும் பணியாற்றினார் நாசர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல தமிழ் சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நாசர். மணிரத்தினத்தின் நாயகன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் சினிமாவில் திருப்புமுனையை பெற்றார் நாசர். கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார் நாசர்.

90களில் பிற்பகுதியில் 2000களில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார் நாசர். ‘ரோஜா’, ‘தேவர் மகன்’, ‘பம்பாய்’, ‘குருதிப்புனல்’, ‘தேவதை’, , ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘மகளிர் மட்டும்’, ‘படையப்பா’, ‘அவ்வை சண்முகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’,’போக்கிரி’, ‘தனி ஒருவன்’, ‘சிங்கம்’ போன்ற படங்கள் இவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

இது தவிர ‘பாப்கார்ன்’, ‘மாயன்’, ‘தேவதை’, ‘அவதாரம்’ போன்ற திரைப்படங்களில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். நாசர் தனது நடிப்பிற்காக கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது, சிறந்த எதிர்மறை நடிகர், சிறந்த துணை நடிகர் என தமிழ்நாடு அரசு விருதுகளை வென்றுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் நாசர் சிவாஜியுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.. அவர் கூறியது என்னவென்றால் தேவர் மகன் படத்தில் சிவாஜி சாரோட மகனா நடிச்ச அப்போ சிவாஜி சாரை திட்டுற மாதிரி ஒரு சீன் இருக்கும். அந்த சீன்ல எனக்கு சிவாஜி சார் முகத்தை பார்த்து எனக்கு திட்றதுக்கு மனசே வரல. அந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ சிவாஜி சார் என்னை கூப்பிட்டு என்னப்பா நடிக்க ரொம்ப கஷ்டமா இருக்கா. அப்பனை திட்றதுக்கு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? உனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்ல திட்டு நல்ல மனசார திட்டு அப்படின்னு சொல்லி எனக்கு புரிய வச்சு என்ன நடிக்க வச்சாரு சிவாஜி சார் என்று பகிர்ந்துள்ளார் நடிகர் நாசர்.

தமிழச்சி கயல்விழி!

அம்மா என் வீட்டுக்காரரை எப்படி கொலை செய்வது !

 

அம்மா என் வீட்டுக்காரரை எப்படி கொலை செய்வது !

ஒரு வீட்டில் ஒரு கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர் !

ஒரு நாள் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போய், கோபமாக அம்மா என் வீட்டுக்காரருடன் என்னால் இனிமேல் வாழ முடியாது,தினம் பிரச்னை , நிதம் சண்டை . என் நிம்மதியே போச்சு.

எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டாம் ! அவன் முகத்தையே பார்க்க பிடிக்கலை அதனால் அவனை கொலை செய்து விட முடிவு செய்து விட்டேன் போலீசில் மாட்டி கொள்ளாத மாதிரி ஒரு நல்ல திட்டமா சொல்லுங்க என்றார்;

அதற்கு அவரின் அம்மா மகளின் பிடிவாத குணம் தெரிந்ததால் , சரி நான் உனக்கு ஒரு நல்ல யோசனை சொல்கிறேன் ; ஆனால் நான் சொல்கிறபடி நீ நடக்க வேண்டும் .

கவனமாக கேள் !

1. இனி வீட்டில் வெளியில் எங்கும் அவரிடம் சண்டை போட கூடாது ! அப்பத்தான் பார்ப்பவர்கள் இவர்கள் மிகவும் அன்பான தம்பதியர் என்று கருதுவார்கள் !

2. எப்பொழுதும் உன் கணவரிடம் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்ள வேண்டும் .

3. நல்ல ருசியான உணவுகளை சமைத்து தினம் கொடுக்க வேண்டும் .

4. அவர் வீட்டு சொந்தங்களை அன்பாகவும் அக்கறையுடனும் நடத்த வேண்டும் .

5. அவரை கேட்டு தான் எந்த செலவும் செய்ய வேண்டும் ;

இது எல்லாம் தினம் செய் கூடவே நான் ஒரு மருந்து தருகிறேன் இரவு உன் கணவர் தூங்கும் முன் அதை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து கொடு ! ரெண்டு மாதம் யாருக்கும் எந்த சந்தேகம் வராது உன் வீட்டுக்காரர் இறந்து விடுவார் என்று சொல்ல !

சரிம்மா அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போனார்!

இப்படியே ஒன்னரை மாதம் ஓடியது ! திடீர் என்று அம்மாவை பார்க்க மகள் ஓடி வந்தார்.

அம்மாவிடம் வந்து அம்மா நீங்க சொன்ன மாதிரி கடந்த ஒன்னரை மாதமாக நடந்து கொண்டு இருக்கேன் ! ஆனால் அவர் இப்பொழுது முற்றிலும் அன்பாக மாறி விட்டார் ! எனக்கும் அவர் மேல் அன்பும் பாசமும்,காதலும் அதிகம் ஆகி விட்டது !

அதனால் அவரை கொல்லும் எண்ணம் இல்லை . தயவு செய்து நீங்கள் கொடுத்த விஷத்திற்கு மாற்று மருந்து கொடுங்கள் என்று சொல்ல !

அம்மா சிறிது கொண்டே சொன்னார்கள் கவலை படாதே நான் வெறும் மூலிகை பொடி தான் கொடுத்தேன் அது விஷம் இல்லை !

போய் நிம்மதியுமாக வாழ்க்கையை நடத்து !

அண்ணாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்ற எம்.ஜி.ஆர்.!

 

அண்ணாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்ற எம்.ஜி.ஆர்.!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்த நாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவானது. அது உங்கள் சொந்தப் பணமா? அல்லது அரசு பணமா? அல்லது உங்கள் கட்சி செலவா?” என்று கேட்டார்.

அதற்கு அண்ணா அவர்கள் சபையைச் சுற்றிப் பார்த்து, “உங்களுடைய இந்தக் கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றவுடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.

மறுநாள் சட்டப்பேரவைக் கூடியதும் அதே கேள்வி நேரத்தில், “நேற்று நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்” என்று அவர் மீண்டும் கேட்டார்.

அண்ணா அவர்கள், “எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை. தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் அந்தச் செலவை ஏற்கவில்லை.

செலவான தொகை ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய். அதை மொத்தமும் இங்கே, இதோ சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிற என் அன்புத் தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை, எனக்காக, என் சிகிச்சைக்காக அவரே ஏற்றுக் கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ.

நேற்று அவர் அவைக்கு வரவில்லை. அவர் முன்னால் இந்த விளக்கத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை” என்றவுடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டடம் தாண்டிக் கேட்டது.

வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கிச் செதுக்கி தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

பட்டினியில் கிடந்தபோதும் சரி, பணம் மழைபோல அவர் வாழ்வில் கொட்டிய போதும் சரி தன்னிலை தவறாதவர் எம்.ஜி.ஆர்.

அண்ணா அவர்களுக்கான சிகிச்சை தொகையை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டதாக ஒரு நாளும், ஒரு இடத்தில் கூட அவர் சொன்னதில்லை. அண்ணா அவர்கள் சொன்ன பிறகே இந்த உண்மை நாட்டுக்குத் தெரிந்தது.

– நன்றி